வரலாற்றில் ஒரு வள்ளல் காதிர் முகைதீன் மரைக்காயர்
கொடைத் தன்மையில் சிறந்தது, கல்விக் கொடையாகும். இஸ்லாத்தின் நான்காம் கலீஃபாவான ஹளரத் அலீ (ரலி) அவர்கள், "எனக்கு ஓர் எழுத்தைக் கற்றுத் தந்தவருக்கு நான் அடிமையாவேன்" என்று கூறிய முத்தான வரிகள், கல்வியின் சிறப்பைப் பறை சாற்றும். இஸ்லாத்தின் இது போன்ற மகத்தான நற்போதனைகளை மனத்துட் கொண்டு, கல்விக் கொடைதான் சிறந்ததென்றுணர்ந்து பல கல்வி நிறுவனங்கள் உருவாவதற்குக் காரணமான வரலாற்று நாயகர் ஜனாப் காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களாவார்கள்.
அதிராம்பட்டினத்தில் 1835 ஆம் ஆண்டில் பிறந்து, பெருந்தன வணிகராகிப் பொருளீட்டித் தாம் திரட்டிய பொருளைக் கல்விக்கென்றே கொடையாக வழங்கிப் பெருமை பெற்றவர், வள்ளல் காதிர் முகைதீன் அவர்களாவார். தாம் மட்டுமன்றித் தம் உடன்பிறந்தோரையும் இக்கொடைக்குத் துணை நிற்கச் செய்து, 1901 ஆம் ஆண்டில் ரூபாய் 85 ஆயிரம் மதிப்புள்ள நன்செய், புன்செய் நிலங்களைக் கல்விக்காக அற்பணித்தார்கள் இந்த வள்ளல் பெருமான்.
அன்று தொடங்கப் பெற்ற 'எம்.கே.என். ட்ரஸ்ட்' என்ற அறக்கட்டளை, இன்று வேர் விட்டுக் கிளைகளைப் பரப்பி, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களாகப் பரிணமிக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன் - 1901 இல் - 'அல்மத்ரசத்துஸ் ஸலாஹிய்யா' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கல்விப் பணி, அதன் பின்னர் 1949 இல் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி என்றும், 1955 இல் காதிர் முகைதீன் கல்லூரி என்றும், 1982 இல் காதிர் முகைதீன் மகளிர் மேல்நிலைப் பள்ளி என்றும் கல்விக் கிளைகளைப் பரப்பி, அதிரையின் புகழைப் பரப்புகின்றது என்றால், இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவான அந்தக் கொடை வள்ளலை நாம் எப்படி மறக்க முடியும்?
இன்றுவரை அதிரையில் இருக்கும் பள்ளிவாயில்கள் பலவற்றுக்கு மின் கட்டணத்தைச் செலுத்தும் பொறுப்பை நிறுத்தாமல் செய்து வருவதும் இந்தக் காதிர் முகைதீன் வள்ளல் நிறுவிய எம்.கே.என். ட்ரஸ்ட்டுதான் என்றால் மிகையாகாது.
கல்விக் கொடை வள்ளலாக வாழ்வாங்கு வாழ்ந்த காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்கள், 1905 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று இவ்வுலகில் தம் வாழ்வை முடித்துக்கொண்டு, மறுவுலகிற்கான பெரும் பேறுகளைப் பெறச் சென்றுள்ளார்கள்.
Source: அதிரை கலைக் களஞ்சியம்
* படத்தில் ஏழாவது நபராக இருப்பவர் கம்பெனியப்பா என்ற சி.மு முகம்மது சேக்காதியார் அவர்கள்.
டிரஸ்டின் குடும்பம் அல்லாத வெளி உறுப்பினர்களில், கம்பெனியப்பாவும் ஒருவராக நியமானம் செய்யப்பட்டிருந்தார்கள்.
இன்னொருவரின் பெயர் தெரியவில்லை; அறிந்தவர் பின்னூட்டமிடவும்!
Home
»
அதிரை அஹ்மது
»
அதிரை கலைக் களஞ்சியம்
»
காதிர் முகைதீன் மரைக்காயர்
» வரலாற்றில் ஒரு வள்ளல் : காதிர் முகைதீன் மரைக்காயர்
5 comments:
அல்ஹம்துலில்லாஹ்.....வளர்கிறது!
பொக்கிஷங்களை வெளிக்கொண்டேயிருங்கள், இன்று(ம்) எனக்கு புதுத் தகவல்.
அபு இப்ராஹீம் காக்கா நல்லா உற்ச்சாகம் தர்ரகல்
அபு இப்ராஹீம் காக்கா நல்லா உற்ச்சாகம் தர்ரகல்
நல்ல ஒரு தகவல் படித்த இடத்தின் அருமையும் புகழும் தெரியவரும்போது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. உண்மையில் இதன் வரலாறு படிக்கும் காலத்தில் கூட அறிந்து இருக்கவில்லை காரணம் தற்போழுது அங்கு உள்ள மக்களின் கல்விஅறிவு குறைவு காரணமா அல்லது வெளிநாட்டு மோகத்தினால் வரலாற்றின் மீது அர்வம் குறைந்து உள்ளதே நம் மக்களின் தியாகம் மறைக்கபட்டடுவிட்டது. ஒவ்வொரு வருடமும் வெளியிடும் கல்லூரி வருட நினைவு புத்தகத்தில் கூட இதை பார்த்ததாக ஞபகம் இல்லை ஏன்?
Post a Comment