Loading...
Friday 24 September 2010

கல்வித்தந்தை எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுத்தீன்

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனரும்,தாளாள‌ருமாகிய ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள் தம் இளையக் காலத்தில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைப் பட்டுக்கோட்டை சென்று கற்று வந்தார்கள்.வெளியூர் சென்று கல்வி கற்று வருவதின் இடர்பாடுகளை இளமையிலே அனுபவித்த ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள்,அக்காலத்திலேயே எதிர்காலத்தில் இத்தகைய இடையூர்கள் நீக்கப்பட்டு இளைஞர்கள் எல்லோரும் அதிரை நகரத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என உறுதி பூண்டார்கள்; அதை அவர்களின் நண்பர்களிடமும் வெளிபடுத்தினார்கள்.

பின்னர் 1949ம் ஆண்டில் காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியை  நிறுவித் தம் இளமைக்காலக் கனவை நினைவாக்கினார்,பின்னர் 1955ம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார்.

இடைக்காலத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் போற்றப்படாமையால் வருவாயின்றி வளங்குன்றி இருந்தன. முறையான நிர்வாகயின்மையால் அரசுப் பாதுகாவலர் நியமிக்கப்பெற்று இருந்தனர்.1955ம் ஆண்டு தாளாள‌ர் ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்களின் தந்தையார் முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயர் அவர்களிடம் இந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பையும் அரசுப் பாதுகாவலரிடமிருந்து பெறும்போது,ரூபாய் 900 கையிருப்பு தொகையாக ஒப்படைக்கப்பட்டது.

1954ல் கல்லூரி தொடங்கப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.நிறுவனத்தின் அன்றைய பொருள் தொகையாகிய  ரூபாய் 900 கொண்டு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் ஆனால், எப்படியும் தொடங்கிவிட வேண்டுமென்ற உறுதியும் ஏற்பட்டது.அதிரை நகரைச் சேர்ந்த பெரு மக்கள் சிலரின் ஒத்துழைப்பு  தாளாள‌ர் எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களுக்குப் பெறும் துணையாக அமைந்திருந்தது.

1955‍‍ல் கல்லூரிக்குக் கட்டிடம் கட்டப் பொருள் திரட்டுவதற்காகக் இலங்கைப்  பயணம் மேற்கொள்ளப்பட்டது. தாளாளரின் தந்தையார் முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயர் அவர்கள் தலைமையில் நால்வர் அடங்கிய குழு இலங்கைப் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்திற்கு முன்னரே கல்லூரிக் கட்டிடத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது.அப்போது காடாக‌  காட்சியளித்த இடத்தில் கல்லூரிக் கட்டிடத்திற்கு பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அடித்தளம் அமைக்கப்பட்டது. இலங்கைப் பயணம் மூலம் திரட்டப்பட்ட தொகையே அன்றையக் கல்லூரிக் கட்டிடம் உருவாவதற்கு பெறும் துணையாக அமைந்தது.

1955 ல் கல்லூரி தொடங்கிய பிறகு,பொருள் திரட்டுவதற்கு சிங்கப்பூர் பயணமும் ஹாஜி.எம்.எம்.நெய்னா மரைக்காயார் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.இப்பயணம் மூலம் திரட்டப்பட்ட தொகையும் கல்லூரிக் கட்டிடத்திற்கே செலவிடப்பட்டது.

அன்றைய கலைஞர்களான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,டணால் தங்கவேலு,நடனமணிகள் நடராஜ்‍ சகுந்தலா போன்ற பெருங்கலைஞர்கள் நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கல்லூரி வளர்ச்சிக்கு ஒரளவு நிதி திரட்டித் தந்தார்கள்.(அவர்களின் கலை நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கப்பட்டது)

நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் பல காலம் உரிய முறையில் பேணிக் காக்கப்படாமையால் சீரழிந்து கிடந்தன.கல்லூரி தொடங்குவதற்கு முந்திய ஆண்டும்,தொடங்கிய மறு ஆண்டும் வீசிய கடும்புயலில் நிறுவனத்தின் தென்னந்தொப்புகள் பேரழிவுக்கு உள்ளாயின.அப்பொழுது நிறுவனத்திற்கு வருவாய் தந்த பேரூற்று அடைப்பட்டது. மற்றொரு பக்கம் அரசின் புதிய புதிய சட்டங்களாலும் அப்பொழுது இந்நிறுவனம் மேல செல்ல முடியாமல் இருந்தது.

கல்லூரி தொடங்கி எழெட்டு ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையும்,பயிறுவிக்கும் பாடங்களும் காலத்தின் தேவைக்கேற்ப‌  பெருகியது.பொருள்களின் தேவையும்,நிதிச் சுமைகளும் அதிகமாகி கொண்டு போனது.ஆசிரியர்களின் ஊதியம் மாதந்தோரும் பெருந்தொகை தேவைப்பட்டது.தரிசாகக் கிடந்த பரந்த நிலங்களில் தென்னை பயிர் செய்யப்பெற்று வருவாயைப் பெருக்க தாளாளர் ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள் வழி செய்தார்கள்.

1976 க்குப் பிறகு தான் ஆசிரியர்களுக்குரிய ஊதியத்தை முழுவதையும் வழங்க அரசு முன்வந்து கைகொடுத்தது.இதற்கு முன்னர் தன் சொந்த நிதியில் இருந்து தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டது.

குறைந்த வருவாயில் அதிகமான வளர்ச்சி அடைந்த நிறுவனம் நமதூர் எம்.கே.என் மதரஸசா ஆகும் இதற்கு முழுவதும் உழைத்த பெருமை ஹாஜி எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களையே அனைத்து பெருமைகளும் சேரும்.அன்றைய காலங்களில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நாகை மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வரை எந்த கல்லூரியும் கிடையாது.ஆனால் நமதூரில் அன்றைய கால கட்டத்தில் கல்லூரி இருந்துள்ளது பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.

குறிப்பாக பொருளதாரத்தில் பிந்தங்கிய மாணவர்களுக்காக பயன் பெறும் தக்க இக்கல்லூரி இருந்துள்ளது.அன்றைய காலங்களில் தாளாள‌ர் ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள் கல்லூரிக்கு அனைத்து வேலை நாட்களிலும் வருகை தந்து அங்கு நடைபெறும் கல்லூரியில் கட்டுமான பணிகளை பார்வை இடுவது வழக்கம்.


1985 ஆம் ஆண்டில் வணிகவியல் முதுகலை வகுப்பும்,1986 ஆம் ஆண்டு வேதியியல் முதுகலை வகுப்பும்,1987 ஆம் ஆண்டு உயிரியல் முதுகலை வகுப்பும் அடுத்த வந்த ஆண்டுகளில் அனைத்து முதுகலை மற்றும் இடைநிலை, ஆராய்ச்சி வகுப்புகள் அடுத்தடுத்து துவங்கப்பெற்றது.இன்றும் வீறு நடைப் போட்டு வருகிறது.

ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் தாளாள‌ர் அவர்களின் நினைப்பு அனைத்தும் நிறுவன வளர்ச்சிக்கு பெருமை சேர்த்தது.அவர்களின் கனவுகள் கல்விப்பணியாக இருந்து வந்துள்ளது.

1962 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் ஊராட்சி மன்றதலைவராகவும்,(இப்போது பேரூராச்சி) தமிழ்நாடு வக்ப் வாரியம்,ஒய்வு பெற்ற நீதிபதி ஜனாப் ஷர்ப்புதீன் சாகிப் அவர்கள் தலைமையில் இயங்கிய பொழுது தஞ்சாவூர் மாவட்ட சார்பாக வக்ப் வாரிய உறுப்பினராக இருந்து நல்ல முறையில் செயல் ஆற்றி வந்தார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடனும்,நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களுடனும்,மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களுடனும் இதுபோன்ற பெருந்தலைவர்களுடன் மிகவும் நட்புடையவர் தாளாளர் எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்கள்.

எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்கள் கல்லூரி அமைத்து சிறப்பாக நடத்தி வருவதை முன்னாள் காங்கிரஸ் தலைவராகிய காலம் சென்ற கிருஷ்ணசாமி வாண்டையார் கூறியதாக காங்கிரஸ்காராரான கடையநல்லூர் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.அப்துல் மஜீத் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தம்பிக்கோட்டை சுந்தரேசத்தேவர் வாண்டையார்,பட்டுக்கோட்டை வி.என்.எஸ் என்ற வி.என். சுவாமிநாதன்Ex MP(இன்றைய பட்டுக்கோட்டை NR.ரங்கராஜன்MLA வின் மாமா) போன்றவர்களின் தாளாளரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். மட்டுமல்ல தஞ்சை மாவட்ட காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர்ருங்கூட!

இவர் காலத்தில் தான் பட்டுக்கோட்டையில் காதிர் முகைதீன்(மணி கூண்டு பள்ளிவாசல்) என்ற பெரிய பள்ளி வாசல் ஒன்று பட்டுக்கோட்டை நகருக்கு பெருமைசேர்க்கும் வகையில் முதல் பள்ளி வாசல்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்காலத்தில் தான் உயர்நிலைப்பள்ளியாக இருந்த காதிர் முகைதீன் பெண்கள்,ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதேபோல் ஷாதுலிய்யா தொழிற்பயிற்சி கல்வி நிறுவனமும்,ஷாதுலிய்யா நர்சரி பாலர் பள்ளியும் துவங்கினார்கள்.

இப்பொழுது இக்கல்லூரிகளும்,பள்ளிகளும் பல சாதனைகள் படைத்து வருவதை நாம் எல்லாம் அறிவோம்.இந்நிறுவனத்திற்கு பாடுபட்டு வந்த கல்வித்தந்தை அவர்கள் 2.10.1986 வியாழக்கிழமை அன்று தாளாளர் அவர்கள்
இவ்வுலக வாழ்வைத்துறந்தார்கள்.3.10.1986 வெள்ளிக் கிழமை மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பிறகு தக்வா பள்ளி கப்ரஸ்தானில் மர்ஹும்.ஹாஜி காதிர் முகைதீன், மர்ஹும்  முஹம்மது அபுல் ஹசன்,தாளாளர் அவர்களின் தந்தையாரின் அடக்கவிடத்தருகில் அடக்கம் செய்தார்கள்.

தொடர்புடைய முந்தைய கட்டுரை

முந்திய சில கட்டுரைகளையும் குறிப்புகளையும் தழுவி எழுதியது:
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்.

5 comments:

தாரிக் said...

முகத்தில் ஒரு ஆளுமை தெரிகிறது.

adirai....... said...

நல்ல தகவல், Thanks..

இந்த மனுசனால் ரொம்ப கஷ்டப்பட்டு, பொது நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தின் இன்றைய நிலை மிகவும் வேதனையான நிலையில் உள்ளது.

தற்போது இருக்கு நிர்வாகத்தினர் ஆசிரியார்களுக்கும் மாணவர்களுக்கும் தகுந்த மரியாதை கொடுப்பத்தில்லை என்பது நாளுக்கு நாள் நாம் கண்டுவரும் கசப்பான உண்மை.

மர்ஹும் சேக் ஜலாலுதீன் ஹாஜியார் அவர்களின் பொது நோக்க செயல்பாடுகள் போல் தற்போதுள்ள நிர்வாகத்திடமும் நிலையாக இருக்க அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.

தற்போதைக்கு நம்மால் துஆ தான் செய்ய முடியும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரையின் "கல்வித்தந்தை" மர்ஹூம் எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் அவர்கள் நம் யாவரின் மதிப்புகுரியவர்கள், அவர்கள் கண்டெடுத்த பள்ளியில் பயின்று பயனடைந்தவந்தவர்கள் நாம்.

என் சிறு வயதில் இவர்களின் மேளான்மை(யையும்) ஆளுமையும் கண்டிருக்கிறேன் இன்னும் பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது.

ஆக பொது வசூல் என்று வெளிநாடு செல்லும் வழிமுறை நேற்று உதித்ததல்ல, காலம் காலந்தொட்டு வரும் நடைமுறைதான் போலும். - இது(வும்) எனக்கு புதுத் தகவல்.

Zakir Hussain said...

எவ்வளவு பெரிய அரசு அதிகாரியையும் தானாக போய் பார்க்காமல் தான் இருக்கும் இடத்துக்கு வரவழைத்து பார்க்கும் மிகுந்த செல்வாக்கும் மரியாதையும் உள்ள மனிதர். நாங்கள் படித்த காலத்தில் ஹைஸ்கூல் கிரவுண்டில் ஆக்கிரமைப்பு செய்த நரிக்குறவர்களை தனது சமயோசித புத்தியால் கலவரமின்றி விரட்டியவர். இன்னும் ஒருவர் இதுவரை இவர்போல் பிறந்து வரவேண்டும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

அதிரை அஹமது காக்கா அவர்களுக்கு,நீங்கள் அதிரை சம்பந்தப்பட்ட செய்திகளில் நிபுணத்துவம் உள்ளவராக இருக்கிறீர்கள்.மேப்புடியான் என்றால் என்ன (நம்மூரில் பாம்பு,பன்றி,சைத்தான் போன்றவற்றை அழைப்பதை கேள்விப்பட்டு,என் ஒரு கட்டுரைக்கு பெயர் வைத்தேன்,)விளக்கமுடியுமா.சகோதரி லக்ஷ்மி கேள்வி கேட்டுள்ளார்.உதவமுடியுமா?உங்களுக்கு தனி பிளாக் உள்ளதா?

Labels

 
TOP