Loading...
Saturday 18 September 2010

முத்துப்பேட்டையின் முத்து, அதிரையின் சொத்து!



முத்துப்பேட்டையின்  முத்து, அதிரையின்  சொத்து!

      
அன்றையத்  தஞ்சாவூர் மாவட்டம், இன்றையத் திருவாரூர் மாவட்டத்து முத்துப்பேட்டையின் வீதியொன்றில் பெரியார் ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.  அவருக்குச் சற்றே பின்னால் இன்னொருவர் போய்க்கொண்டிருந்தார்.  பின்னால் நடந்தவருக்கு முன்னால் நடந்தவரின் ஒரு செயல் வியப்பைக் கொடுத்தது.  அப்படி அவர் என்னதான் செய்தார்?  வானத்தை நோக்குவதும், பின்னர் தன் கையில் வைத்திருந்த கடிகாரத்தைச் சரி செய்வதுமாகச் சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெரியார்!

      "தாங்கள்  என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" கேட்டார் பின்னவர்.

      "அதுவா?  வானத்தில் உள்ள சூரியனைப்  பார்த்து, என் கடிகாரத்தைச் சரி செய்துகொள்கிறேன்" என்றார் முன்னவர்.

      'சூரியனைப்  பார்த்து நேரமறிந்துகொள்ளும்  மனிதரும் உண்டா?' நெற்றியின்  சதைப் பிடிப்பில் எழுந்த சுருக்கம் பின்னவரை விந்தை கொள்ளச் செய்தது.  அவர் அப்போது முத்துப்பேட்டை அவ்லியாவை 'ஜியாரத்' செய்யக் கேரளாவிலிருந்து வந்த மலையாளி.  

      முன்னவரிடம் நெருங்கி, அதன் விளக்கம் பற்றிக்  கேட்டபொது, "அருகில் உள்ள அதிராம்பட்டினத்துக்கு  வாருங்கள் படித்துத் தருகிறேன்" என்ற பதில் மட்டுமே வந்தது.  கேரளத்துக்காரரும் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு, அதிரைக்கு வந்து, முன்னவர் சொன்ன 'ரஹ்மானியா மத்ரஸா' என்ற கல்விக்கூடத்திற்குச் சென்று, 'ஷைகுனா' என்ற அந்த முன்னவரிடம் 'இல்முல் ஃபலக்' எனும் வானியலைக் கற்றுத் தன் ஊருக்குத் திரும்பினார்.  

      வானியலைக் கற்றுக்கொடுத்த அந்த வளமார் அறிஞர்தான், அல்லாமா அஷ்ஷெய்கு அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை ஆலிம் ஆவார்கள்.  வானியலைக் கற்ற மலையாளி, குஞ்ஞஹ்மது ஹாஜி என்பவராவார்.

       முத்துப்பேட்டையில் ஹிஜ்ரி 1275 ‏‏‏இல் (கி.பி.1856) பிறந்து, மார்க்கக் கல்வி கற்றுச் சிறந்து நின்ற ஷெய்குனா அவர்கள் மூலம் அவ்வூர் மக்கள் சரியாகக் கல்விப் பயன் பெற்றுக்கொள்ளாத காரணத்தால், அருகிலுள்ள அதிராம்பட்டினத்தில் குடியேறினார்கள் என்பது பிரபலமான செவிவழிச் செய்தியாகும்.

      இளமையிலேயே  நம் ஷெய்குனா அவர்களுக்குக்  கல்வித் தாகம் மிகைத்திருந்ததால், புனித மக்காவுக்குச் சென்று, மேற்கல்வி கற்றார்கள்.  அவர்கள் கீழ்க்கண்ட மார்க்க மேதைகளிடம் அங்குக் கல்வி பயின்றுள்ளார்கள்:

    * மக்காவின் முஃப்தி, அஸ்ஸெய்யித் அஹ்மது இப்னு ஜைனீ தஹ்லான் (ரஹ்)
    * ஷைகுல் இஸ்லாம், முஹம்மது அப்துல் காதிர் அல்யமனி (ரஹ்)
    * அஷ்ஷெய்க் ஹுஸைன் இப்னு முஹம்மத் அல்ஹபஷீ (ரஹ்)
    * அஸ்ஸெய்யித் அலவீ அஸ்ஸக்காஃப் (ரஹ்).




இவர்களன்றியும், நம் ஷெய்குனா அவர்கள் இன்னும்  இறைநேசச் செல்வர்கள் பலரிடமும்  கல்வி கற்றதோடு, மதீனா  முனவ்வராவிலும் கல்வி கற்கும்  வாய்ப்பினையும் பெற்றார்கள்.

      அருங்கல்வி  கற்று அறிஞராகத் திகழ்ந்த ஷெய்குனா அவர்கள் சில ஆண்டுகள் மக்காவில் மார்க்கக் கல்வியைக் கற்பிக்கும் ஆசானாகவும் பணி புரிந்துள்ளார்கள்.  பின்னர், தம் ஆசான்களின் அனுமதியைப் பெற்று, மக்காவிலேயே திருமணமும் செய்துகொண்டார்கள்!

      ஊரிலிருந்த  தாய்க்கோ, ஒரு வகையில்  மகிழ்ச்சி இருந்தாலும், எங்கே தன் மகன் தன்னை  விட்டுப் பிரிந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில், (இது நம் நாட்டுத் தாய்மார்களின் பலவீனம்) மகனை எப்படியாவது மக்காவிலிருந்து தருவித்துவிட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.  அதனால், அந்த நாட்களில் ஹஜ்ஜுக்குப் போன ஹாஜிகள் பலரிடமும் சொல்லி, எப்படியாவது தன் மகனை அழைத்து வரும்படி ஏற்பாடு செய்தார் அந்தத் தாய்.

      அதிரையிலிருந்து மட்டுமல்லாமல், அண்டை நாடான  இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்குச்  சென்றவர்கள் மூலமும் அந்தத் தாய் கடிதங்கள் கொடுத்தனுப்பினார்!  அவர்களுள், இலங்கை அலுத்காமம் தர்காடவுனைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயீல் ஹாஜியார் என்பவரும்  ஒருவர்.  ஹாஜியார் மக்காவில் ஷைகு ஜைனீ தஹ்லான் அவர்களின் பாட வகுப்பில் நம் ஷைகுனாவைப் பார்த்துவிட்டார்!  பாடம் முடிந்த பின்னர், அதிராம்பட்டினத்திலிருந்து தமக்கு வந்திருந்த கடிதத்தை அவ்வாசிரியரிடம் கொடுத்தார்.  நிலைமையைப் புரிந்துகொண்ட ஷைகு தஹ்லான் அவர்களும், தம் மாணவரை அழைத்து, அவருடைய தாயின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்கள்.

      தாயின்  கட்டளையையும் ஆசிரியரின் அறிவுறையையும் மதித்து, வேறு வழியின்றி, மக்கத்து மனைவியைத் 'தலாக்' செய்துவிட்டு, அதிராம்பட்டினத்திற்குப் புறப்பட்டார்கள்.  ஊருக்கு வந்து சேர்ந்த நம் ஷெய்குனாவுக்குப் பெற்றோர் முஹம்மது மர்யம் என்ற மங்கை நல்லாளை மணமுடித்து வைத்தார்கள்.  அந்த இல்வாழ்க்கை மூலம் ஏழு ஆண் மக்களும் மூன்று பெண் மக்களும் பிறந்தார்கள்.  சில ஆண்டுகளில் அம்முதல் மனைவி இறந்துவிடவே, இரண்டாவதாக முஹம்மது சாரா என்ற பெண்ணை ஷெய்குனா மணம் செய்தார்கள்.  அத்திருமணத்தின் மூலம், இரண்டு ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறந்தனர்.  

      இலங்கையில் சில ஆண்டுகள் வணிகத்தில் ஈடுபட்ட பின்னர், ஷெய்குனா அவர்கள் தமக்குப் பிடித்தமான கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார்கள்.  சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் சில ஆண்டுகள் கல்விப் பணியை மேற்கொண்டார்கள்.  பின்னர் சொந்த ஊரும் வந்த ஊருமான அதிராம்பட்டினத்திற்கு வந்து, 'அல் மத்ரஸத்துர் ரஹ்மானிய்யா' என்ற பெயரில், அவர்களின் வீட்டுத் திண்ணையிலேயே ஒரு கல்விக் கூடத்தை அமைத்தார்கள்.  பின்னர், அதிரையின் பெருந்தனக்காரரும் வள்ளலுமான மீ. மு. முஹம்மது முஹைதீன் அப்துல் காதிர் மரைக்காயர் அவர்களின் பொருளுதவியால், தாம் தொடங்கிய மத்ரஸாவைத் தனிக் கட்டடத்தில் தொடங்கி மார்க்கப் பணி செய்துவந்தார்கள்

     ஷெய்குனா (ரஹ்) அவர்களின் மாணவர்களுள்  குறிப்பிடத் தக்கவர்கள்: 

(1) மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினரும் சிறந்த மார்க்க  அறிஞராகவும் விளங்கிய கீழக்கரை செய்யிது முஹம்மது ஆலிம்  புலவர், 

(2) சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியின் பின்னாள் தலைமை ஆசிரியராக விளங்கிய முஹம்மது மதார் ஆலிம், 

(3) அதே கல்லூரியின் இன்னொரு ஆசிரியராக இருந்த முஹிய்யித்தீன் ஆலிம்,  

(4) அதிராம்பட்டினத்து மாணவர்களுள் ஒருவரான முஹம்மது பாக்கிர் ஆலிம் (அதிரை வரலாற்றுத் தொகுப்பாசிரியரின் தந்தையார்) முதலானோர்.

     
(நம்  ஷெய்குனா (ரஹ்) அவர்களின்  புகழ் அக்காலத்தில் தமிழகத்தைத்  தாண்டி, கேரளா, இலங்கை ஆகிய  பகுதிகளிலும் பரவியிருந்ததால்,  அங்கிருந்தெல்லாம் அவர்களிடம்  கல்வி பயில மாணவர்கள்  வருவர்.  பின்னாளில் வேலூர்  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்  அரபிக் கல்லூரியின் முதல்வராயிருந்த ஷெய்கு ஹஸன் முஸ்லியார் அவர்கள் நம் ஷெய்குனாவிடம் 'புகாரி ஷரீஃப்' பாடம் பயில அதிரைக்கு வந்தார்கள்.  

அப்போது ஷெய்குனா அவர்கள் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தார்கள்.  தம்மை நாடி வந்த மாணவருக்குப் பாடம் ஓதிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்திய ஷெய்குனா அவர்கள், சிறிது நேரத்தில் தம்மைத் தேற்றிக்கொண்டு, தம் தலைமாணவர்களுள் ஒருவரான பாக்கிர் ஆலிம்சாஹிப் அவர்களிடமே 'புகாரி ஷரீஃப்' கித்தாபை ஓதிக்கொள்ளுமாறு கூறினார்கள்.  

பிற்காலத்தில் தாம் 'பாக்கியாத்' அரபிக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று, தாம் 'புகாரி ஷரீஃப்' நூலைப் பயிற்றுவித்த மாணவர்களுக்கு, நபி (ஸல்) அவர்கள் முதல் தம்வரை ஹதீஸ்கள் வந்து சேர்ந்த சங்கிலித் தொடரைக் குறிப்பிட்டுத் தனிப் பட்டயம் (டிப்லொமா) ஒன்றையும் ஷெய்கு ஹஸன் மவ்லானா அவர்கள் வழங்கி வந்தார்கள்.  அதில், ஷெய்குனா அவர்களின் பெயரும் பாக்கிர் ஆலிம்சாஹிபின் பெயரும் இன்றும் இடம் பெற்றிருக்கின்றன.)

      ஷெய்குனா (ரஹ்) அவர்களின் காலத்தில்  தமிழகத்துப் பொது மக்களிடையே பள்ளிப் படிப்பில் குறைபாடு இருந்தது.  ஆனால், அரபியை அனைவரும் சரளமாக வாசிப்பார்கள்.  அதனால், பொதுமக்கள் பயன் பெறுவதற்காக, 'கிதாபுல் ஹஜ்' என்ற பெயரில் அரபுத் தமிழ் நூலொன்றை இயற்றி, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற ஆவல் கொண்டவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்த்தார்கள்.

      இந்த  அறிவுலகச் செம்மல் ஷெய்குனா (ரஹ்) அவர்கள் தமது 89 வது  வயதில், ஹிஜ்ரி 1364, சஃபர் 15 அன்று (1945 ஜனவரி 29) இறப்பெய்தி, மரைக்கா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) 

                                       Source: 'அதிரை கலைக் களஞ்சியம்'

7 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம், வரலாற்றுத் தாகமெடுக்க வைக்கும் அருமையான பதிவு தேடி தேடிச் சென்றாலும் என்னால் இந்தத் தகவலைப் பற்றி அறிந்திருக்க முடியாது. இதில் குறிப்பிட்ட பாக்கர் ஆலிம் அவர்களைப் பற்றி மட்டுமே தெரிந்திருந்த எனக்கு அவர்களைப் பற்றிய சிறிய குறிப்பும் மகிழச் செய்தது.

Unknown said...

deep research...awesome!

Mks.ஹாஜாமுகைதீன் said...

அதிரை வரலாற்று தள இயக்குனரே தகவலுக்காக சிறப்பு போட்டோ எடுத்த மாதிரி தெரிகிறது. உங்கள் ஆர்வமும் சேவையும் வெற்றியடைய வேண்டும்.
அஹ்மது காக்காவின் முயற்ச்சிகள் அனைத்தும் அருமை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல பல புதிய தகவல்கள் தந்து வரும் அதிரை வரலாறு வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்.

adirai pamaran said...

Good Post thanks ahamed kaka.

Sembian said...

கோட்டெபட்டினத்தை ஆண்ட முஹம்மது ஃபத்ல் (ராவுத்தர் அப்பா) போரில் ஷஹீதான பின் அவர்களின் மூதத மகன் (கபீப் முஹம்மது என்ற ஹபீப் முஹம்மது) குடும்பதினர் அதிரையில் குடியேறினர். அவர்கள் தற்போது - க.மு - மு.க.செ - ஒ.க.மு - மு.மு - என்ற குடும்பத்தினராக அதிரையில் வாழ்கிறார்கள்.

Jamal Mohamed said...

ரொம்ப முக்கியமான செய்தி பதுகாக்கப்பட வேண்டிய செய்தியும் கூட இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியவேண்டிய செய்திகள் எனெனில் இன்றைய தலைமுறை அரசியல் வாதிகளால் தவறன புரிந்துனர்க்கு ஆளக்கபட்டு இவர்களெல்லாம் வந்தேரிகள் என்று இவர்களெ தவறக புரிந்து உள்ளனர். கல்விக்காகவும், நம் சமுகம் மற்றும் இன்றி பிற சமூகமூம் பலன் அடைய செய்திருக்கும் அதிரையில் வாழ்ந்த பெரியார்களின் சம்பவங்கள் மற்றும் தியாகங்களை வெளி கொணரும் இந்த வலைதளத்திர்க்கு வாழ்த்துக்கள்

ஜமால் முஹம்மது
சீசல்ஸ்.

Labels

 
TOP