Loading...
Saturday 25 September 2010

சமுதாய நல மன்றம்

சமுதாய  நல மன்றம்

              (முன்பொரு முறை, 'அதிரை வரலாறு' பகுதியில்,  இந்த மன்றத்தைப் பற்றிய  கட்டுரை தனியாக இடம்பெறும்  என்று அறிவித்திருந்தோம்.  அதனடிப்படையில் அமைவதுவே  இக்கட்டுரை.)
        

      1955 இல் சமுதாயச் சிந்தனை  மிக்கவர்கள் அதிரை ஷாதுலிய்யாத்  தெரு புதுப்பள்ளியில்  கூடி ஆலோசனை செய்ததைத் தொடர்ந்து, 1957 ஆம் ஆண்டில் முறையாக உருவான முன்னோடிச் சமூக அமைப்பே 'சமுதாய நல மன்றம்' ஆகும்.

      இத்தருணத்தில், இதற்கு முன் இதனைப்போல் அதிரையில்  தோற்றுவிக்கப்பட்ட சங்கங்கள்  பற்றிய அறிமுகமும் அவசியமானது. அவை, 'முஸ்லிம் யூனியன்', 'ஹிதாயத்துல் இஸ்லாம் சபை', 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்'(1920), மஆதினுல் ஹஸனத்தில் இஸ்லாமிய்யா சங்கம்', 'தாஜுல் இஸ்லாம் சங்கம்' 'நகர நலச் சங்கம்(TWA)', 'காயிதெ மில்லத் மன்றம்'(1973), 'அதிரை நகர முஸ்லிம் சீர்திருத்த இயக்கம்'(1980), 'அதிரை நல மன்றம்'(1980), 'அதிரை ஊரக வளர்ச்சி மன்றம்(ARDA)' 'அதிரை முன்னேற்றச் சங்கம்' ஆகியவையாகும்.  இவற்றுள் இன்றுவரை செயல்பாட்டில் நிலைத்திருப்பது, 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

      'சமுதாய  நல மன்றம்' ஆற்றிய புரட்சிகரமான  சேவைகளை என்றுமே மறக்க  முடியாது.  இம்மன்றம் இப்போது இல்லாவிட்டாலும், இதன் செயல் திட்டங்களுள் சிலவற்றை 'அதிரை பைத்துல் மால்' அமைப்பு செய்து வருவது நமக்கு ஆறுதலைத் தருகின்றது.  குறிப்பாகச் சொல்லப்போனால், சமுதாய நல மன்றத்தின் கடந்த கால உறுப்பினர்கள் சிலரின் பங்களிப்பும் பின்னணியுமே, பிற்காலத்தில் 'அதிரை பைத்துல் மால்' தோன்றுவதற்குக் காரணமாயிருந்தது என்று உறுதியாகக் கூறலாம்.

      எவ்விதப்  பக்கச் சார்புமின்றி, ஊரின்  எல்லாத் தெருவாசிகளையும்  உறுப்பினர்களாக்கி, கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, ஒற்றுமையாகச் செயல்பட்டது, இம்மன்றத்தின் சிறப்பம்சமாகும்.  இதற்காக, இதன் உறுப்பினர்கள் கீழ்க்கண்டவாறு உறுதிப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது, இம்மன்றத்தின் குறிக்கோலாக இருந்தது:  "சமுதாய நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கும் இம்மன்றத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடுதலும், பொறுமை, ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றைக் காத்து, அநீதியை எதிர்த்தலும், மார்க்க சம்மந்தமாகவும் கல்வி மற்றும் பொதுநலனுக்காகவும் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெறுதலும் எம் கடமைகளாகும்."

சங்கத்தின்  கல்வி வளர்ச்சிப் பணிகள்:



    * பள்ளி மாணவர்களிடையே (திருமறை ஓதும்) 'கிராஅத்' போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியது.
    * பள்ளி மாணவர்களிடையே மார்க்க போதனைகள் நடத்தி, அவற்றில் தேர்வு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கியது.
    * வசதி குறைந்த மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், நோட்புக்குகள், எழுதுபொருள்கள் வழங்கியது.
    * திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கு ஊக்கப் படுத்துவதற்காகச் சென்னையிலுள்ள 'மத்ரஸா இஸ்லாமிய்யா'வுடன் தொடர்பு கொண்டு, மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது.
    * மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்துத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டது.
    * மன்றத்தின் சார்பில் இயங்கிய நூலகத்தில் அரிய பல நூல்களைத் திரட்டி, அறிவுப் பணியில் பங்களிப்புச் செய்தது.



ஊருக்கு உதவி:

    * அதிரையில் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' அலுவலகம் அமைக்கக் கோரி, தஞ்சாவூரிலுள்ள மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் அனுப்பியது (1962).
    * காலரா பரவாமல் தடுக்குமாறு, பட்டுக்கோட்டையிலுள்ள சுகாதார அதிகாரியை வலியுறுத்தியது (1963).
    * மாவட்ட மருத்துவ அதிகாரியிடம், அதிரைக்குப் பெண் மருத்துவர் தேவை என்ற கோரிக்கையை வைத்தது (1964).
    * இஸ்லாமியப் பத்திரிகைகளைக் கிளை நூலகத்தில் வரவழைக்க, தஞ்சாவூர் 'லோக்கல் லைப்ரரி அத்தாரிட்டி'யிடம் கோரியது (1965).
    * 'மாலை முரசு' பத்திரிகையின் பெருநாள் மலரில் வெளியான கட்டுரையில் இடம்பெற்ற தவற்றைச் சுட்டிக்காட்டி, அப்பத்திரிகையின் திருச்சி அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியது (1966).



துண்டுப்  பிரசுரங்கள்:

      அதிரைச் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, அறிவுப் புரட்சியை ஏற்படுத்திற்று இச்சங்கம். 

அவற்றுள் சில:

* சிந்தித்துச் செயலாற்றுங்கள்!,
* கடமையை நிறைவேற்றுங்கள்!,
* சிறந்த கல்விக்குச் செல்வம் தாருங்கள்!,
* மாப்பிள்ளைக்கு விலையா?,
* தனுஷ்கோடி தரும் படிப்பினை,
* சீர்கெடுக்கும் சினிமா,
* இஸ்லாமியக் கடமைகள்,
* நமது பிற்போக்கும் நல்வழிகளும்

சொற்பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும்:

      இளைய  சமுதாயத்திடம் பேச்சுத் திறமையையும் எழுத்துத் திறமையையும் வளர்ப்பதற்காக, அத்துறைகள் சார்ந்த பயிற்சிகளை அவ்வப்போது மன்றம் நடத்தி வந்துள்ளது.  இலக்கிய இன்பம், இறையச்சம், இந்தியாவில் இளைஞர் கடமை போன்ற தலைப்புகளில் சொற்பயிற்சிகளையும், எழுத்துத் திறமையை வளர்க்கக் கட்டுரைப் போட்டிகளையும் நடத்தி, இத்துறைகளில் மன்றம் புரட்சி செய்துள்ளது.

மன்ற  நூலகம்:

      அறிவுப் புரட்சிக்கு அரிய துணையாக நிற்பவை நூலகங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.  இவ்வுண்மையைக் குறிக்கோலாகக் கொண்டு, மன்றத்தின் சார்பில் ஒரு பெரிய நூலகம் அமைக்கப்பட்டது.  அதன் ஆரம்பப் பொறுப்பாளராகப் பல்லாண்டுகள் சேவை செய்த எஸ். அபுல்ஹசன் (மொத்திக்கண்) அவர்களை மறக்க முடியாது.  அவரின் தன்னலமற்ற சேவையை நினைக்கும்போது, இன்றுகூட நமக்கு வியப்பாக இருக்கின்றது!  இஸ்லாமிய நூல்களையும் சஞ்சிகைகளையும் பொது நூல்களையும் சஞ்சிகைகளையும் திரட்டுவதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வியப்பிற்குரியவையாகும்.

      எமக்குத்  தெரிந்தவரையில், 1968 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் கீழ்க்கண்டவர்கள் இடம்பெற்றிருந்தார்கள்:

தலைவர்  : அல்ஹாஜ் ஏ.எம்.கே. அப்துஷ் ஷகூர் ஆலிம்

துணைத் தலைவர் : ஏ.எம்.கே. முஹம்மது ஜகரிய்யா

பொதுச் செயலாளர் : எம்.ஏ. அப்துர்ரஹ்மான்

கூட்டுச்  செயலாளர் : எம்.ஏ. அஹ்மது அன்வர்

பொருளாளர்  : அல்ஹாஜ், ஹாபிஸ் மு.மு. முஹம்மது சாலிஹ்

      இம்மன்றத்தை நடத்துவதற்குப் பொதுமக்களிடமிருந்து  சந்தாக்கள் வசூலிக்கப்பட்டன.  அதிகப்பட்ச மாதச் சந்தா, ஒரு ரூபாய் மட்டுமே!  அரை  ரூபாய்ச் சந்தாக்களும் வசூலிக்கப்பட்டன!

      இம்மன்றம் மூடப்பட்ட பின்னர் நிகழ்ந்த வருந்தத் தக்க விஷயம், இதன் அரிய நூலகத்திற்கு ஏற்பட்ட கதி!  சில காலம், நூல்கள் ஜாவியா ரோட்டிலிருந்த TWAவிலும், இன்னும் சில காலம், ஜாவியாவிலும், பின்னர் (நாங்களெல்லாம் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு) ஒரே ஒருவரின் பொறுப்பில் புதுப்பள்ளியில் முடங்கிவிட்டதும், இன்று அவை எங்கோ காணாமல் போய்விட்டதுமான அவல நிலைதான் அது!

      அதிரை வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்ட  சமுதாய நல மன்றத்தைப்பற்றி  வாசகர்கள் - குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் - அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை வரையப்பட்டது.

                                    Source: 'அதிரை கலைக்  களஞ்சியம்'

                                    கட்டுரையாக்கம்: அதிரை அஹ்மது

7 comments:

தாரிக் said...

மிக மிக அருமையான பதிவு.

Anonymous said...

I like It

இப்னு அப்துல் ரஜாக் said...

good information

jahir said...

"இன்றுவரை செயல்பாட்டில் நிலைத்திருப்பது, 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது"........

இது தவறான செய்தியாகும்,மேலும் நீங்கள் எதையுமே தீர ஆலோசிப்பது அல்லது விசாரிப்பது கிடையாது என்பதைத்தான் காட்டுகிறது.
தற்பொழுதும் மஆதினுல் ஹஸனத்தில் இஸ்லாமிய்யா சங்கம் அன்றிலிருந்து இன்றுவரை செயல்பாட்டில் உள்ளது.

அதன் தலைவராக அ.இ.சேனா. மொகைதீன் அப்துல் காதர் அவர்களும், செயலாளர் - ப.அ.நூர் முகம்மது அவர்களும்(வார்டு மெம்பெர்) , பொருளாளர் - ச.அப்துல் கபூர் அவர்களும் இருக்கிறார்கள்.
மேலும் செயல்பாட்டில் உள்ள இந்த சங்கத்தில் கடந்த பல வருடங்களாக ஹாஜி. தாஹா அவர்கள் பெண்களுக்கென மார்க்க சொற்பொழிவு வாரம் ஒரு முறை நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் பல நல்ல விசயங்கள் சங்கம் மூலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒருமுறை ஹாஜி தாஹா அவர்களின் பெண்களுக்கான தொடர் பயான் செய்து வருவது பற்றியும் அதற்கு அவர்களின் தனார்வத்துக்கு ஏதும் அமைப்புகள் பின்னால் உதவிகள் கிடைக்கிறதா என்று பேச்சாக எழுந்து அது விவாதமானது என்னுடனிருந்த நண்பர்கள் மத்தியில் அங்கே ஒருவர் "மஆதினுல் ஹஸனத்தில் இஸ்லாமிய்யா சங்கம்" பற்றி சொன்னார் அதன் செயல் இன்னும் வியக்க வைக்கிறது "அமைதியாக ஆட்சி செய்கிறது இச்சங்கம்" நன்றி ஜாஹிர் ஞாபகப் படுத்தியதற்கு.

green said...
This comment has been removed by the author.
green said...

அதிரையின் காதிர் மொய்தீன் கல்லுரியின் ஆங்கிலதுறையின் பேராசிரியர்கள்
வரிசையில் மிக மிக அருமையான வரவு ப்ரொஃபெசர் ஜனாப் யுஹ். முஹம்மெத் இஃபால் சார் அவர்கள், சார் அவர்கள் 1966 ம் வருடம்
சென்னையில் யிருந்து அதிரை வந்து கல்விப் பணியற்றினார்கள் அவரின் அங்கிலப்புலமை என்ன ஒரு இனிமை , ஒர் அருவி யைப்போல் சரளமான
நடையில் போதிக்கும் திறமை .சார் போல் , இனி ஒருவர் நம் கல்லுரிக்கு கிடைக்க .துவாஹ் செய்வோம். இன்ஷா அல்லாஹ்..........

Labels

 
TOP