Loading...
Sunday 3 October 2010

காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்

காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்

நாம் முந்திய கட்டுரை தொடரில் "கலீபா அல்வாதிக் பெரும் கொடுமை இழைத்த பொழுது கெய்ரோ அருகில் முகத்தம் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுமாக 224 பேர் பக்ரீ குடும்பத்தை சேர்ந்த முஹம்மது கல்ஜி என்பாரின் தலைமையில் மரக்கலமேறி கி.பி.875ல் (கி.பி. 842ஆம் ஆண்டு என்ற கருத்தும் உள்ளது) இந்தியாவின் கீழ்க்கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் வந்திறங்கினர். அந்த இடத்தை பழைய காயல் என்று வழங்கப்படுகிறது." என்று முடித்திருந்தோம்.

அந்த காயல் நகர் எதுயென்பதை இப்போது பார்போம்....

காயல் நகரிலிருந்துதான் அதிராம்பட்டினத்திற்கு முஸ்லிம்கள் குடியேறியதாக வரலாற்று வழிச்செய்திகள் கூறுகின்றன.

காயல் என்னும் ஊரிலிருந்துதான் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

ஆனால், அது எந்த காயல் நகர் என்பது நாம் பல வரலாற்று நூல்களை படிக்கின்றபோது ஏற்படுகின்ற சந்தேகமாகும்.

இதுவே ஆய்வு செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது!

"திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுக்காவில் அட்ச ரேகை வடபால் 8.34 தென்பால் 78.8 ல் அமைந்துள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் பழைய காயலின்றும் வேறுபட்டதாகும்.

இதனை இம்பீரியல் கெஜட்டீர் ஆப் இந்தியா(தொகுதி 15 பக்கம் 195) காட்டுகின்றது.

தாமிரபரணிக்குத் தெற்கு, தூத்துக்குடியிலிருந்து 18 மைல் தெற்காம அமைந்துள்ள இவ்வூரினை காயல் என்னும் ஊராக கருதி மயங்குதல் கூடாது என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது."(1)

திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டினம் உண்மையான காயல் நகர் இல்லை என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

தமிழ்நாடின் தென்பகுதி ராமநாதபுரம் நகரிலிருந்து பத்து மைல் தொலைவில் 9‍-14-80-50-10 என்னும் அட்ச ரேகையில் அமைந்துள்ள(2) கீழக்கரைதான் உண்மையான பூர்வீக காயல் நகர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

கீழக்கரைதான் காயல் என்றும் தென்காயல் என்றும் இருந்ததாக மதுரைத்தமிழ் சங்க புலவராக இருந்த செய்யது முகமது ஆலீம் புலவர் தமது மஜ்முஉல் முனாஜாத்(பக்கம்19) என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இதுப்பற்றியே கீழக்கரையில் சீதக்காதி வள்ளல் கொலுவீற்றிருக்கின்ற காட்சியை நேரிற்கண்ட நொண்டி நாடக ஆசிரியர் அவரை காயற்றுரை செய்தக்காதி, காயல் நகரன், காயல் மன்னவன் செய்தக்காதி என்றெல்லாம் போற்றுகின்றார்.

தனிப்பாடல்களிலும் காயலாதிபனே, தென்காயற்பதியானே, காயல் துரை என்னும் தொடர்களையும் பார்கின்றோம்.(3)

சீதக்காதி என்ற செய்யது அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் இன்றைய கீழக்கரையைச் சேர்ந்தவர்தான் என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, இன்றைய கீழக்கரைதான் பண்டைய காயல் நகர் என்பது திண்ணம்!

"பழைய காயல் துறையிலிருந்து கடல் விலகி சென்றதன் காரணமாக அத்துறை தன் சிறப்பினை இழந்த போது அங்கிருந்த மக்கள் வேறு ஊர்களுக்கு சென்று குடியேற தொடங்கினார்கள். பரங்கிப்பேட்டை,முத்துப்பேட்டை போன்ற இடங்களுக்கும் சென்றதுடன் தங்கள் பழம் பகுதியின் பெயரைக் கொண்ட புதிய ஊர்களாகிய பின்னைக்காயல், காயல்பட்டினம் ஆகிய ஊர்களையும் அமைத்தனர்.(4)

என்கிற வரலாற்று சான்றுகளிலிருந்து நமக்குள்ள பல சந்தேககங்களை நிவர்த்தியாக்கின்றன. பண்டைய காயலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களே பல்வேறு கடற்கரை பட்டினங்களிலும் குடியேறினர் அவர்களில் சிலரே தங்களின் பழைய இருப்பிடத்தின் நினைவாக ஊர்கலையும் அமைத்து அதன் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தனர். அந்த வகையில் உருவானதுதான் இன்றைய காயல்பட்டினமாகும்.

அதுப்போலவே காயலில் (கீழக்கரை) இருந்து வெளியேறிய மக்கள் அமைத்த ஊர்களில் ஒன்றுதான் அதிராம்பட்டினமாகும். அம்மக்கள்தான் அதிராம்பட்டினத்தின் முதல் குடிமக்களாவார்கள்.

உசாதுணை குறிப்புகள்:
(1) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 63
(2) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 26
(3) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 31,32
(4) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 64

இன்னும் பல வரலாற்று குறிப்புகள்

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து


Enhanced by Zemanta

9 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே வாசிக்கும் தகவல்கள் யாவும் எனக்கு புதிதே, தம்பி ஹிதாயத் எப்போது புத்தகம் வெளியிட்டீங்க அதன் விபரம் தாருங்களேன் அதனை நான் வரவழைக்க வேண்டும்.

Shameed said...

படிக்கும்போது ஆச்சர்யமாக உள்ளது.
தொடரட்டும் உங்கள் அருமையான பனி.

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் said...

அபுஇபுறாஹிம்:தம்பி ஹிதாயத் எப்போது புத்தகம் வெளியிட்டீங்க அதன் விபரம் தாருங்களேன் அதனை நான் வரவழைக்க வேண்டும்.//

(எதிர்வீட்டு) காக்கா அபு இபுறாஹிம் அவர்களுக்கு,
இந்த "ஒரு பட்டினத்தின் கதை" இதை அடிப்படையாக வைத்து" ஒரு பட்டினத்தின் சொல்ல மறந்த கதை" என நாவலாகவும் எழுதிவருவதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது! இது DTP வேலைகள் முடித்து புத்தக வடிவத்தில் உள்ளது.

அதுதான் 'அதிரைவரலாறு' தளத்தில் தொடராக வருகிறது.

@ஷாஹுல்ஹமீது காக்கா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி,
தொடர்ந்து வாங்க, கருத்து எழுதுங்க மறக்காம தவறையும் சுட்டிக்காட்டுங்க.
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

Sembian said...

கொற்கை தான் கீழக்கரை என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன மேலும் விபரங்களுக்கு கீழக்கரை இத்ரீஸ் மரக்காயர் எழுதிய
" இப்னுபதூதாவும் மார்கோபொலோவும்" என்ற நூலை வாசிக்கவும்.

MSAH said...

ஒரு திருத்தம். தற்போதைய காயல் பட்டினம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டு விட்டது. அத்தோடு இன்னொரு தகவல். தூத்துக்குடி மாவட்டத்திலேயே பழைய காயல் என்று ஒரு ஊர் உள்ளது. அந்தப் பழைய காயலுக்குத்தான் கப்பலில் நமது முன்னோர்கள் வந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தற்போதைய காயல் பட்டினத்துக்கும், இன்னும் பல ஊர்களுக்கும் குடிபெயர்ந்ததாகவும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த M.S. அப்துல் ஹமீது

MSAH said...

‘ரூட்ஸ்’ என்றொரு ஆங்கில நாவல். அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கறுப்பர் எழுதியது. உலகிலேயே அதிகமாக விற்ற நாவல்களில் அதுவும் ஒன்று. தற்பொழுது அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டவர்கள் என்பதை நாமறிவோம். அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதைப் பறை சாற்றும் நாவல்தான் ‘ரூட்ஸ்’. இந்த நாவல் மூலம் தங்கள் முன்னோர்கள் முஸ்லிம்கள் என்றறிந்த அமெரிக்கக் கறுப்பர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர்.
நாவலாசிரியர் அலெக்ஸ் ஹேலி தன் வேர்களைத் தேடுகிறார். தன் பாட்டன், முப்பாட்டன் என்று சுமார் 12 வருடங்கள் தேடித் தேடி அலைகிறார். இறுதியில் தனது ஏழாவது தலைமுறை ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் சென்று முடிவதைக் கண்டறிகிறார். அந்தக் குடிசையில் வாழ்ந்த அவரது ஏழாவது தலைமுறை பாட்டனார் ஒரு நல்ல முஸ்லிம். அந்தக் கிராமமே போற்றும் கண்ணியமிக்கவர். இதனை நாவலாக எழுத முடிவு செய்கிறார் அலெக்ஸ் ஹேலி. நாவலை ஆப்பிரிக்காவின் அந்தக் குடிசையிலிருந்து தொடங்குகிறார்.
தமிழில் இந்த நூலை நான் மொழிபெயர்த்துள்ளேன். ‘வேர்கள்’ என்ற பெயரில் இலக்கியச்சோலை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.
இதேபோல் நம் முன்னோர்களின் வரலாற்றையும் எனக்கறிய ஆவல். நம்மில் ஒருவர் தன் பாட்டன், முப்பாட்டன் என்று பல தலைமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளவர் உண்டு என்றால் அவரது குடும்பத்தின் வேர்களைக் கண்டறிந்து அதனைச் சரித்திர நாவலாக வடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை.
அந்த வகையில் அதிரை ஹிதாயத் எழுதியுள்ள ‘ஒரு பட்டினத்தின் சொல்ல மறந்த கதை’ நாவலைப் படிக்க வெகு ஆவலாக உள்ளேன்.
M.S. அப்துல் ஹமீது

Unknown said...

Mulu pusanikkayai sotril maraikka munainthirukireergal.Aattai kaluthayaga matriyavargalukku ithu ondrum perisalla.

Shaik kayalpatnam

Unknown said...

Kayalpatnam yenra oorilirundu ponavargal than keelakarai vasigalil neraiya per undu . Seethakathi yin pirantha man kayalpatnam

Unknown said...

முதலில் உலக வரைபடத்தை பாருங்கள் காயல் புன்னக்காயல் காயல்பட்டினம் எங்கே இருக்கிறது கீழக்கரை, அதிராம்பட்டினம் தொண்டி எங்கே இருக்கிறது என்று, 3000வருடத்திற்க்கு முன்பு கடல்கோளால் அழியப் பட்ட கொற்கை இப்போது எங்கே இருக்கிறது?மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னன் கொற்கை மதுரையிலா காயல்பட்டினத்தின் அருகாமையிலா? காயல் என்று பஸ் டிக்கெட் எடுத்தால் கீழக்கரையில் அதிராம்பட்டினத்தில் இறக்கிவிடுவானா காயல்பட்டினத்தில் இறக்கிவிடுவானா?அரசு தரப்பில் காயல் என்றால் கீழக்கரை அதிராம்பட்டிணத்தை சொலீகிறதா? காயல்பட்டிணத்தை சொல்கிறதா?ஆறும் கடலும் சேர்கின்ற இடம் (அதாவது சங்க இலக்கியங்கள் கூறும் வற்றாத ஜீவநதி தன்பொருணை ஆறு ) என்கின்ற தாமிரபரணி ஆறு கடலில் கலப்பது கீழக்கரை தொண்டியிலா காயல்பட்டினத்திலா காயலான் என்று கால்பட்டினத்து சொந்தங்களை செல்லமாகஉரிமையோடு நீங்கள் அழைப்பதிலிருந்ததும் அவர்கள் உங்களை கரையான் என்று உரிமையோடு இருவர்களும் அழைப்பதிலிருந்தே தெறிகிறதல்லவா ஆதலால் காயல் கீழக்கரை அதிராம்பட்டினம் தொண்டி நாம் அனைவர்களுமே காயலர்கள்தான்.முற்றுப்புள்ளி வைக்க இந்த உண்மையை ஒத்துக் கொண்டால்தான் இது போன்ற குழப்பமான கட்டுரைகள் தலை காட்டாது ஆகையால் நாம் அனைவர்களும் ஒன்று சேர்ந்து நமது தொல்வரலாற்றை அரசுக்கும் உலகுக்கும் தரவுகளுடன் பறைசாற்றுவோம் வாருங்கள் இன்ஷாஅல்லாஹ்.

Labels

 
TOP