Loading...
Thursday 15 July 2010

அதிராம்பட்டினத்தில் சீன நாட்டு வணிகர்கள்: முனைவர் ராஜா முஹம்மது


தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்கள் அதிரை பற்றி ஆய்வு செய்தளித்த குறிப்புகள்:
(in Chronological Order)


* கி. பி. 8 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே அதிராம்பட்டினத்தில் இஸ்லாம் அறிமுகமாயிற்று. இவ்வூர் தொடக்க கால இஸ்லாமிய மையங்களுள் ஒன்றாகும்.

* கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் வீரசோழபட்டினம் என்று அழைக்கப்பட்டது. (ARE.310 of 1961)

* கி. பி. 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சீன நாட்டு வணிகர்கள் அதிராம்பட்டினத் துறைமுகத்தில் தங்கி வணிகம் செய்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

* அதிவீரராமபாண்டியன் (கி.பி.1564-1606) ஆட்சி செய்ததால், அதிவீரராமன்பட்டினம் என வழங்கி, பின்னர் அதிராம்பட்டினம் என மருவி வழங்குவதாகப் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், தமிழக வரலாற்றில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பிற்காலப் பாண்டிய மன்னன் இவன்.

* கி.பி. 1531 ஆம் ஆண்டிலேயே இவ்வூர் தஞ்சை நாயக்கர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது என்றும், அதிராம்பட்டினம் என அழைக்கப்பட்டது எனவும், 1531 ஆம் ஆண்டுச் செப்பேட்டுச் செய்தியொன்று கூறுகின்றது. எனவே, அதிவீரராமபாண்டியனின் ஆட்சிக் காலத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வூர் அதிவீரராமன்பட்டினம் எனப் பெயர் பெற்றிருந்தது. எனவே, தென்காசி அதிவீரராம பாண்டியனுக்கும் இவ்வூர்ப் பெயருக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

* தஞ்சை நாயக்கர், மராட்டியர் காலத்தில், இவ்வூர் பட்டுக்கோட்டைச் சீமையில் இருந்தது.

* தஞ்சை நாயக்க அரசர் செவப்ப நாயக்கர் (1531-1580), இங்குள்ள செய்கு அலாவுத்தீன் தர்காவிற்கு 1531இல் சர்வமானியமாகப் பெரும் அளவு நிலங்களைக் கொடையாக அளித்துள்ளார் என்பதை இந்த தர்காவில் உள்ள செப்பேடு கூறுகின்றது.

* தஞ்சை மராட்டிய மன்னர் துலஜா (1763-1787) தன் மனைவி மோகனாம்பாள் பெயரில் அமைத்த மோகனம்பாள்புர சத்திரத்தின் (தற்போது
'ராஜாமடம்' என்றழைக்கப்படும் அடுத்துள்ள ஊர்) வருவாயிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை 4500 மோகினிப் பணம் அந்த தர்காவுக்கு அளிக்க உத்தரவிட்டார். இந்தக் கொடை தொடர்ந்து வழங்கப்பட்டதாக 1908 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

* தஞ்சை மாவட்டத்திற்கு அருகிலுள்ள புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த ஸ்ரீ வல்லப்ப அதிவீர ராமனின் ஆட்சிக்குட்பட்டிருந்த இவ்வூர், அதிவீரராமன்பட்டினம் என்று அழைக்கப்பட்டதாக அறிகிறோம்.

* கற்காலக் கல்லாயுதம் ஒன்றினை ராபர்ட் புரூஸ் புட் என்பவர் 1878 இல் இவ்வூரில் கண்டுபிடித்துள்ளார் என்ற தகவல், இவ்வூரின் தொன்மைக்குச் சான்றாகும்.

* 18 ஆம் நூற்றாண்டின் மராட்டிய மோடி ஆவனத்தின்படி, இவ்வூரில் குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் சில: முத்து வணிகரிடமிருந்து முத்துகளைத் திருடியவன் கம்பத்தில் கட்டப்பட்டு, ஆறு கசையடி கொடுக்கப்பட்டான்; பெண்ணின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடியவனைப் பிடித்து விலங்கிட்டு, 2 மாதச் சிறைத் தண்டனையும் 12 கசையடிகளும் கொடுக்கப்பட்டது.

* பிற்காலச் சோழர் காலத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரையில், இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க துறைமுகமாக விளங்கிற்று.

* அரேபியக் கடற்பயணியான 'திமஷ்கி' இவ்வூரை 'அபாத்தூ' எனக் குறிப்பிடுகின்றார்.

* உள்நாட்டிலும், கடல் கடந்த நாடுகளிலும் வாணிபம் செய்துவந்த 'நகரத்தார்' என்ற வணிகக் குழுவினர் இங்கிருந்து வணிகம் செய்துள்ளனர். (ARE 311 of 1961)

* "கல்வி மாண்டவர் கஞன்று வைகிடமாம் செல்லிமாநகர்" என்றும் (பிக்ஹுமாலை), "மதுரைச் சரகமதின் மாநகர் செல்லி" என்றும் (நேர்வழிப் பிரகாசம்) இவ்வூர்ப் புலவர்களால் குறிப்பிடப்பட்டதால், இவ்வூருக்குச் 'செல்லிநகர்' என்ற பெயரும் இருந்தது என்று அறிய முடிகின்றது.

* புலவர் அண்ணாவியார் பாடல்களில், இவ்வூர் 'அதிராம்பட்டினம்' என்றும் 'செழியனூர்' என்றும் குறிக்கப்படுகின்றது.

* அதிராம்பட்டினத்து முஸ்லிம் வணிகர்கள் முத்து வாணிபத்தில் சிறந்து விளங்கினர். பின்னாட்களில் முஸ்லிம்களே இவ்வூர்த் துறைமுகத்தில் கப்பல் வணிகர்களாகவும் கப்பல் உரிமையாளர்களா கவும் இருந்தனர்.

* 1777 ஆம் ஆண்டு எழுதப்பட்ட மராட்டிய மோடி ஆவனம், (இது தற்போது தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது.) இவ்வூரின் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அரிசி, நெல்,ஆடுமாடு கால்நடைகள் போன்ற பொருள்களை ஏற்றிச்சென்ற இவ்வூர் மரைக்காயர்களின் கப்பல்கள், திரும்புகையில் இலங்கையிலிருந்து கொட்டைப் பாக்கை ஏற்றி வந்தன எனக் கூறுகின்றது.

* அதிராம்பட்டினம் ஒரு பழைமையான துறைமுகமாகும். ஆனால், இதன் கரைப்பகுதி முழுவதும் சகதியாக இருப்பதால், கரையிலிருந்து சுமார் 4 மைல் தூரத்தில் கப்பல்கள் நிறுத்தப்படும். சிறிய படகுகள் மூலம் சரக்குகள் கரைக்குக் கொண்டுவரப்பட்டு இறக்கப்படும்.

* துறைமுகத்தைச் செப்பனிட ஆங்கிலேய அரசு பல திட்டங்களை மேற்கொண்டது. இருப்பினும், வெற்றி கிட்டவில்லை.

* முத்துக் குளிக்கும் தொழிலும் இங்கு நடைபெற்றது. ஆனால், குறைந்த அளவிலேயே முத்துச் சிப்பிகள் கிடைத்தன. வணிகத்தில் ஈடுபட்டிருந்த மரைக்காயர்களே இத்தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர்.

* இத்துறைமுகத்தின் ஆழம் குறைவான பகுதிகளிலிருந்து சங்குகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவை மலாக்காவுக்கு (இன்றைய மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்று பிலிப்பைன்ஸின் ஒரு பகுதி) அனுப்பப்பட்டன. சங்கு குளிக்கும் தொழிலாளிகளை ஆங்கிலேய அரசு இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது.

தொகுப்பு: அதிரை அஹ்மது
இன்ஷா அல்லாஹ் தொடரும்....

கருத்து சொல்லிட்டுப் போங்க!!!

9 comments:

Anonymous said...

அருமை அருமை தொடருங்க.....

முஹம்மது பிலால்

அஹமது இர்ஷாத் said...

அறியாத விஷயங்கள், நல்லது தொடருங்கள் வாழ்த்துக்கள்.

ROYAL SON 4 said...

அஸ்ஸலாமு அலைகும் சாச்சா அருமையான தொடரினை( நம்ம ஊர் தொடர்பினை) ஆரம்பித்து இருக்கிறீர்கள் மேலேரிய என் இரு புருவங்களும் கீழ் இறங்க சில நாழி ஆகிவிட்டது.என்மேல் என்றோ அடித்த ஊர் காற்று மருபடியும் வந்து வருடிவிட்டுச்சென்றது போல் உள்ளது.
Mohamed Thasthageer(crown)

அஹ்மது அமீன் said...

உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. நமதூருக்கு இவ்வளவு வரலாறுகள் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. உங்களுக்கு, வாழ்த்து சொல்லும் அதேநேரம் உங்கள் முன் பெரும் பொறுப்பு உள்ளது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

அரிஞர் அஹ்மது காக்கா இதில் கைகோர்த்திருப்பது மிக்க சந்தோஷம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புதிய தகவல்கள்.

நன்றி அஹ்மது மாமா.

தொடருங்கள்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

please removice word verificaion the comments area.

Anonymous said...

வாழ்த்துக்கள் செய்யத் குதுப்

Kavianban KALAM, Adirampattinam said...

புலவர் பஷீர் காக்கா அவர்களின் கட்டுரை; தம்பி ஹிதாய்த்துல்லாஹ்வின் கட்டுரை மற்றும் முனைவர் ராஜா முஹம்மத் அவர்களின் கட்டுரைகளை ஒன்று சேர்த்தால்/கோர்த்தால் ஒன்றுக் கொன்று முரண்படுவதாக அவர்களாலே சொல்லப்படும் “ஐயமுள்ள’ பகுதிகளை நீக்க இயலும்; பின்னர் அப்படி வடிகட்டிய தூய சரிதை மட்டும் மிஞ்சும்; அந்த இறுதி வடிவமே- உறுதியான வடிவம் பெறும்; அதனை நீங்கள் நூலாக வெளியிட்டு அதிரை பைத்துல் மால் மாநாடு அல்லது இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிட்டால் அதுவே நிரந்தரமான ஒரு முயற்சி

வானமே எல்லை said...

Intresting. Generally our pattukkottai area is never appear in history. Eventhough we are located in current Thanjavur district, we do not have any evidence of being ruled by any cholas or any such kings. For that matter more than 50% of previous thanjai dist have no trace of any Cholas rule. May be our area is not cultivable because no cauvery. That may be the reason, only low rung people would have lived in our area with no evidence of famous temple or such kind. Who are we, the people of pattukkottai area? Explore in the context of all relions. Because in those days relions and caste had more implication in our social life.

Mostly vague info only avilable. Please explore and bring truth

Labels

 
TOP