அதிராம்பட்டினம் ஊரும் பேரும் – ஒரு மீள்பார்வை 01 -அதிரை அஹ்மது
அதிராம்பட்டினம் ஊரும் பேரும் – ஒரு மீள்பார்வை
அன்புள்ள அதிரைச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
அண்மையில், 'அதிரை எக்ஸ்பிரஸ்' எனும் நமதூர் வலைத் தளத்தில், நமதூரின் வரலாற்றுப் பின்னணியை ஆய்வு செய்வதற்கான கருத்தூட்டம் வெளிவந்தது. அது பற்றிய நமதூர் வாசகர்களின் ஆர்வம் மிக்க பின்னூட்டங்களும் வந்தன. நானும் எனது கருத்தையும் பரிந்துரையையும் அதில் பதிவு செய்திருந்தேன்.
அண்மையில் நமதூரில் நடந்து முடிந்த இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டின் வரலாற்று ஆய்வுக் கருத்தரங்கில், நமதூரைச் சேர்ந்த புலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் எம். ஏ., எம். எட். அவர்கள் தமது ஆய்வுக் கட்டுரையை வாசிக்க இருந்ததால், அதனையும் கேட்டு, அதிலிருந்தும் கிடைக்கும் அரிய தகவல்களை அறியத் தருவதாகவும் வாக்களித்திருந்தேன்.
அந்த ஆய்வரங்கின் தலைவராக, தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்கள் பங்களிப்புச் செய்ய இருப்பதாக அறிந்தவுடன், அவர்களை நான் நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்கள் தாம் ஆயத்தமாகக் கொண்டுவந்திருந்த தமது 'அதிரை பற்றிய ஆய்வுக் குறிப்பு'களை என்னிடம் தந்தார்கள். அவற்றை நான் கால அடிப்படையில் (Chronological order) வகைப்படுத்தி வைத்துள்ளேன்.
அதனையும், பஷீர் ஹாஜியாரின் அருமையான ஆய்வுக் குறிப்புகளையும் சேர்த்து ஒன்றாக அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளேன். பஷீர் ஹாஜியாரிடம் குறிப்புகளைக் கேட்டபோது, அவர்கள் இன்னும் சில திருத்தங்கள், இணைப்புகள் செய்து சேர்த்துத் தருவதாக வாக்களித்தார்கள்.
இந்நிலையில், அதிரை பற்றிய இந்த ஆய்வை விரிவாகவும் வருங்காலச் சந்ததிகளுக்குரிய பாடமாகவும் அமையும் விதத்தில் அமைக்கவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுகின்றது. இப்பெருந்திட்டத்தில் தனியார் யாரும் போட்டி மனப்பான்மையுடன் இறங்கிச் செயல்படுவதைவிட, கூட்டு முயற்சியில் இதனைச் செய்வதுவே மிக நன்று என எண்ணுகின்றேன். அதற்காகக் கீழ்க்காணும் எனது பரிந்துரையை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்:
* அறிஞர்கள், ஆர்வலர்கள் இணைந்த ஆய்வுக் குழுவொன்று அமையவேண்டும்.
* வாசகர்கள், ஆர்வலர்கள் அவ்வப்போது தரும் பின்னூட்டங்களைப் பதிவு செய்து, அவர்களின் பெயர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
* நமதூரைச் சாராத ஆய்வறிஞர்களின் கருத்தூட்டங்களையும் நன்றியுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.
* இவ்வாறு அமையும் தரமான ஆய்வுகளின் முடிவை அடைந்த பின்னர், தகவல்கள் அனைத்தையும் தொகுத்து நூலுருவாக்க வேண்டும்.
* கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்திருக்கும் எல்லா அமைப்பினரும் இந்தப் பொது நோக்கத்தில் பங்களிப்புச் செய்யவேண்டும்.
* நூலை எனது 'அதிரைப் பதிப்பகம்' என்ற பெயரில் வெளியிடலாம்; ஆனால், அதன் உரிமைக்கு நான் சொந்தம் கொண்டாடமாட்டேன்.
* நூல் அச்சிடும் செலவுகளை ஆர்வமுள்ள நமதூர்ச் சகோதரர்கள் ஏற்கலாம்.
* இன்னும் பல...
வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அன்புடன்,
அதிரை அஹ்மது
தொடரும்....
4 comments:
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..
நாச்சிகுலத்து பல்லக்கு தூக்கிகள் அதிரரையில் குடியேறி தங்களை மரக்காயர்கள் என்று அழைத்துக்கொண்டதை அஹமது காக்கா விரிவாக எழுதுவார்கள் என்று எதிபார்ப்போம்
Post a Comment