Loading...
Sunday 13 March 2011

ஷெய்குனா ஒரு தவ்ஹீத்வாதி! அதிரை அஹ்மது

ஷெய்குனா  ஒரு தவ்ஹீத்வாதி!  அதிரை அஹ்மது

இதற்குமுன்  இந்த 'அதிரை வரலாறு' வலைத்தளத்தில், "முத்துப்பேட்டையின் முத்து; அதிரையின் சொத்து" என்ற தலைப்பிலான கட்டுரை ஒன்றை வாசித்திருப்பீர்கள்.  அந்தக் கட்டுரை நாயகர்தாம், 'ஷெய்குனா' எனும் சிறப்புப் பெயரைப் பெற்ற அதிரைப்பட்டினத்தின் மாமேதை அல்லாமா அஹமது லெப்பை (ரஹ்) அவர்களாவர்.  அன்னார் பற்றிய சில குறிப்புகள் அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.  இன்னும் சில அரிய தகவல்கள் அண்மையில் கிடைத்தன.  அவற்றுள் ஒன்றுதான், அன்றையக் கால கட்டத்தில் – அன்னாரின் இளமை முதலே அவர்கள் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையாம் 'தவ்ஹீத்' என்ற அடிப்படையில் உறுதி மிக்க உலமாக்களுள் ஒருவராகத் திகழ்ந்ததுவும், தம் பிறந்தகமான முத்துப்பேட்டையிளிருந்து அதிரைக்குப் புலம்பெயர்ந்ததற்கான காரணமும் அதுவே என்பதும், எனது அண்மைய ஆய்வின்போது தெரிய வந்தது!

      மேற்கண்ட  தகவலை எனக்குத் தந்தவர், ஷைகுனா (ரஹ்) அவர்களின் நெருங்கிய உறவினர்; முத்துப்பேட்டைக்காரர்; நான் ரியாதில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தோழமையானவர்;  ஷைகுனா அவர்களின் உறவினர்; ஷைகுனாவின் மைத்துனர் மகன்; பெயர் செய்யது அஹமது.  அவர் தற்போது மாசி, கடல்பாசி முதலான பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.

      அண்மையில் நானும் அவரும் ஒன்றாகப் பேருந்தில் முத்துப்பேட்டைக்குச் சென்றுகொண்டிருந்தோம்.  பேச்சு வாக்கில், ஷைகுனா அவர்களுக்கு செய்யது அஹமது காக்கா அவர்கள் என்ன உறவு எனக் கேட்டேன்.  மேற்கண்ட உறவு முறையைச் சொன்னார்.  கூடவே, தலைப்பில் காணும் தகவலையும் சொன்னார்.  நான் ஆர்வத்துடன் செவி தாழ்த்திக் கேட்டேன்.

      எனது  முந்தைய கட்டுரையில்  உள்ள விவரப்படி, ஷைகுனா அவர்கள்  வானியல் கலையில்  திறமை பெற்றிருந்ததோடு, இஸ்லாத்தின்  அடிப்படையான 'தவ்ஹீத்' கொள்கையில் மிக  உறுதியானவராகவும் விளங்கியுள்ளார்கள் என்பது, எங்களின் அன்றைய உரையாடல் மூலம் புலப்பட்டது.  தமது பிறந்தகமான முத்துப்பேட்டையில் அடக்கமாகியுள்ள இறைநேசர் ஷைகு தாவூது வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கபுரடியில் நாளுக்கு நாள் 'ஷிர்க்' எனும் இணை வைப்புச் சடங்குகள் கூடி வந்ததை நம் ஷைகுனா அவர்கள் கண்டு, தனிமையில் கண்ணீர் வடித்தார்கள்; போதனை செய்து பார்த்தார்கள்; எச்சரிக்கை செய்தார்கள்; மக்கள் செவி மடுத்ததாகத் தெரியவில்லை!

      அன்னாரின் போதனை ஓர்  அளவை எட்டியபோது, அங்கிருந்த பாமரர்கள்  ஆவேசம் கொண்டனர்!  அடிக்கத் துரத்தினர்!  'இந்த ஊரை விட்டு, அதிரைக்குச்  செல்வதே சிறந்தது' என முடிவெடுத்து, அதிரைக்குப் புலம் பெயர்ந்து அறிவுப் பணியைச் செய்யத் தொடங்கினார்கள்.

     

      இனிவரும்  தகவல்கள், முந்தையப்  பதிவுக்குச்  சற்றே மாற்றமாக இருக்கலாம்.  முந்தையது, 'கீல்-கால்' என்று அரபியில் சொல்வது போன்று, யார் யாரோ சொன்னார்கள்  என்ற செவிவழித்  தகவல்களைச் சான்றாகக் கொண்டு திரட்டிய தகவல்களின் தொகுப்பான 'அதிரை கலைக் களஞ்சியம்'  என்ற மலரின் அடிப்படையில் பதியப்பட்டதாகும்.  ஆனால், தற்போது நான் பதிய வருவது, மேதகை ஷைகுனா அவர்களின் நெருங்கிய உறவினரும் முதியவருமான ஒருவரிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களாகும்.  அதனால், இது ஒரு First-hand Report என்றுகூடச் சொல்ல முடியும்.

      அதிரையில் வந்து அறிவுப்  பணியைச் செய்துவந்த ஷைகுனா அவர்களுக்கு  ஒரு வினோதமான ஆவல் பிறந்தது.  அதாவது, தவ்ஹீதின்  உறைவிடமான சஊதி அரேபியாவுக்குச்  செல்லவேண்டும்  என்ற ஆசை!  எப்படிப் போவது?  சிந்தித்த  ஷைகுனாவுக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றியது.  பயணத்தைக் கட்டினார்கள் பம்பாய்க்கு!  அங்கு சென்றபின் எங்கே தங்குவது?  இருக்கவே இருக்கிறது, 'ஹஜ் கமிட்டி' என்று முடிவு செய்து, பம்பாய் போய்ச் சேர்ந்தபின் அங்கேயே தம் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார்கள்.  என்ன செய்வது?  மார்க்க அறிஞருக்குப் பணியா இல்லை?  தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் அங்கு வரும் ஹஜ்ஜுப் பயணிகளுக்கு ஹஜ் வழிகாட்டல்களைப் பயிற்றுவிக்கும் பணியை மேற்கொண்டார்கள்.

      ஓரிரு ஆண்டுகளின் போதனைப்  பணிக்குப் பின், அன்னாரின் கனவு நனவாகும் விதத்தில், அங்குப் பயணமாகி வந்திருந்த வசதி படைத்த ஹாஜி ஒருவர் தன்னுடன் ஷைகுனாவையும் மக்காவுக்கு அழைத்துச் சென்றார்!  முதலாவதாக மக்காவில் தமது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு, அங்கேயே தங்கி மார்க்கக் கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பை எதிர் நோக்கி இருந்தார்கள்.

      இந்தியாவின் பெருந்தனக்காரப்  பெண்ணான சவ்லத்துன்னிசா பேகம் அவர்களின் பொருளுதவியால் தோற்றுவிக்கப்பட்ட 'சவ்லத்திய்யா மதரசா'வில் சேர்ந்து, மார்க்க உயர்கல்வியைக் கற்கத் தொடங்கினார்கள்.  அங்கேயே 11 ஆண்டுகள் கழிந்தன.  அந்தக் காலகட்டத்தின்போதுதான் மக்காவில் அவர்களின் முதல் திருமணம் நிகழ்ந்திருக்கலாம்.  கல்வி கற்கும் நேரம் போக எஞ்சிய நேரங்களில், குறிப்பாக ஹஜ்ஜுக் காலங்களில், தமிழ் பேசும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக (முஅல்லிமாக) சேவையும் செய்துவந்தார்கள்.  இறைவனின் விதி, தன் வேலையைச் செய்யத் தொடங்கிற்று! 

      அதிராம்பட்டினத்தில் திருமணம் செய்திருந்த தம் தாய் மாமாவை ஒரு நாள் ஹாஜிகளின் கூட்டத்தில் சந்தித்தார்கள் நம் ஷைகுனா! "அடே!  நீ சேகனாதானே?" என்று வியப்புடன் அடையாளம் கண்டு கட்டிப் பிடித்த மாமாவிடமிருந்து விடுவித்துக்கொள்ள விரும்பாத நம் ஷைகுனா அவர்கள் தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, "ஆமாம்" சொல்லி வைத்தார்கள்.  அந்த மாமாதான் தம் மருகனை வற்புறுத்தி, ஹஜ் கடமை முடித்தபின் தம்முடன் ஊருக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.  இந்தியாவுக்கு வந்து, சென்னையிலிருந்து ஊருக்குத் தம்முடன் வந்த மருமகனை முத்துப்பேட்டை புகைவண்டி நிலையம் வந்ததும் இறங்கச் சொன்னார்கள் மாமா.  தம்மை அவமதித்துத் தமது ஓரிறைக் கொள்கையை ஏற்காத அந்த மண்ணை மிதிக்க அன்னாருக்கு மனமில்லை; அதனால், அங்கு இறங்க மறுத்துவிட்டார்கள்!  எனவே, அதிரைக்கு அவ்விருவரின் பயணம் தொடர்ந்தது.

      அதிரைக்கு வந்து சேர்ந்த  பின்னர், அந்த அரபு நாட்டு மருமகனுக்குத்  தன் மகளை மணமுடித்து வைத்துக் 'கால்கட்டு'ப் போட்டார்கள் ஷைகுனாவின் மாமா! இறுதிவரை அதிரைப்பட்டினமே அவர்களின் தாய் மண்ணாயிற்று.

      அன்று நம் ஷைகுனா ஒரு  வேளை தமது பிற்கால  வாழ்வில் தம்  பிறந்தகத்திற்காக 'துஆ' செய்துமிருக்கலாம்.  அதன் விளைவாக இன்று முத்துப்பேட்டையில் தவ்ஹீது தழைத்தோங்கி வளர்கின்றது!  அல்ஹம்து லில்லாஹ்!

1 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை வரலாறு பொலிவு கூடுகிறது !

தேடித் தரும் அற்புத வரலாற்று சான்றுகள் என்றும் காலத்தால் போற்றிப் பாதுகாக்கப் படவேண்டி பொக்கிஷங்கள் !

Labels

 
TOP