Loading...
Sunday 6 March 2011

தொட்டியம்பள்ளி – பூர்வீக அதிரை! அதிரை அஹ்மது

இன்று (06/03/2011) ஏ. எல். எம். பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது.  இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நம் 'அதிரை அறிஞர்' புலவர் அஹமது பஷீர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.  விழாவுக்கு முதல் நாளே வந்துவிட்டதால், இருக்கும் நேரத்தை ஒரு பயனுள்ள முயற்சியில் செலவழிக்கலாம் என்ற கருத்தைப் புலவரவர்கள் வெளியிட்டார்கள்.  நாமும் அதை வரவேற்றோம்.  எங்கள் பயணம், ஊரின் மேற்குப் பகுதியை நோக்கித் தொடர்ந்தது! 


"வாருங்கள், 'தொட்டியம்பள்ளி'யைப் பார்த்து  வருவோம்" என்ற புலவரவர்களின்  அன்புக் கட்டளையை ஏற்று, நாம் அதுவரைக் கேட்டிராத அந்தக் கிராமத்தை நோக்கி எமது வாகனம் நகர்ந்தது.  இராஜாமடம் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, ராஜாமடம் ஏரிக்கு முன்னால் வலப்பக்கம் செல்லும் சாலையில் வாகனம் திரும்பிற்று. 


சற்று நேரத்தில், 'தொட்டியம்பள்ளி' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்து, வலப்பக்கம் திரும்பிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.  சிறிது தொலைவு வந்தபின், குடியானவர் ஒருவரைச் சந்தித்தோம்.  அவர் பெயர் தங்கராசு என்பதைக் கேட்டறிந்தோம்.  "ஐயா, இந்த ஊர்தானா, தொட்டியம்பள்ளி?" என்று கேட்டபோது, "ஆமாங்க" என்றார்.  "இங்கு பழைய இடிபாடுகள், கட்டடங்கள். சத்திரம், கோயில் ஏதாவது உண்டா?" என்று கேட்டபோது, 'இல்லை' என்ற பதிலே அவரிடமிருந்து வந்தது. 


"இந்த  ஊரில் வயசானவங்க யாராவது  இருக்காங்களா?" என்று கேட்டபோது, "ஏன் இல்லை?  எங்கம்மாவே  இருக்கே; அதுக்கு இப்போ  நூத்திப் பதினஞ்சு வயசு" என்று அவர் மறுமொழியளித்தபோது, எங்கள் ஆர்வம் கிளர்ந்து எழுந்தது!  அந்த அம்மா இருக்கும் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்தபோது, "இதோ, பக்கத்திலேதான்" என்றார் தங்கராசு.  "உங்களுக்கு அவசரமான வேலையில்லை என்றால், எங்களோடு வந்து அவரைக் காட்ட முடியுமா?" என்றவுடன், ஆர்வத்துடன் அவர் எங்கள் வாகனத்தில் ஏறிக்கொண்டார்.


வண்டி, பட்டுக்கோட்டை-இராஜாமடம் சாலையில் தன் போக்கை மாற்றியது.  "அதோ, அந்த தொறந்த கேட்டுதான்" என்று அவர் சொன்னவுடன், வண்டியை நிறுத்தி, வீட்டினுள் நுழைந்தோம்.  வாசல் திண்ணையிலேயே அந்த அம்மா – செங்கமளம் – வீற்றிருந்தார்.
அந்த  வயதிலும், அவர் தெளிவாகப்  பேசினார்:  "எங்க ஊட்டுக்காரரு மலையாளத்து நாயருங்க.  எப்படியோ இந்த ஊருக்கு வந்தவர், என்னை விரும்பிக் கட்டிக்கிட்டார்.  அப்போ, நானு மைலாங்கோட்டை (மகிழன்கோட்டை) ரயில்வே கேட்டுக்குப் பக்கத்திலே கடை வச்சிருந்தேன்....." என்று அந்தக் கிழவியம்மா சொல்லிக்கொண்டு வந்தபோது, புலவர் பஷீர் அவர்கள், "அட, நீங்கதான் அந்த அம்மாவா?  நான் சின்னப் பையனா இருந்தபோது, எங்கள் குடும்பத்து வயக்காட்டுக்கு அந்தப் பக்கம் வருவேன்; உங்கள் கையால் கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்" என்று வியப்புடன் கூறினார்கள்.


தொடர்ந்த  அந்த மூதாட்டியின் உரையாடலிலிருந்து இன்னும் சில தகவல்களும் கிடைத்தன.  பின்னர் நாங்கள்  அதற்கடுத்த வீட்டில் முஸ்லிம் ஒருவர் வசிப்பதை அறிந்து, அப்பக்கம் நகர்ந்தோம்.  அவர் பெட்டிக்கடை வைத்து நடத்துகின்றார்.  பெயர் அப்துல் காதர்.  பூர்வீகம் பட்டுக்கோட்டையாம்.  அவர் அக்கிராமத்துப் பூர்வீகக் குடிமகன் அல்லர் என்றறிந்த பின்னர், அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியதம்பி என்ற பெரியவரிடம் நாம் வந்த நோக்கத்தைக் கூறி, அவருக்கு ஏதாவது விவரம் தெரியுமா எனக் கேட்டோம்.    


"இந்த ஊர்ல கம்பங்காய் மரைக்கார் என்பவர்தான் முதன்முதலில் குடியேறினார்.  ராஜராஜ சோழன் ஆண்டபோது, அவரிடம் வேலை செய்தவர்.  ஒரு நால் ராஜா இந்தப் பக்கம் வந்தபோது, தன் பேத்தியைத் தோளில் தூக்கி வைத்திருந்த மரைக்காயர், லேசாக அக்குழந்தையின் தொடையைக் கிள்ளி விட்டாராம்.  குழந்தை அழுதது.  "ஏன் குழந்தை அழுகிறது?" என்று ராஜா கேட்டபோது, "தனக்குச் சொத்து வேண்டும் என்று அழுகிறது" என்றார் மரைக்காயர்.  "அப்படியா?  இந்தப் பகுதி முழுவதும் (தொட்டியம்பள்ளியும் தொக்காளிகாடும்) உன் பேத்திக்குத்தான்" என்று மானியமாக எழுதிக் கொடுத்தாராம் ராஜராஜன். 


இவ்வாறு பரம்பரை பரம்பரையாகத் தம்  மூதாதை உதுமான் மரைக்காயர் வழியாகத் தமது குடும்பமான அ. மு. க. குடும்பத்துப் பூர்வீகச்  சொத்தாக அந்தக் கிராமம் முழுவதும் இருந்ததாகவும், தாம் பள்ளி மாணவராயிருந்தபோது அடிக்கடி அப்பகுதிக்கு வந்துபோய்க் கொண்டிருந்தது பற்றியும் புலவர் பஷீர் அவர்கள் கூறியபோது, அதிரைப்பட்டினத்துப் பூர்வீகக் குடிமகன்களுள் அவரும் ஒருவர் என்பது வரலாற்று அடிப்படையில் உறுதியாயிற்று. 
"அதிவீரராம  பாண்டியனுக்கும் இந்தச்  சோழ மண்ணுக்கும் ஏதாவது  தொடர்பு உண்டா?" என்று  கேட்டபோது, "இருக்கலாம்; சில  காலம் இந்தச் சேர சோழ  பாண்டிய மன்னர்கள் பெண் எடுத்துப் பெண் கொடுத்தும், சில காலம் சண்டையிட்டும், ஏதாவது ஒரு தொடர்பில் இருந்துள்ளனர்" என்ற விளக்கமும் கிடைத்தது.
                         -அதிரை வரலாற்றின் ஆய்வு  தொடர்கின்றது.     

6 comments:

அபூ சுஹைமா said...

இன்ட்ரஸ்டிங்.

அதிரையின் குடும்ப வேர்களை ஓரளவு அறிந்திருந்த என் தந்தையாரை வைத்து Family Tree உருவாக்க வேண்டும் என்று நினைத்து இயலாமலேயே போய்விட்டது. அதிரையின் இரு புலவர்களும் இணைந்து அதிரையின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டுகிறேன்.

தவிர, வாவன்னா குடும்பம் அபூபக்ரு (ரளி) அவர்களின் வழிவந்தவர்கள் என்றும் இதற்கான ஆதாரம் அமீன் மாமாவிடம் உள்ளது என்றும் என் தந்தையார் கூறக்கேட்டுள்ளேன். இதனையும் ஆவணப்படுத்த வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மீண்டும் உணர்வுக்குள் உறவாட வருகிறது அதிரை வரலாறு...

அருமையான தோன்றல்களின் தோண்டல் அற்புதம்...

அபூ கதீஜா said...

மிக சுவாரசியமானவை,

எங்கள் குடும்பத்துக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறதா என்பதை கேட்கவே வியப்பாக உள்ளது. எனது அப்பாவை பலமுறை சந்தித்தும் வரலாறை கேட்டு அறிய முடியாத சூழ்நிலை. இனி ஊருக்கு போனால என்னால் எவ்வளவு தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிரை வரலாறு குழுவுக்கு நன்றிகள் பல.

adirai nalan said...

குழந்தை அழுததும் ராஜ தொட்டியம் பள்ளியை குழந்தைக்கு எழுதி கொடுத்தார் என்பது நடைமுறை சாத்தியமா? அந்த அளவுக்கு ராஜா யோசனை இல்லாதவரா? அப்படியோ குழந்தை மீது அன்பு உள்ளவராக இருந்தால் குழந்தை இடமே கேட்டு இருக்கலாம் நீ ஏன் அழுகின்றாய் என்று.....

மரைக்காயர் ராஜாவிடம் பொய்யை சொல்லி சொத்தை எழுதி வாங்கியது போன்ற ஒரு தோற்றத்தை உங்கள் கட்டுரை சித்தரிகின்றது

Unknown said...

தம்பி 'அதிரை நலன்'!

நான் நேரில் இருவர் (கிராமவாசி, புலவர் பஷீர் அவர்கள்) மூலம் கேட்டதைத்தான் எழுதினேன்.

உங்கள் அடுத்த 'கருத்து'க்கு வருவோம்: ராஜா தன் அரண்மனையிலிருந்து ஆட்சி செய்தவர். இங்கு கிராம நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திய அந்த மரைக்காயரின் தேவையை அதுவரை உணராமல், அல்லது நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். மரைக்காயரும், ராஜாவிடம் கேட்டுப் பெறத் தயங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். ராஜா தன் கிராமத்துக்கு வந்ததைத் தருனமாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்த உத்தியைச் செய்திருக்கலாம். இது போன்று பல காரணிகளைக் கற்பனை செய்ய முடியும். இன்று நவீன உலகில் ஆட்சி செய்யும் எத்தனையோ ராஜாக்களை நாம் விமரிசிக்கவில்லையா? அது போன்று, அந்த ராஜாவிடமும் குறை இருந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், சரியான ஆவணங்கள் இல்லாமல் வரலாறுகள் பதிவாகும் இச்சூழலில், இப்படியும் கருத்துகள் கொள்ள வாய்ப்புண்டு. கிடைக்கும் தகவல்கலைத் தொகுத்துப் பின் அவற்றை எடிட் பண்ணி, நூல் வடிவில் ஆக்கும்பொது, கொள்வன கொண்டு, களைவன களைந்து அதிரை வரலாற்றைப் படைத்தளிக்கலாம், இன்ஷா அல்லாஹ். காத்திருங்கள்.

அதிரை தகவல் said...

assalamualaiykum., masha allah. Really awesome. Keep it up brotherz.., ur blog was realy vry useful to knw abt adirai., exspcly adiviraramapandian research was realy amazing., and insha allah muthal muthalil adiraiyil katiya veedu(aasaram endru solapadum/beach st) and muthal palli(maraikapalli) thahlan maraikayer patriya varalaru. Melum abuhuraira ral avargalin vamsavali inum thodarvathaha kealvipatulen adukurithum edhirparkindrom.

Labels

 
TOP