Loading...
Friday 20 July 2012

அதிரை ஊரும் பெயரும் – 2


அதிரை ஊரும் பெயரும்  2
-          (மர்ஹூம்) ‘தமிழ்மாமணி’, புலவர் பஷீர், எம்.ஏ., எம்.எட்.    -

அரபு நாட்டின் தென் பகுதியிலிருந்து வந்தவர்கள் யமனிகள். யவனர் என்று தமிழ் இலக்கியங்களிற் குறிக்கப்படுபவர் இவர்களே.  யமனிகள் நெடுங்கால முதலே தமிழகத்தோடு தொடர்புடையவர்கள். தமிழரோடு உவு பூண்டவர். நபிகள் நாயகத்தின் தோற்றத்தை அடுத்து, இஸ்லாத்தின் இனிய கொள்கைகளைத் தாங்கி வந்த வணிகர்கள் தம் சமயத்தையும் பரப்பினர்.  யமனிகள் நீர் நிலைகளுக்கு அருகில் அழகிய மாளிகை போன்ற வீடுகளைக் கட்டி வாழும் நாகரிகம் உடையவர்.

                             
 யவாய் மருங்கின் காண்போர்த் தடுக்கும்
                              பயனறவு அறியா யவனர் இருக்கையும்..


பார்ப்பவர் மயங்கி மேற்செல்லாதவாறு திகைத்து நிற்கச் செய்யும் யவனர்களின் இருப்பிடங்கள் என்று சிலப்பதிகாரம் கூறும்.  புகார் கடல் கொள்ளப்பட்ட பிறகு இடம் பெயர்ந்தவர் வாழத் தொடங்கிய ஊர்களில் பந்தர் என்ற மஹ்மூது பந்தரும், அதிரையும் முக்கியமானவை.

பூம்புகாரில் இருந்து குடிபெயர்ந்த யமனிகள்  பந்தர் என்னும் மஹ்மூது பந்தரிலும் அதிரையிலும் குடியேறினார்கள். இவ்வூர்களுக்கிடையில் நீண்ட காலம் கொள்வினை, கொடுப்பினை இருந்துவந்தது.  அலித்தம்பி மரைக்காயர், உதுமான் மரைக்காயர் போன்று அதிரையிலும் வாழ்ந்தவர்கள் பரங்கிப் பேட்டை மரைக்காயர் எனப்பட்டனர். சோழப் பேரரசின் காலத்தில் அதிரை வீரசோழபட்டினம் என்று அழைக்கப்பெற்றது.

யமன் நாட்டின் ஹள்ரமவ்த் பகுதியிலிருந்து வந்த அரபுகள் தம்மை ஹள்ரமீ எனக் கூறினர். அதுவே நாளடைவில் அதிரமீ பட்டினம், அதிராம்பட்டினம் எனப்பெற்றது. வீரராஜேந்திர சோழனின் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு. ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃபின் காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு. அதற்கும் முந்தியது அரபுகளின் குடியேற்றம்.  எனவே, ஹள்ரமீபட்டணம்’ என்பதே முன்னதாகும். அரபுகளின் பயணக் குறிப்பில் இவ்வூர் அபதான்அபதான் பத்தன்அபாத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரையின் கிழக்கே செல்லியம்மன் கோயில் வரை கடல் இருந்ததாகவும், அம்மனின் கால்களைக் கடல் அலைகள் வருடிச் சென்றதாகவும் துறவி ஒருவர் கூறியதாக இக்கட்டுரையாசிரியரின் ஆசிரியர் திரு. சம்பந்தமூர்த்தி செட்டியார் அவர்கள் குறிப்பிட்டார். மேற்கே ‘ஜாவியா’ அருகில் இருக்கும் தக்வாப் பள்ளி எல்லை வரை கடல் இருந்ததாக நடுத்தெருவில் வாழ்பவர் பலர் குறிப்பிடுவதுண்டு. இரண்டு எல்லைகளும் ஒரே நேர்க்கோட்டில் அமைபவை.  உள்வெட்டை, வெளிவெட்டை, புதுக்குடி (இன்றைய கா.மு. கல்லூரிப் பகுதி) உப்புப் பொரிந்த உகட்டு நிலமாக இருப்பது கடல் அதுவரை இருந்ததற்கான சான்றுகள்.  (வெட்டை = திறந்த வெளி).


திருப்புல்லாணி சேதுக்கரைக் கடலில் தொடங்கும் சேது சாலை அதிரையின் ஊடே சென்று கடற்கரைப் பகுதியையும், குடிக்காட்டுப் பகுதியையும் (பழைய பூம்புகாரில் அமைந்திருந்த பட்டினப்பாக்கத்தையும் மருவூர்ப்பாக்கத்தையும் போல) இரண்டாகப் பிரிக்கின்றது.  ஊருக்கு மேற்கே இருப்பது மின்வெட்டி வெள்ளைக் குளம். அதன் மேற்புறத்தில் தொட்டியம் பள்ளி.  தொட்டியம் என்னும் சொல்லுக்கு முத்துச் சிப்பிகளின் சந்தை என்பது பொருள்.  அங்கு இஸ்லாமியரின் குடியிருப்புகளும் தொழுகைப் பள்ளிகளும் இருந்தன.  அதுவே பழைய அதிராம்பட்டினம் என்றார் மறைந்த அ.மு.க. ஹனீஃபா ஹாஜியார் அவர்கள். அதிரையின் முக்கியத் தொழிலாக இருந்தது முத்துக் குளிப்பது, சங்கெடுப்பது. அரிதாகக் கிடைக்கும் வலம்புரிச் சங்குகள் ஆரம்பத்தில் அதிக அளவில் கிடைத்தன.  அ.மு.க. குடும்பத்தினர் முத்துச்சலாபம் எடுப்பதற்கு அரசுரிமை பெற்றிருந்தனர்.

ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுப் காலத்தில் (ஹிஜ்ரி முதல் நூற்றாண்டு  அதாவது, கி.பி. ஏழாம் நூற்றாண்டு) அரபகத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பம் காரணமாக ஆடவரும்பெண்டிருமாய் ஐந்து கப்பல்களில் ஏறி அதிராம்பட்டினம், கீழ்க்கரை, காயற்பட்டணம், பழவேற்காடு, இலங்கையில் உள்ள பேருவளை, கர்நாடகாவில் உள்ள பட்கல் ஆகிய ஊர்களில் கரையிறங்கி வாழத் தொடங்கினர்.
                                                                              
ஆரம்ப கால அதிரையில் சைவச் செட்டிகளே அதிகம் வாழ்ந்தனர். பழஞ்செட்டித்தெரு, செட்டித் தெரு, செட்டியார் குளம், செட்டித் தோப்பு ஆகியவை இதனை மெய்ப்பிக்கும். இவர்கள் பூம்புகார்ப் பகுதியில்ருந்து குடியேறிவர் ஆகலாம்.  இன்றும் இவர்கள் பூம்புகார்ப் பகுதியாகிய பூந்தோட்டம், மாயூரம் மக்களுடனேயே கொள்வினை, கொடுப்பினை வைத்துக் கொண்டுள்ளனர்.  முற்காலத்தில் வாணிகச் சாத்தினை நிறுவி வணிகம் செய்து வந்தனர்.  அரபுகளின் பற்றிடம் மேற்கே தொட்டியம் பள்ளியிருந்த பழைய அதிரையே என்று துணிந்து கூறவும் இயலும்.  மரைக்காயர் பள்ளி கட்டப் பெற்ற பிறகு, தொட்டியம் பள்ளியில் வாழ்ந்த அரபு வம்சத்தாரும் பிறருமாகிய முஸ்லிம்கள் குடியேறிய இடம் குடிக்காடு எனப்பட்டது என்றார் அ.மு.க. ஹனீஃபா ஹாஜியார். தொட்டியம் பள்ளி உருவாகிய அக்காலத்திலேயே கடல் பின் நோக்கிப் போய், வத்தைக்காரன் தெரு, கரையூர் தெரு, கடற்கரைத் தெரு ஆகியவை தோன்றியிருக்க முடியும்.

தென்பாண்டி நாட்டிலும் கேரளத்திலும் போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரர்களும் செய்த அட்டூழியத்தின் காரணமாக கி.பி. 1435இல் காயற்பட்டணம், கீழக்கரை, கொல்லம் ஆகிய ஊர்களிலிருந்து வந்து முஸ்லிம்கள் இந்தப் பகுதியில் கூட்டம் கூட்டமாகக் குடியேறினர்.   ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் காலத்தில் கி.பி.700-ல் அரபகத்தை விட்டு வெளியேறி ஆண்டுகள் ஆயிரத்து மூன்னூற்றைக் கடந்துவிட்ட போதும், இந்த ஊர்க்காரர்கள் தமக்குள் உறவு பாராட்டிக் கொள்வதை இன்றும் காணலாம். பட்கல் தவிர எஞ்சிய பகுதியினர் தமிழையே தாய் மொழியாகக் கொண்டு தமிழ் மொழிக்கேற்ப அரபி எழுத்தில் சில மாற்றங்களைச் செய்து தமிழையே எழுதி வந்தனர்.

1 comments:

சேக்கனா M. நிஜாம் said...

அதிரைப்பட்டினதைப் பற்றிய அறியத் தகவல்கள் !

படிக்க ஆவலாக உள்ளேன் !

Labels

 
TOP