Loading...
Sunday, 8 August 2010

அதிரை - ஊரும் பேரும் - தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அ. அஹ்மது பஷீர்

                 இந்த ஆய்வுக் கட்டுரை, அண்மையில் நமதூரில் நடந்த இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் நமதூரைச் சேர்ந்த தமிழாசிரியர், 'தமிழ்மாமணி', புலவர் அ. அஹ்மது பஷீர், எம்.ஏ., எம்.எட். அவர்களால் வாசித்தளிக்கப்பட்டது.  இக்கட்டுரையை இதற்கான தனியமர்வில் வாசித்து விளக்கமளித்தபோது, புலவரவர்கள் பழமையான சான்றுகள் பலவற்றைப் படங்களின் மூலமும் காட்சிப் பொருள்கள் மூலமும் எடுத்துரைத்தார்கள். 

        இக்கட்டுரையை  அதிரை வரலாற்றில் இணைத்துக்கொள்ள அன்னாரிடம் அனுமதி கோரியபோது, இன்னும் சில புதிய தகவல்களையும் திருத்தங்களையும் சேர்த்துப் பின்னர் தருவதாகத் தொகுப்பாளனாகிய என்னிடம் தெரிவித்தார்கள்.  பல முறை அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றும், கிடைக்கவில்லை.

        எனவே, மாநாட்டு 'ஆய்வுப் பேழை'யில் ஏற்கனவே பதிவு பெற்றுக் கையிலிருக்கும் இக்கட்டுரையைத் தொகுத்தளிப்பது சாலச் சிறந்தது என முடிவு செய்து, வாசகர்களின் அறிவுப் பசிக்கு அறுசுவை உணவாக்குவதில் மகிழ்வடைகின்றேன்.  பின்னர் திருத்தம் அல்லது புதிய இணைப்பு வரும்போது, சேர்த்துக்கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.                            - தொகுப்பாளன்: அதிரை அஹ்மது
   
       
___________________________________________________________________________________

அதிரை - ஊரும் பேரும்

(தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அ. அஹ்மது  பஷீர்)


சோழப் பேரரசின் காலத்தில் அதிராம்பட்டினம், 'உலகளந்த வளநாடு' என்ற பெயரைப்  பெற்றிருந்தது.  முதல்  இராசராசரின் பட்டத்தரசி உலக மாதேவியார்.  சோழர்கள், சைவ வைணவ சமயத்தினர்.  ஆயினும்  சமயப்பொறை உடையோர்.  புத்த, சமணப் பள்ளிகளை நிறுவ ஆக்கமளித்தனர்.  தமிழகத்தில் இஸ்லாம் தழைத்து வளர்ந்தபோது, புதிய பள்ளிவாயில்களைக் கட்டிக்கொள்ளவும், விளக்கு எரிக்கப்படாத பழைய கோயில்களில் இருந்த கருங்கற்களையும் கல் தூண்களையும் முஸ்லிம் பள்ளிவாயில்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கினர்.  சோழர்குலப் பெண்கள், 'நாச்சியார்' என்று அழைக்கப்பெற்றனர்.  'நாச்சிகுளம்', 'நாச்சியார்கோயில்' முதலான ஊர்களில் பெரும்பாலராக இன்று முஸ்லிம்களே வாழ்கின்றனர்.


பூம்புகார்  கடல்கொள்ளப்பட்ட பிறகு  மக்கள் இடம்பெயர்ந்து வாழத்  தொடங்கிய ஊர்களுள் 'பந்தர்' என்றழைக்கப்படும் மஹ்மூது பந்தரும் அதிராம்பட்டினமும் முக்கியமானவை.  அதிரை ஒரு தொழில் நகராக வளர்ந்தது.  இங்கு வாழ்ந்த வணிகர் பலருக்குச் சொந்தக் கப்பல்கள் இருந்தன.  பாய்மரக் கப்பல்கள், 'கப்பற்காடிகள்' எனப்பட்டன.  நாணயக்காரத் தெரு, கிட்டங்கித் தெரு, தரகர் தெரு, வத்தைக்காரத் தெரு, கரையூர் தெரு, கம்மாளத் தெரு, வெற்றிலைக்காரத் தெரு, நெசவு தெரு, சாயக்காரத் தெரு, (மார்க்கத் தீர்ப்பு வழங்கும்) காழியார் தெரு, பல்லக்குத் தோப்பு, சுளகு கட்டிக் கொல்லை, சந்தைக் கொல்லை எனத் தொழில் அடிப்படையில் தெருக்கள் அமைந்திருந்தன. 

கடற்கரையை ஒட்டி நகுதா மரைக்காயர், (கப்பலோட்டும்) தண்டையார், (கடல் வழிகாட்டிகளான) 'முஅல்லிம்கள்' ஆகியோர் இங்கு மிகுதியாக வாழ்ந்தனர்.  அதிரையை அடுத்த சாளுவநாயக்கன் பட்டினத்திற்கு அருகில் 'முஅல்லிம்கள்' வாழ்ந்த இடம், 'முஅல்லிம்பட்டினம்' என வழங்கப்பட்டது.  அன்றிருந்த அரபு வணிகர்கள் அதனை, 'மாலிஃபத்தன்' என்று பெயரிட்டபின், அது 'முஅல்லிம் பட்டினம்' என்றாகிப் பின்னர், 'மல்லிபட்டினம்' என்று பெயர் பெற்றுள்ளது.  ( நெடுங்கடல் கடந்து நாடுகள் பலவற்றைக் கடந்தவர்களாதலால், கடல்வழி அறிவு நிறையப் பெற்றிருந்த முஸ்லிம்களே 'முஅல்லிம்கள்' - ஆசிரியர்கள் அல்லது வழிகாட்டிகள் - எனப்பட்டனர்.  தமிழில் உள்ள 'மாலுமி' என்ற சொல்லும் 'முஅல்லிம்' என்ற அரபுச் சொல்லிலிருந்தே பெறப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்பது தமிழறிஞர்களின் ஆய்வுக்குரியதாகும்.                                         -தொகுப்பாளன். )




அரபுலகின் அன்றைய ஹிஜாஸ் மாகாணக் கொடிய  ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ்  இப்னு யூசுஃப் காலத்தில்  அரபகத்தில் ஏற்பட்ட பெருங்குழப்பம் காரணமாக ஆடவரும் பெண்டிருமாய் முஸ்லிம்கள் ஐந்து கப்பல்களில்  ஏறி, காயல்பட்டினம், கீழக்கரை, அதிராம்பட்டினம், பழவேற்காடு ஆகிய ஊர்களில் கரையிறங்கி வாழத் தொடங்கினர்.  ஆண்டுகள் ஆயிரக் கணக்கில் கடந்துவிட்டபோதும், முதல் மூன்று அடுத்தடுத்த ஊர்க்காரர்கள் தமக்குள் உறவு பாராட்டிக்கொள்வர். 

வடக்கே  பலாப்பூரில் தோன்றிய ஷம்சுத்தீன்  வலீ என்பாரின் மகனாரான  ஹாஜா வலீ அவர்கள் அதிராம்பட்டினத்திற்கு  வந்து, 'காதிரிய்யா' எனும் ஞானப்பாட்டையை நிறுவினர்.  அன்னாரின் மறைவிற்குப் பின்னர், தஞ்சை மன்னர் சேவப்ப நாயக்கர் ஹாஜா வலீயின் மீது கொண்ட பேரன்பால், 'தர்கா' எனும் மணிமாடம் ஒன்றைக் கி.பி. 1530 ஆம் ஆண்டில் கட்டினார்.  அந்த தர்காவின் செலவுகளுக்காக நிலங்களை மானியமாக எழுதிவைத்தார்.

கி.பி. 1500 முதல் எழுபத்தைந்து ஆண்டுகள் தென் தமிழகத்தின் சோதனைக்  காலமாகும்.  பொன் விளைந்த  பூமியாகிய இந்தியாவை அடைய, நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வருவது மிகுந்த தொலை தூரமும்  காலக் கழிவும் ஆகும்  எனக் கருதிய போர்ச்சுக்கீசியர்  குறுக்கு வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று எண்ணினர்.  முஸ்லிம் 'முஅல்லிம்' ஒருவரின் துணையோடு புறப்பட்டுக் கேரளக் கடற்கரைப் பட்டினமான கள்ளிக்கோட்டைக்கு அருகில் 'கொப்பம்' எனுமிடத்தை 1498 மே 17 இல் வந்து சேர்ந்தான் வாஸ்கோடகாமா என்ற கடற்பயணி.  கள்ளிக்கோட்டை, கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற கடலோரப் பட்டினங்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கினான்.

அவனை  எதிர்த்துத் தாக்கப் போர்க்கருவிகள் இல்லாத நிலையில், இந்தக் கடலோரக்  கிராமங்களின் மக்கள் பாதுகாப்பிற்காகத்  தங்கள் ஊர்களை விட்டு வெளியேறுவதைத்  தவிர வேறு வழியிருக்கவில்லை.  எனினும், எதிரிகள் ஊர்களின் எல்லையில் வைத்து அவர்களை மறித்தனர்.  தம் உண்மைப் பெயர்களைக் கூறினாலும் கொன்றுவிடுவர்; பெயர்களை இணைவைப்பு சார்ந்த மாற்றுமதப் பெயர்களாக மாற்றுவதும் கூடாது.  எனவே, அவர்களுள் ஆண்கள் சக்கரைத் தம்பி, சீனியப்பா, பச்சைத் தம்பி போன்றும், பெண்கள் சின்னப் பொண்ணு, சீனியம்மா, செவத்தம்மா போன்ற இணை வைத்தலும் இறைமறுப்பும் இல்லாத பெயர்களுடனும், சிலர் ஆட்டுத் தலை, ஆணச் சட்டி, புளியாணம், நெல்லுக்குள் அரிசி, மண்டையான், மண்ணாங்கட்டி, சிங்கம், புலி போன்ற பெயர்களையும் புனைந்துகொண்டு, தம் உடைமைகளுள் வேத நூல்களை மட்டும் நீர்நிலைகளில் விட்டுவிட்டு, எல்லைகளை நோக்கி நடந்தனர்.  இவ்வாறு, அப்போது பாதுகாப்புக் கருதி, மாற்றிப் புனைந்துகொண்ட இவை போன்ற பெயர்களே நாளடைவில் அவரவர் குடும்பங்களின்  பெயர்களாயின.

கீழக்கரையிலிருந்து  புறப்பட்ட கணவன் மனைவித்  தம்பதியர் இருவர் தாம் மறைத்துக் கொண்டுவந்த தங்கக் காசுகளை விற்று, அதிரையில் இருக்கும் மரைக்கா பள்ளிவாசலைக் கட்டினர். அந்தத் தம்பதிகளின் அடக்கத்தலம் மரைக்கா பள்ளியின் தென்புறம் இருந்தது.  அப்பள்ளியைச் சுற்றிப் புதிதாக வந்தவர்கள் தத்தம் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டனர்.  அதுவே நாளடைவில் 'குடிகாடு' எனப் பெயர் பெற்றது.  அண்மைக் காலம்வரை, அதிரையின் கடல்கரைத் தெரு மற்றும் தரகர் தெருவாசிகள் நடுத்தெருவைக் 'குடிகாடு' என்று குறிப்பிட்டதை நாமறிவோம்.  ஆலிம் எனும் மார்க்க அறிஞர்களாகவும், ஹாஃபிழுகள் எனும் வேத பாராயணம் செய்தவர்களாகவும் அவர்களுள் பலர் இருந்ததால், தம் நினைவாற்றலைக் கொண்டு குர்ஆனையும் மற்றுமுள்ள முக்கியமான கிரந்தங்களையும் எழுதி வைத்துக்கொண்டனர்.  அரபு லிபியும் தமிழ் வாசகமும் கொண்ட 'அரபுத் தமிழ்' என்ற புது மொழி வடிவில் முதலில் அவற்றை எழுதி வைத்தனர்.  வளமனைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து அதிரைக்கு வந்த அவர்கள், தமக்கு வாய்த்த வறுமை நிலையிலிருந்து மேலான நிலையைப் பெற்றுக்கொண்டது, இறைவனின் பேரருளேயன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?

இவர்களின் வழித்தோன்றல்கள் பின்னாட்களில்  தமது அறிவைக் கொண்டு நிறைய  நூல்களை எழுதினர்.  முஹம்மது அப்துல் காதிர் என்ற சூஃபி ஆலிம்சாஹிப் அவர்கள், 'மஜ்மஉல் கவாக்கிபு' எனும் அரபுத் தமிழ் நூலையும், இருபதுக்கும் மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்களையும் எழுதினார்கள்.  முஹம்மது உவைஸ் நெய்னாப் பிள்ளை ஹாஜியார், 'நேர்வழிப் பிரகாசம்' எனும் நூலை இயற்ற, அதனை அ.மு.க. முஹம்மது ஷரீஃப் ஹாஜியார் அச்சிட்டு வெளியிட்டார்கள்.  முஹம்மது ஹுசைன் புலவர், 'பெண் புத்தி மாலை' என்ற பனுவலையும், ஷைகுனா அஹ்மது லெப்பை ஆலிம் அவர்கள் அரபுத்தமிழ் அகராதியையும் இன்னும் சில வானியல் கலை நூல்களையும் இயற்றியுள்ளார்கள்.

பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆட்சியின்போது  அதிவீர ராம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கீழத் தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றினார்.  இவர் பிறந்தது, கரிவலம் வந்த நல்லூர் என்பதும், கல்வி கற்றது, வேதாரணியம் எனும் திருமறைக்காடு என்பதும் வரலாற்றுச் செப்பேடுகள் மூலம் அறியக் கிடக்கின்றது.  இம்மன்னரே 'நைடதம்', 'வெற்றி வேற்கை', 'கொக்கோகம்' முதலான நூல்களின் ஆசிரியராவார்.  எண்வகைச் சாதிப் பெண்களுள் பத்மினிச் சாதிப் பெண்ணாகிய செல்லி என்ற பெண்ணைத் தேர்ந்து, செல்லிக்குறிச்சிக்கும் கருங்குலத்திற்கும் இடையே ஓடிய நசுவினியாற்றங்கரையில் வளமனை கட்டி வாக்கை நடத்தினார். 

யாருக்கோ  இவர்கள் செய்த தீவினையின் காரணமாக, இவர்கள் வாழ்ந்த  அரண்மனையின்மீது பிற்காலத்தில்  மண்மழை மொழிந்து, பல்லாண்டுகளாக  அவ்விடம் மணல் மேடாகக் காட்சியளித்தது.  எமது சிறு வயதில், மழைக் காலங்களில் இவ்விடத்தில் சிறு சிறு கோழிக் காசுகள் கிடக்க, அவற்றை நசுவினியாற்றில் குளிக்கச் செல்வோர் எடுத்து வந்ததை அறிவோம்.  சென்ற 1954 ஆம் ஆண்டில் நானும் என் ஆசிரியர் திரு சம்பந்த மூர்த்திச் செட்டியாரும் கருங்குளத்தில் கள ஆய்வு செய்துள்ளோம்.  பல ஆண்டுகளாக மன்னரையும் அவர்தம் மனையாளையும் நினைவு கூர்ந்து, மக்கள் இவ்வூரை 'அதிவீரராமன் பட்டினம்' என்றும், 'செல்லி நகர்' என்றும்        

அழைத்துவந்தனர்.

                "மதுரைச் சரகமதில் மாநகரம்  செல்லியெனும்

                அதிவீர ராமநகர்"

என்று குறிப்பிடுகின்றது, 'நேர்வழிப்  பிரகாசம்' என்ற நூல். 

இன்றைய  முகவை மாவட்டத்தில் 'எமனேஸ்வரம்' எனும் பெயரில் ஓரூர் உண்டு.  அவ்வூரின் பண்டையப் பெயர் 'யமனீச்சரம்' (ஈச்சரம் - வழிபாட்டுத்தலம்) என்பதாகும்.  தெற்கு யமனாகிய 'ஹழ்ரமவ்த்' என்ற பகுதியிலிருந்து வந்து குடியேறிய அரபு வணிகர்கள் இவ்விடத்தில் இறைவணக்கத்திற்காகப் பள்ளியொன்றைக் கட்டி, ஓரிறையாம் அல்லாஹ்வை வணங்கிவந்தனர்.  'யவனர்கள்' என்று பண்டைய இலக்கியங்களால் குறிக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் குதிரைகளை இறக்குமதி செய்து, ‏இங்கிருந்து பட்டினை வாங்கிச் சென்றனர்.  இதற்கு,

                 "நீரின் வந்த நிமிர்பரிப்  புரவியும்"

என்ற  புறநானூற்றுப் பாடல் சான்றளிக்கிறது.  அந்த யமனீச்சரத்தில் வாழ்ந்த முஸ்லிம்  அறிஞரான மஹ்தூம் சின்ன நெய்னா லெப்பை ஆலிம் என்பார் அதிரை வந்து அரும்பணியாற்ற விழைந்தார்.  இவ்வறிஞரால் கட்டப்பெற்றதே இவ்வூரின் பெரிய ஜும்ஆப் பள்ளி.  இவரின் பரம்பரையினர் இன்றும் இவ்வூரில் வாழ்ந்துவருகின்றனர். 

உலகளந்த வளநாடு, அபாத்து, அபதான், அத்ரமீன் ஃபத்தன், அதிவீர ராமன் பட்டினம், செல்லி மாநகர் என்றெல்லாம்  சிறப்புப் பெயர் பெற்ற  அதிராம்பட்டினம், 'அதிரை' என்ற சுருங்கிய பெயரைப் பெற்றது 1952-53ல்தான்.  'யார் குற்றவாளி?' என்ற நாடக நூலை எழுதிய அப்துர்ரஹீம் அவர்கள் தமது பெயரை 'அதிரை அப்துர்ரஹீம்' என்று முதன்முதலாகப் பொறித்திருந்தார்.  தமிழிலக்கிய உலகுக்குப் பணி செய்வோர் அதிரையில் தொடர் தொடராய்த் தோன்றிய வண்ணம் உள்ளனர்.

மதுரையம்பதியில் பிறந்து, அதிரையம்பதிக்கு  வந்து வாழ்ந்து வான்புகழ்  பெற்ற அண்ணாவியார் குலத்துப் புலவர்கள் இயற்றிய அருந்தமிழ் இலக்கியங்கள் ஏராளம்.  அதிரையின் இலக்கியச் செல்வர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டதாகும்.  புலவர் அஹ்மது பஷீர் முதன் முதலாக இஸ்லாமியக் குழந்தை இலக்கிய ஆய்வை மேற்கொண்டவர்.  இவரின் 'புது மலர்கள்' எனும் இஸ்லாமியச் சிறார்களுக்கான பாட நூல் பல பள்ளிக்கூடங்களில் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.  கவிஞர்கள் அதிரை தாஹா, அதிரை அஹ்மது போன்றோர் இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்குச் செய்த பணிகள் ஏராளமாகும்.

"குணத்தாலும்  குலத்தாலும் குறியாலும்  நெறியாலும் குறைவில்லாப்  பணத்தாலும் உயர்ஆலிம்" பெருமக்களும் தியாகச் செம்மல்களும் கொடை வள்ளல்களும் குன்றிலிட்ட விளக்குகளாய் அதிரையின் பெருமையை ஓங்கச் செய்துவருகின்றனர்.    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

2 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மற்றுமொரு மைல்கள் தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் ! கண்டிப்பாக எங்களுக்கும் சந்ததிகளுக்கும் போற்றிப் பயனளிக்கும் பெட்டகம் தங்களின் ஆக்கம்.

Kavianban KALAM, Adirampattinam said...

புலவர் முயற்சி புகழ்ந்து பரவும்
பலம்சேர்க்கும் பிறந்த நிலம்.


"கவியன்பன்" கலாம்,

Labels

 
TOP