Loading...
Saturday 13 November 2010

மறக்க முடியாத மருத்துவர்கள்: அதிரை அஹ்மது

மருத்துவம், மருத்துவமனை பற்றிய கருத்தாய்வும் கருத்துக் கணிப்புகளும் நமதூரில் பேசப்படும் தருணமிது.  இந்நேரத்தில், நம்மூரின் பழமை பற்றியும் ஓர் ஆய்வு தேவைதானே?

கலந்தர் மரைக்காயர்:  (இவர்களைப்பற்றி ஏற்கனவே 'அதிரை வரலாறு' வலைப்பூவில் தனிக் கட்டுரை இடம்பெற்றுவிட்டது.  அதில் இடம்பெறாத சில தகவல்கள் மட்டும் இங்கே:)

கலந்தர் மரைக்காயர் இறந்த பிறகு, அவருடைய (மனைவி வழி) மூத்த மகன் சேகப்துல்லா காக்கா அவர்கள் தன்னால் இயன்ற, தனது அனுபவத்தின் மூலம் மருந்துக் கடை வைத்து, சில மருந்துகளைக் கொடுத்துவந்தார்.  கலந்தர் மரைக்காயரின் இளைய மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்.  அவரும் சில நேரங்களில் 'தொப்பிக்குள் செந்தூரம் இருக்குது; தருகிறேன்' என்பார்.  மக்கள் பைத்தியத்திடம் எப்படி வாங்குவது என்று தயங்குவார்கள்.  அத்துடன் அந்தக் குடும்பத்தின் நாட்டு வைத்திய முறையும் முடிவுற்றது.

செந்தூரம் எனும்போது, சில தனித்தனி வீடுகளில் செந்தூரம் விற்பனையும்   நடந்ததை அறிவேன்.  அவற்றுள் 'செந்தூரக்கார வீடு' என்று பெயர் பெற்றது, இப்போதுள்ள எனது அண்டை வீடு.  'கூனா வீட்டு செந்தூரம்' என்பதும் நடுத்தெருப் பகுதியில் பெயர் பெற்ற ஒன்றாகும்.  அன்றைக்கு வந்ததோ, ஒரு சில நோய்கள்தாம்.  அவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து, சென்தூரம்தான். 

பெத்தையன்:  இவர் ஒரு நாட்டு வைத்தியர்.  இந்துவாக இருந்தாலும், நமதூர் முஸ்லிம் மக்களுடன், குறிப்பாக நமதூரின் சமூகத் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தவர்.  நாடி பிடித்து நோயைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்.  மடியில் ரெடியாகச் சில மருந்துகளை வைத்திருப்பார்.  சற்று முதிர்ந்த நோய்களாயிருந்தால், அடுத்த நாள் செய்துகொண்டு வருவதாகச் சொல்லிப் போவார்.  கழுவித் துவைத்துப் பெட்டி போட்டு மடிப்புக் கலையாத வெண்மையான உடையுடன், தோளில் அங்கவஸ்திரத்தொடு காணப்படும் அந்தக் கருமைத் தோற்றமுடைய வைத்தியர் பெத்தையன், காசில்லா ஏழைகளுக்கும் காசுள்ள பணக்காரர்களுக்கும் தன மருத்துவச் சேவையைப் பாகுபாடின்றிச் செய்து பயன் விளைவிப்பார்.

இவர் அதிரை முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்ததன் பிரதிபலனோ என்னவோ, அல்லது இவரால் பயன் பெற்ற நல்லடியார் ஒருவரின் துஆவினாலோ  என்னவோ, அவருடைய மகன் இஸ்லாத்தைத் தழுவி, இன்று முஸ்லிமாக வாழ்ந்துவருகின்றார்.  இப்போது அவரும் நாட்டு வைத்தியத் தொழிலை மேற்கொண்டு, தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.

இக்ராம் டாக்டர்:  எனக்குத் தெரிந்தவரை, முதன்முதலாக அதிரைக்கு வந்த ஆங்கில மருத்துவர் இவர்தான்.  அக்காலத்தில், அதிரையில் இவரிடம் மட்டுமே 'அம்பாசிடர்' கார் இருந்தது.  இப்போது இருக்கும் 'மக்தூம் பள்ளி'யின் இடத்தில்  அன்று 'ரிஜிஸ்டர் அபீஸ்' இருந்தது.  அந்த வரிசையின் கடைசிப் பகுதியில் டாக்டரின் மருத்துவமனை இருந்தது.  இக்ராம் டாக்டர் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  உருது தாய்மொழி.  அதிரையில் குடும்பத்தோடு குடியேறி வாழ்ந்து வந்தார்.  மிகவும் கண்டிப்பான ஆள்.  ஆனால், 'கைராசிக்காரர்' என்று பெயரெடுத்தவர்.  அதிரையின் செல்வந்தர் வீடுகளுக்கும், அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் முதிர் நோயாளிகளுக்கும் மட்டும், அழைப்பின் பேரில் காரில் வந்து சிகிச்சையளிப்பார்.  வீட்டு வருகைக்காகக் கூடுதல் கட்டணம் ரூபாய் ஐந்து சேர்த்துக் கொடுக்கப்படும்.  அவரிடம் கம்பவுண்டராகப் பணியாற்றிய அப்துர்ரஹ்மான் இப்போதும் உள்ளார், செக்கடி மேட்டில் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு.  டாக்டரும் அப்துர்ரகுமானும் திரும்பி வந்த பிறகுதான், மருத்துவமனை மீண்டும் இயங்கத் தொடங்கும்.  அதுவரை நோயாளிகள் பொறுமை காப்பார்கள்!  இந்த டாக்டரை விட்டால் வேறு டாக்டர் இல்லை என்ற நிலைக்காக அன்று; இவர் கைராசிக்காரர் என்பதால்!

நாங்கள் எங்கள் உயர்நிலைப் பள்ளி நாட்களில் நடுத்தெருவில் 'இக்பால் நூல் நிலையம்' என்றொரு நூலகம் நடத்திவந்தோம்.  அந்த நேரத்தில்தான் அல்லாமா இக்பால் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பெற்றிருந்தது.  இளைஞர்களான இல்லை, சிறுவர்களான எம் உள்ளங்களில் நமதூரில் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா நடத்தினால் என்ன? என்ற உதிப்பு!  களத்தில் இறங்கிவிட்டோம்!  இடம்: மரைக்காபள்ளி முக்கூட்டு முனை!  பெரிய பந்தல்!  பேச்சாளர்கள்:  டாக்டர் இக்ராம் (உர்து).  'இறையருட்கவிமணி', பேராசிரியர் கா. அப்துல் கபூர் M.A. (தமிழ்).  மாநாட்டுத் தலைவர்:  அ. இ. செ. முஹிதீன் B.A.  இன்னும் உள்ளூர் பேச்சாளர்களும் சொற்பொழிவாற்ற, மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது!

டாக்டர் நெடுங்காடி:  மருத்துவ வசதிகள் குறைவாயிருந்த அந்தக் காலத்தில், நமதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வந்து சேர்ந்தார் டாக்டர் நெடுங்காடி.  இவருடைய பொதுநலச்  சேவையின் மூலம் அரசு மருத்துவமனை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்தது. ஆனால் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மிகக் குறைவு.  அவற்றை வைத்துக்கொண்டு, அவர் தரும் சிகிச்சைகள் அபாரமானவை.

நான் மிகச் சிறிய வயதுடையவனாக இருந்தபோது, என் தாயாருக்கு உள்ளங்கையில் ஒரு சிறிய கட்டி.  அதை டாக்டரிடம் காட்டியபோது, ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார்.  இப்போது இருப்பதைப்போல், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை.  ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்துத் தம் பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கினார் டாக்டர்.  என் கண்கள் நீர் வடிக்க, என் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  கத்தி வைத்தாரோ இல்லையோ, கத்தத் தொடங்கிவிட்டார்கள் என் தாய்.  "ஐயா!  உட்ருங்கோ!" என்று கத்தியபோது பிஞ்சுப் பருவத்தினன் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?  என்னைத் தடுத்துப் பிடித்து நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் பக்கத்தில் நின்றவர்கள்.  அந்தக் காலத்தில் ஆபரேஷன் எல்லாம் தியேட்டரில் நடக்காது.  ஒரு விதமான rude treatmentதான்!  அப்படி இருந்தும், நோய்கள் குணமாகின!  டாக்டர் நெடுங்காடியும் கைராசிக்காரர்தான்.  அப்போதிருந்த dedication, kindness, concentration எல்லாம் மருத்துவர்களிடம் இப்போது குறைவு.   

ஜெர்மன் டாக்டர்:  இந்தப் பெயரில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூறிக்கொண்டு நமதூர் தட்டாரத் தெருவில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தன் 'தொழிலை' ஆரம்பித்தார்.  ஒரு நாள் திடீரென்று குழந்தையாக இருந்த என் மருமகளுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.  நானும் என் நண்பர் அப்துல் கபூரும் தூக்கிக்கொண்டு ஓடினோம், இந்த ஜெர்மன் டாக்டரிடம்.  எடுத்த எடுப்பில், அந்தப் பச்சிளங்குழந்தையின் நெஞ்சில் குத்தினாரே ஓர் ஊசி!  அதிர்ச்சியால் நாங்கள் உறைந்து போய்விட்டோம்!  குழந்தை அலறவே, அவளைத் தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.  நடந்ததை வீட்டில் சொன்னபோது, வீட்டாரும் துடித்துப் போனார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை!  பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது!  கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?

மற்றவை, பின்னூட்டக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.  


இந்த கட்டுரைக்கு அதிரைநிருபர் வலைப்பூவில் வந்த கருத்துரைகள். கட்டுரையில் விடுபட்டவர்களை நினைவேந்தி இருக்கிறார்கள். அதனை நன்றியோடு பதிவிடுகிறோம்.

அபுஇபுறாஹிம் சொன்னது…

    ஆஹா மற்றொரு களம் கிடைத்திருக்கிறது... பொருத்திருந்து பாருங்கள்..

    இன்றைய மருத்துவ மனையின் ஒரு விளம்பரம் !

    "இங்கே சிகிச்சைக்கு கூட்டிகிட்டு வாங்க... முடிந்ததும் தூக்கி கிட்டு போங்க" !

    சீரியஸா இருந்தீங்கன்னா நான் பொறுப்பல்ல...
    Wednesday, November 10, 2010 9:21:00 PM

sabeer சொன்னது…

    ஈஸிச் சேரில் அமிழ்ந்து, கட்டிய கைகளை பிடரியின் பின்னால் தக்க வைத்துக்கொண்டு, எவ்வளவு அழகாக அசை போடுகிறீர்கள் காக்கா!

    வலிக்காத ஊசியாய் சுகமாய் இருக்கிறது கேட்க. அதிரை வரலாற்றின் அதி முக்கிய பக்கங்களை செதுக்குவதுபோல் சேர்த்துத் தருவது உங்களால் மட்டுமே முடியும்.

    நீங்கள் குறிப்பிட்டவர்களில் இக்ரம் டாக்டரின் பெயர் மட்டும் கேட்ட ஞாபகம் இருக்கு.வரலாற்றில் இன்னும் பதியப்படாத பல பக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.

    தொடர்ந்து எழுத துஆ.
    Wednesday, November 10, 2010 10:55:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    டாக்டர் இபுறாஹிம் - அதிக நாள் இருந்த இடம் புதுப்பள்ளிக்கு எதிரில்தான் பனிமனை, இவரைக் கண்டாலே எனக்கு ரோஸ் கலரில் இருக்கும் சர்பத் போன்ற திரவம் அடங்கிய பாட்டில்தான் ஞாபகத்திற்கு வரும். ஆஸ்பத்திரி வாடைன்னா அங்கேதான் தெரியும் அப்படி ஒரு விதமான மருந்து வாடை இருக்கும் அவரின் மருத்துவ மனையில், மாத்திரைகள் தினத் தந்தி பேப்பரில் மடித்து தரப்படும்.
    Thursday, November 11, 2010 12:13:00 AM

crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சாவின் மற்றுமொரு கலக்கல் நினைவுப்பதிவுகள்.சாச்சாவுக்கு எழுத்துக்காக மருத்துவப்பட்டம் கொடுக்கலாம். நான் அழைக்கப்போவது டாக்டர் அஹமது சாச்சா.அல்ஹம்துலில்லாஹ்.இக்ராம் டாக்கரைப்பற்றிய அதிக "டாக்"(TALK) கேள்விபட்ட்டிருக்கிறேன். சாச்சா சொன்ன சில ராசி கார டாக்டர் நான் சொல்லப்போவது நிசமாவே கைராசிக்காரர்.என் பெரியம்மாவின் உம்மாவுக்குச்சொந்தம்.எப்படி ராசிக்காரர்ன்னா சில நேரம் சீரியஸாக இருக்கும் சிலருக்கு இவர் வந்து வைத்தியம் பார்த்தவுடன் அடங்கிவிடும்.(மொவ்தாகிவிடுவார்கள்)அப்படிதான் என் பெரியம்மாவின் உம்மாவுக்கு உடம்பு சரியிலை என் ராத்த சொன்னாங்க உடனே அந்த" "கூட்டிகிட்டு வா. நான் என் பெரியப்ப மகனுடன் சேர்ந்து அவர கூட்டிகிட்டு வர கிளம்பினேன். அப்போது நான் சொன்னேன் எப்படியும் உம்மாமா இறக்கப்போகுது நாம அடக்கத்துக்குள்ள வேலைய பாக்கனுன்னு.ஏன்டா அப்படிய் சொல்ரே?ன்னு பெரியப்ப மகன் கேட்டான். நான் சொன்னேன் வெற என்ன இந்த டாக்கரை கூட்டிகிட்டு வரச்சொல்லிடாங்களே! அதுபோல் கூட்டி வந்தோம் .வந்து கையைபிடித்தார். சில நிமிடங்களிலேயே அவர்கள் இறந்து போய் விட்டார்கள்.இதுபோல் பலமுறை நடந்துள்ளது.இது நடந்த சம்பவங்கள். நகைச்சுவைக்காக எழுதபடவில்லை.
    Thursday, November 11, 2010 1:10:00 AM

crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.அதனாலேயே எங்கவீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா. நான் துஆ கேட்பது இப்படித்தான் யா அல்லாஹ் அந்த டாக்டரின் வைத்தியத்திலிருந்து எங்களை காப்பாத்துன்னு.என் சகோகதரர்கள்,என் தாய் என்னை ஏசுவார்கள்.அடிக்க வருவார்கள்.ஆனால் நான் மறைக்காமல் சொல்லிவிடுவேன் என் குடும்பம் முக்கியம் ரிஸ்க் எடுக்க அனுமதிக்க மாட்டேன்.காரணம் ராசி என்பதை விட அவர் அப்டேட் இருப்பதில்லை பழய வைத்திய முறைதான்.
    Thursday, November 11, 2010 1:17:00 AM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    எழும்பு முறிந்தால் காட்டுவோமே (மாவு)டாக்டர்,அவர் எடுப்பாரே பெண்டு ஆஆஆ.... அந்த வலியிருக்கே!, எங்களுக்குல தெரியும்... :(

    "எப்படி ஏற்பட்டுச்சுன்னு கேட்பார்" அந்த மருத்துவர் - விளையாடும் போது கீழே விழுத்துட்டேன்னு சொல்லி கிட்டு இருக்கும் போதே இப்படியா மடங்குச்சுன்னு பெண்டு எடுப்பாறே இன்னும் வலிக்குது, , ஆனால் no side effect so are..
    Thursday, November 11, 2010 9:48:00 AM

'ஒருவனின்' அடிமை சொன்னது…

    பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது! கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?
    அடப்பாவி?அப்போதே இப்படி போலி டாக்டர்கள் உருவாகியாச்சா?
    Thursday, November 11, 2010 11:27:00 AM

அன்புடன் மலிக்கா சொன்னது…

    மருத்துவர்களை மரியாதையாக உயிர்காக்க உதவும் உத்தமர்களாக நினைக்கிறோம். ஆனால் சிலநேரம் அவர்கள் பிறர் மானத்தையே
    சூறையாடும் சுகபோகர்களாக திரிகிறார்கள் இவர்களைபோல்..

    மரக்கட்டை மனிதர்களால் மானத்திற்கு ஆபத்து.
    http://kalaisaral.blogspot.com/2010/11/blog-post_10.html..
     Thursday, November 11, 2010 12:24:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    வாங்க ஒருவனின் அடிமை... ! வரவேற்பது என் வழக்கம் ! அடிக்கடி வருவது உங்கள் வழக்கம்(ஆக்கிட வேண்டியதுதானே) !
    Thursday, November 11, 2010 3:32:00 PM

jaleelsa சொன்னது…

    இன்னும் இக்ராம் டாக்டரைப்பற்றி மரக்காத சில..
    நமதூர் பெண்கள்,
    டாக்டர் : என்ன பன்னுது?
    நோயாளி: நெஞ்சுக்குள்ளே என்னமோ பன்னது
    டாக்டர் : அப்பரம் என்ன பன்னது?
    நோயாளி: ஒரே படபடப்பா வருது
    டாக்டர் : அப்பரம்!!?
    நோயாளி: ஒரே ஹொதரத்தா வருது
    டாக்டர் விசயத்தை புரிந்துகொண்டு மாத்திரையை
    மடித்து கொடுத்து விடுவார்.
    Thursday, November 11, 2010 6:19:00 PM

Shahulhameed சொன்னது…

    டாக்டர் ராஜு அதிரை அரசு மருத்துவ மனைக்கு வந்த புதிதில் கடற்கரை தெருவில் கிணறு சுத்தாம் செய்ய இறங்கிய மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்து போனார்கள் அவர்களின் சடலங்களை புதிதாக வந்த டாக்டர் ராஜு தான் பிரோத பரிசோதனை செய்து முடித்தார் அதன் பின் அவருக்கு ஜுரம் வந்து ஒரு வாரம் மெடிகல் லீவில் போய்விட்டார்.
    Thursday, November 11, 2010 6:19:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    டாக்டர்களிடம் அழைத்துச் செல்லும் குதிரை வண்டிக்காரர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கும் தெரியும் என்ன வியாதிக்கும் எந்த டாக்டர் கைராசி அல்லது சீக்கிரம் குணம் அடையும் என் காது பட நிறைய கேட்டிருக்கேன், ஒரு குறிப்பிட்ட குதிரை வண்டிக்காரர் அவருக்கு அடை மொழியும் உண்டு (அந்தப் பெயரை தவிர்க்கிறேன் இங்கே) எந்தத் தெருவுக்குச் சென்றாலும் டாக்டரிடம் போ என்றுதான் சொல்லுவார் அவர் தானாகச் சென்று அந்தக் குறிப்பிட்ட டாக்டரின் மருத்துமனை வாசலில் நிற்கும் விதம் ஆச்சர்யத்தை கொடுக்கும், இதனை மற்ற சகோதரர்கள் யாரும் கண்டோ அல்லது கேள்விபட்டோ இருக்கலாம் !
    Thursday, November 11, 2010 7:54:00 PM

ZAKIR HUSSAIN சொன்னது…

    சகோதரர் அதிரை அஹ்மதுவின் மலரும் நினைவுகள் மற்றவர்களுக்கும் ஓர் மீள்பார்வை. இக்ராம் டாக்டர் Black & whiteல் லேசாக தெரிகிறார். மற்ற மருத்துவர்கள் நம் காலத்துக்கு முன் என நினைக்கிறேன்.
    Thursday, November 11, 2010 9:28:00 PM

Shahulhameed சொன்னது…

    அபுஇபுறாஹிம் சொன்னது…
    ஒரு குறிப்பிட்ட குதிரை வண்டிக்காரர் அவருக்கு அடை மொழியும் உண்டு (அந்தப் பெயரை தவிர்க்கிறேன் இங்கே) எந்தத் தெருவுக்குச் சென்றாலும் டாக்டரிடம் போ என்றுதான் சொல்லுவார் அவர் தானாகச் சென்று அந்தக் குறிப்பிட்ட டாக்டரின் மருத்துமனை வாசலில் நிற்கும்


    அது அவரின் திறமையா அல்லது குதிரையீன் திறமையா என்பது எனக்கு இதுவரை "வெளங்கவில்லை"
    Thursday, November 11, 2010 11:28:00 PM

தாஜுதீன் சொன்னது…

    அதிரை வரலாற்றில் மறக்க முடியாதவர்களை மருத்துவர்களை ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ஒரு காலத்தில் தேள் கொட்டினால் மனிதன் பிழைப்பது என்பது அறிதாக இருந்தது. அதுவும் ஒரு குழந்தைக்கு கொட்டினால்...

    டாக்டர் இபுறாஹிம் அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.

    30 வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என்னை "தேள்" கொட்டிவிட்டது, உடல் ஊதா நிறத்திற்கு மாறிவிட்டது, விட்டில் அனைவரும் அதிர்ச்சி பயத்தில் இருந்த அவ்வேலையில், என் அன்பு பெரியப்பா அவர்கள் தன் தோளில் என்னை தூக்கிச் சென்று இபுறாஹிம் டாக்டரிடம் சென்றார்கள். தைரியசாலியான என் பெரியப்பாவும் என் உடல் நிலையை பார்த்து நம்பிக்கை இழந்துவிட்டார்களாம். ஒன்றரை வயது குழைந்தையான எனக்கு தன் treatmentயை முறையாக செய்தார்கள் டாக்டர் இபுறாஹிம், அல்லாஹ்வின் உதவியால் நான் அன்றே குணம் அடைந்தேன். அந்த மனுசனின் நம்பிக்கையான மருத்துவ சேவையை இன்றும் என் பெற்றோரும், என் சகோதரரும், வீட்டில் உள்ளவர்களும் ஞாபகப்படுத்துவார்கள். இது போன்ற நல்லவர்களுக்காக என்றும் நம் துஆ செய்யவேண்டும்.

    அல்லாஹ் போதுமானவன்.
    Friday, November 12, 2010 3:29:00 PM

8 comments:

Hamza Mohamed Ansari said...

i like to read adirai history.....its very wonderrful...and one request ..if all history in audio file .its very useful to all,,

Ahamed irshad said...

அறியாத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் உங்க‌ள் க‌ட்டுரையின் மூல‌ம் தெரிகின்ற‌து.. வ‌ர‌லாறு என்ப‌த‌னை விட‌ பொக்கிஷ‌ம் என்ற‌ வார்த்தையே என்ற‌ நினைவில் வ‌ருகிற‌து இந்த‌ த‌ள‌ம்..அருமை அஹ்ம‌து காக்கா & அ.வ‌ர‌லாறு நிர்வாகிக்கும் வாழ்த்துக்க‌ள்..

இப்னு அப்துல் ரஜாக் said...

eid mubarak

Anonymous said...

காக்கா... வெளியூர்லேந்து வந்து வைத்தியம் பாத்தவங்க எல்லாரேயிம் பத்தி எழுதினிய...

நம்மூர்லே பொறந்து பக்கத்து கிராமமான மலவாநிக்காடில் (மலவேனிர்காடு) தனது தோப்புல ஆஸ்பத்திரி நடத்தி இன்னைவரைக்கும் அந்த கிராம மக்களால டாக்டர் னு அன்போட கூப்புடபடுற உங்க வூட்டுக்கு பக்கத்த்லே இருக்குற ஹோமியோபதி டாக்டர், அஜ்மீர் ஸ்டோர் முஹம்மது ஸாலிஹ் காக்கா பத்தி எழுதலேயே...

அவ்வொள பத்தி கேள்வி பட்டேன். உங்களுக்கு பக்கத்து வூடுங்ரதுனாலே நீங்க உங்க எழுத்துநாளே அவ்வோ வரலாற்றுக்கும் உயிர் குடுங்க...

Anonymous said...

இப்ராஹிம் டாக்டரை மரந்துடிங்களே

Unknown said...

'யா'வுக்கு:

எனது கட்டுரையில் உள்ள மருத்துவர்கள் அனைவரையும் ஒருமுறை மீண்டும் பாருங்கள். அவர்களனைவரும் மறைந்த மருத்துவர்கள்; மறைந்து, மறக்க முடியாமல் மனத்துள் நின்றவர்கள். நீங்கள் குறிப்பிட்ட முஹம்மது ஸாலிஹ் சாச்சா அவர்கள் மறையாதவர்கள்; மறக்க முடியாதவர்கள்; மதிக்கத் தக்கவர்கள்; மரியாதைக்குரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, எனக்கு.

'Anonymous'க்கு:

இபராஹீம் டாக்டரை மறக்க முடியாதுதான். அவரைப்பற்றி நினைக்கும்போது, அவருடைய வசீகரமான தோற்றமும், பூனைக் கண்ணும் நினைவில் நிழலாடுகின்றன. அவரைப்பற்றி என் நண்பர் ஒருவர் கூறியது: இப்ராஹீம் டாக்டரிடம் நாட்டுப்புற நோயாளிக் கிழவர் ஒருவர் வந்தாராம். "ஐயா! வைத்தே வலிக்குதுங்க" என்றவருக்கு, தனது 'ஸ்டெத்தை' வைத்துப் பார்த்துவிட்டு, அவர் வயிற்றை அழுத்தினார் டாக்டர். அடுத்து வெளிவந்தது, 'புர்ர்ர்ர்ர்ர்....' என்ற நாற்றக் காற்று! "காசிருக்கா?" என்று கேட்ட டாக்டரிடம், "இல்லை" என்று கையை விரித்தார் பெரியவர். "அப்போ, ஒசிலே செவப்புத் தண்ணி தருவாங்கோ. குடிச்சுட்டுப் படுத்துக்குங்க" என்று கூறி வழியனுப்பி வைத்தாராம் டாக்டர் இப்ராஹீம்.

இன்னொரு செய்தி: டாக்டர் தரும் மருந்துச் சீட்டு, மளிகைக் கடைச் சிட்டை போன்று இருக்கும். அத்தனை மருந்துகள்!

நினைவூட்டலுக்கு நன்றி.

Mohamed Shuaib said...
This comment has been removed by the author.
Mohamed Shuaib said...

Assalaamu Alaikum! Hello kaka, I hope you're doing well by Almighty Allah's graces & with His blessings. It’s me one of your private student, who came for special coaching in English & also I am a friend of your son Hassaan. I hope you would have guessed me now, who am I? I am really very pleasure for having such a wonderful coaching from you, when I was in our hometown before I come to abroad. You're such a masterpiece of our hometown kaka. May Allah bless you with long & healthy life forever! Aameen!!Wassalaam!

Labels

 
TOP