Related Posts with Thumbnails

அதிரைவரலாறு தளத்திற்கு கட்டுரைகள் அனுப்ப:

adiraihistory@gmail.com

Friday, 29 October 2010

அதிரை வரலாற்றில் நான் கண்ட நல்லவர்கள்! அதிரை அஹ்மது

"இறந்து போனவர்களின் நற்செயல்களைப் பற்றியே நினைவுகூருங்கள்" என்ற கருத்துப்பட நபிமொழியொன்று உண்டு. நல்லதுபற்றிப் பேசுவதால், நன்மையின் பக்கம் நாட்டம் உண்டாகின்றது. தீமையைப்பற்றிப் பேசுவதால், சில வேளை தீமையின் பக்கம்கூட நம் கவனம் செல்லக் கூடும். எனவே, நன்மைகளை நினைவுகூர்வதே நமக்கு நன்மை பயக்கும். இவ்வடிப்படையில், எனது வாழ்க்கையில் சந்தித்த நல்லவர்களைப்பற்றி அதிரை வரலாற்றில் பதிவு செய்து வைப்பது நலம் என்ற நோக்கில், மிகச்சிலரைப்பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்களை மட்டும் பதிவு செய்ய விழைகின்றேன்.

இத்தொகுப்பைப் படிக்கும் வாசகர்களுக்கு, இவர்களைவிட இன்னும் பலரும் நினைவில் நிழலாடலாம். அவ்வாறு இருந்தால், அவர்களைப்பற்றிக் கட்டாயம் பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கோருகின்றேன். இதில் இடம் பெறாதவர்கள் கெட்டவர்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். நினைவாற்றல் குறைந்த எனது சிற்றறிவில் நிலைத்திருப்பவர்கள் பற்றிய தொகுப்பே இது.

மர்ஹூம் அப்துஸ்ஸலாம் ஹாஜியார் கடல்கரைத் தெரு

நான் இவர்களைச் சந்தித்தபோது, நன்கு பழுத்த பழம் போன்று, வயதான நிலையில் இருந்தார்கள். அப்போதும், உள்ளூரில் நடந்தே வியாபாரம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களின் வணிகப் பொருள்கள்: தொப்பி, மிஸ்வாக், அத்தர், சுர்மா போன்றவை. பொருள்களின் அடக்க விலையை முதலில் சொல்லி, இலாபமாகத் தமக்கு நாலணாவைச் சேர்த்துத் தருமாறு வாங்குபவர்களிடம் சொல்லிவிடுவார்கள். இப்பெரியார், நம் தஸ்தகீர் சகோதரர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத் தக்கது!

மர்ஹூம் அஹ்மது தம்பி கடல்கரைத் தெரு

இவர்களை, 'தூண்டிமுள் யாவாரி' என்றுதான் மக்கள் அழைப்பர். இவர்களின் சம்பாத்தியம், தூண்டிமுள் விற்பது. அதிரையை ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்று, அங்கெல்லாம் வாழ்ந்த மீனவச் சமுதாயத்திடம் தூண்டிமுள் விற்பார்கள். இவர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும்போதும், உள்ளூரில் இருக்கும்போதும், எப்பொழுதுமே இஸ்லாமியப் பிரச்சாரம்தான் செய்துகொண்டிருப்பார்கள். ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டால், அந்தக் 'கம்பார்ட்மென்டில்' இருப்பவர்களோடு மிகத் தோழமையுடன் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிடுவார்கள். இதுவன்றி, உள்ளூரிலும் அவ்வப்போது பள்ளிவாசல்களில், யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல், தமக்குத் தெரிந்தபடி 'பயான்' செய்வார்கள். இவர்களின் அணுகுமுறை, சிலருக்குப் பிடிக்காது. என்றாலும், அத்தகையவர்களிடமும் அன்புடன் நெருங்கிப் பழகுவார்கள். ஊரிலும் வெளியூர்களிலும் தம்மிடம் தம் வணிகப் பையை எப்போதும் வைத்திருப்பார்கள். இவர்கள், 'புஷ்ரா ஹஜ் சர்வீஸ்' உரிமையாளர் அப்துர்ரஸ்ஸாக் ஹாஜியாரின் தாய்மாமாவார்கள்.

இதே தெருவில், 'அபூசாலிஹ்' என்ற இன்னொருவரும் இருந்தார்கள். இவர்களை அத்தெருவாசிகள், 'அபுசாலி மாமா' என்று அன்போடு அழைப்பார்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு உடையவர்; துணிச்சலானவர். இவர்களைப்பற்றிக் கூடுதலாக எனக்குத் தெரியாது. மொத்தத்தில், நல்ல மனிதர்களுள் இவரும் ஒருவர்.

மர்ஹூம் அப்துஹை சின்ன நெசவுத் தெரு

கடைதெருவில் நாட்டு மருந்துக் கடை நடத்தி, மக்களுக்கு மருத்துவப் பணி செய்த ஆள் இவர்கள் ஒருவர்தான். இவர்களின் உறவினர் ஒருவர் மூலம் நான் கேட்ட செய்தி: இவர்களின் மரணப் படுக்கையின்போது, வீட்டுப் பெண்களைத் தமக்கு 'யாசீன்' ஓதும்படிக் கேட்டார்களாம். அதன்படி, அவர்கள் ஓதி முடித்தபோது, 'போதும்' என்பது போல் கையால் சைகை காட்டி, வானத்தின் பக்கம் ஒரு விரலை உயர்த்தியபின், இவர்களின் உயிர் பிரிந்ததாம்!

மர்ஹூம் மீராசாஹிப் மேலத்தெரு

இவர்களைச் சிறுவர் சிறுமியர், 'மிட்டாய் மீராசா' என்றே அழைப்பர். காரணம், இவர்களின் தோளில் கனத்த பை ஒன்று தொங்கும். அதில் நிறைய மிட்டாய் இருக்கும். அந்த மிட்டாய்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து,"சொல்லுங்கள், லாயிலாஹ இல்லல்லாஹ்!" என்று கூறிக்கொண்டே போவார்கள். இவர்கள் ஓட்டிக்கொண்டு வரும் சைக்கிளில் ஒரு வேட்டைத் துப்பாக்கி தொங்கும். ராணுவ வீரர் போன்ற உடை அணிந்திருப்பார்கள். முன்பு ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். இவர்களின் உறவினர்கள் ஒரத்தநாட்டிலும் இருப்பதாகக் கேள்வி. இவர்கள் மேலத்தெரு ஜின்னா, மலக்கா மஜீத் ஆகியோரின் தந்தை ஆவார்கள்.

மர்ஹூம் அல்ஹாஜ் முஹம்மது அலிய் ஆலிம் (பாகவிய்) நடுத்தெரு

குர்ஆனை முறையாகத் 'தஜ்வீது' சட்டப்படி மனனம் செய்த 'ஹாஃபிஸ்'. இரு அரபிக் கல்லூரிகளில் பயின்று, மார்க்கச் சட்டங்களில் தேர்வு பெற்ற 'ஆலிம்'. அரபிக் கல்லூரியில் பட்டம் பெற்று ஊருக்கு வந்த தொடக்க காலங்களில், புரட்சிகரமாக மார்க்கச் சட்டங்களை மக்களுக்குத் தம் செயல்பாடுகளால் எடுத்துரைத்து, உண்மையை உணர்த்திய அறிஞர். அதற்கு ஓர் உதாரணம்: நாட்டு நடைமுறையில் உள்ள ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின் ஓதும் கூட்டு துஆ தொழுகையில் உள்ளதன்று என்பதை உணர்த்த, தாம் இமாமாக நின்று தொழவைத்த தொழுகை ஒன்றில் 'சலாம்' கூறித் தொழுகையை முடித்தவுடன் அவர்கள் எழுந்துவிட்டதை நான் கண்டுள்ளேன். ஆண் மக்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் பெண் மக்களுக்கே வீட்டையும் சொத்தையும் கொடுக்கும் ஊர்ப் பழக்கத்தை வன்மையாகச் சாடியவர்கள் இவ்வறிஞர். 'அலி' என்று தமது பெயர் அனர்த்தப்படாமல் இருக்க, உச்சரிப்புச் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக, 'அலி' என்பதை, 'அலிய்' என்று எழுதி மாற்றம் வருத்திய மனிதர் இவர். சில காலம், நமதூர் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் 'தீனியாத்' ஆசிரியராகப் பணியாற்றிச் சேவை செய்துள்ளார்கள். அதனால், இந்தத் தலைமுறை மாணவர்களுள் பலருக்கு மிகவும் அறிமுகமானவர்கள் இந்த 'அலியாலிம்சா'. கொள்கை விஷயத்தில் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் 'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்ற மறைவற்ற பேச்சு (Frank talk) பலருக்குப் பிடிக்கும். குறிப்பாகத் தம்பி ஜமீலுக்கு. "அலிய் ஆலிம்சா, 'மப்ரூக் கார்கோ' உரிமையாளர் அப்துல் கரீமின் பாசமிகு தந்தையாவார்"
மர்ஹூம் ஷரஃபுத்தீன் ஹாஜியார் தட்டாரத் தெரு

'ஒற்றுமைச் சகோதரர்கள்' என்ற பெயருக்குச் சொந்தமானவர்கள், இவர்களும் இவர்களின் தம்பி (மர்ஹூம்) அப்துல்ஹாதி அவர்களுமாவர். அண்ணனும் தம்பியும், சொல்லி வைத்தாற்போன்று, அடுத்தடுத்துச் சில நாட்களில் இறந்தனர். பணக்காரராக இருந்தும், சிறிதளவும் பெருமையில்லாத அற்புத மனிதர்! கொழும்பில் இருந்த 'ஏ.எஸ்.எம். ஹாஜியார் & சன்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமைப் பங்குதாரராக இருந்த இவர்களிடம் பணி புரிந்த ஒருவர் சொன்ன தகவல் ஒன்று: கம்பெனியில் வேலை செய்த பணியாளர்களுள் எவரேனும் தவறு செய்தால், அதை இவர்கள் திருத்தும் பாணியே வேறு. "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்கமாட்டார்களாம். "தம்பி இப்படிச் செய்திருக்கலாமே?" என்று கேட்டு, தவறிழைத்தவர் தன் தவற்றை உணரும்படிச் செய்வார்களாம்!

மர்ஹூம் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் ஆஸ்பத்திரித் தெரு

இவர் காலத்தில் இருந்த ஊர்த் தலைவர்களுள் இவர் குறிப்பிடத் தக்கவர். ஏன்? இவர்களின் வீடு இருக்கும் ஆஸ்பத்திரித் தெரு முனையிலிருந்து நடுத்தெருவின் கடைசியிலிருக்கும் மரைக்கா பள்ளிக்கு நடந்தே வந்து, தம் நண்பர்களுடன் அமர்ந்து, தம் விவேகமான கருத்தாடல்களால், அவர்களைச் செவிமடுக்கச் செய்பவர். சிக்கலான சமூகப் பிரச்சினைகளுக்குத் தமது 'இராஜ தந்திரமான' ஆலோசனைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்க உதவிய முதிர்ந்த அறிவாளி. மத்தியஸ்தம் செய்வதில் நுணுக்கமானவர். சிரிக்க வைப்பார்; சிந்திக்கவும் வைப்பார்.

மர்ஹூம் அப்துர்ரஹீம் கீழத்தெரு

கடைத்தெருவில் வியாபாரியாக இருந்தாலும், கடமையான தொழுகையை, அதனதன் நேரத்தில், பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவந்த நல்ல மனிதர். நம் 'கணினிச் செம்மல்' தம்பி ஜமீலின் பெரிய வாப்பா.

மர்ஹூம் சோமப்பா நடுத்தெரு

'சோமப்பா' என்றவுடன், இன்றுகூட, எங்களுக்கு அவித்த கொண்டைக் கடலைதான் நினைவுக்கு வருகின்றது! 'சேகு முஹம்மது அப்பா' என்ற இயற்பெயர்தான், 'சோமப்பா' எனச் சுருங்கிவிட்டது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மரைக்கா பள்ளியை நோக்கி வந்து, 'பாங்கு' மேடைக்குப் போய், 'சலவாத்' ஓதத் தொடங்கிவிடுவார்கள். பகல் வேளைகளில், வீட்டிலிருந்து கொண்டைக் கடலையை அவித்துக்கொண்டு கிளம்பி, தாம் செல்லும் வழியிலிருக்கும் வீடுகளுக்கும் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து, பாசத்தைப் பொழிவார்கள். இவர்களின் சந்ததிகள் (சின்னமச்சி வீடு) வளமாக வாழ்வதற்கு, இப்பெரியாரின் துஆவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

மர்ஹூம் அல்ஹாஜ் அப்துஷ்ஷகூர் ஆலிம் தட்டாரத் தெரு

நாங்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களாக இருந்த காலங்களில் எங்களுக்கு மார்க்க வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள். 'அப்துஷ்ஷுக்கூர் ஹாஜியார்' என்றே பிரபலமான இவ்வறிஞர், தேர்ந்த மார்க்க அறிஞர் (ஆலிம்) என்பது பலருக்குத் தெரியாது! தாய்மொழியான தமிழைத் தவிர, ஆங்கிலம், அரபி, உர்தூ முதலிய மொழிகளிலும் புலமை பெற்றவர். 'தப்லீக்' என்ற தீனுடைய உழைப்பில், உண்மையிலேயே 'உழைத்தவர்' என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர். உலக நாடுகள் பலவற்றுக்குச் சென்று தீனுடைய உழைப்பைச் செய்தவர். தனிமையில் இவர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்குப் பல முறை கிட்டியது. அந்நேரங்களில் இவ்வறிஞரின் வழிகாட்டல்கள் எனக்குப் பயனுள்ளவையாக இருந்துள்ளன. பேணுதல், ஈடுபாடு என்பவற்றை இவர்களிடம் நான் நேரில் கண்டுள்ளேன்: கற்றுள்ளேன்.

என் நினைவில் வந்தவர்களைத் தொகுத்தேன். இதில், உண்மையாளராகவும், உழைப்பாளராகவும், எளிமையாளராகவும், உண்மையுரைப்பதில் துணிச்சலானவராகவும், சேவையாளராகவும், அன்பாளராகவும், செழுமையிலும் செம்மையாளராகவும், நுண்ணிய அறிவாளராகவும், வணக்கவாளியாகவும், சிறார்களிடம் அன்பு பாராட்டுபவராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் இருந்தவர்களைப் பற்றிய சிறு சிறு அறிமுகத் தகவல்களைத் தந்துள்ளேன். நம் வாசகர்கள் தம் பெற்றோர் அல்லது பெரியோர் மூலம் அறிந்த நல்லவர்களைப் பற்றியும் பின்னூட்டம் இடுங்களேன், பார்ப்போம். அத்தகையவர்கள் மறைந்த மாண்பாளர்களாக இருக்கட்டும்.

- அதிரை அஹ்மது
 
இந்த கட்டுரைக்கு அதிரைநிருபர் வலைப்பூவில் வந்த கருத்துரைகள். கட்டுரையில் விடுபட்டவர்களை நினைவேந்தி இருக்கிறார்கள். அதனை நன்றியோடு பதிவிடுகிறோம்.

அபுஇபுறாஹிம் சொன்னது…

    உங்களால் மட்டுமே இதனையும் இதற்குமேலும் தொகுக்க முடியும், இங்கே தொகுத்தவர்களால்லாமல் இன்னுமிருப்பவர்களை இங்கே பதிந்தால் அடுத்தப் பதிவுக்கும் வரும் என்ற நம்பிக்கையில் இன்ஷா அல்லாஹ் என்னறிவுக்கு எட்டியதை சொல்ல முயற்சிக்கிறேன்.

    அதிரை அஹ்மது(மாமா) சீறப்பான முயற்சி தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்.
    Tuesday, October 19, 2010 12:04:00 PM

அபுஇபுறாஹிம் சொன்னது…

    ஜனாப் மர்ஹூம் அப்பாஸ் ஹாஜியார் (புதுமனைத் தெரு) இளைய சமுதாயத்தின் உள்ளங்களின் நீங்கா இடம் பெற்றவர்கள், இளைஞர்களை இளைஞர்களாக நடத்துபவர்கள் இவர்களின் பேராற்றல் அன்பாலும் அதட்டலாலும் அப்படியே இளையவர்களை கட்டிப் போடும் அழகே தனிதான், நல்ல வழிகாட்டி, மேல் படிப்புக்கு என்று யார் சென்னை சென்றாலும் அவர்களுக்கு முன்னின்று எல்லாவகை உதவிகள் செய்வதிலும் தங்குமிடமும் கொடுப்பார்கள். இவர்களைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் இன்னும் நீளும் இன்ஷா அல்லாஹ் இன்னும் மனம் வென்றவர்கள் தொடரும்...
    Tuesday, October 19, 2010 12:18:00 PM

crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சாவிடம் இது பற்றி பேசியப்பின் பதிகிறேன்.விடுபட்டவர்களை பற்றியும் கேட்டேன் அதற்கு கருதில் சொல்லுங்கள் என்றார்கள் ஆனால் அப்படி நான் வக்காலத்து வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன்.பெரியவங்களை பற்றி அரிய தந்ததற்கு சாச்சாவிற்கு நன்றி!.
    Tuesday, October 19, 2010 12:21:00 PM


அபுஇபுறாஹிம் சொன்னது…

    அதிரைப் பெருமக்களின் வாழ்க்கைத் தரம் உயர சில நல்லவர்களும் தங்களை அறியாமலே சயநலம் கானாமல் ஏணியாக இருந்து மேலேற்றி விட்டவர்களும் நிறைய இருக்கிறார்கள் அவர்களைப் பற்றியும் கட்டாயம் இங்கே பதிய வேண்டும்.
    Tuesday, October 19, 2010 12:39:00 PM


அப்துல்மாலிக் சொன்னது…

    எத்தனையோ பெரியவர்களை பள்ளிகளிலும், கேள்விப்பட்டும் அறிந்திருக்கிறோம், நம் ஊரில் இருந்த நல்ல மனிதர்களை சேகரித்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள், இன்னும் எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்து நல்லது மட்டுமே செய்து மறைந்திருக்கிறார்கள், அண்ணார்களின் ஆத்மா இறைவனடி சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

    இது இளைய சந்ததினருக்கு ஒரு பாடமாகவே அமையுமென்றும், அவர்களை பற்றி தெரிந்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு

    தொடருங்கள்..
    Tuesday, October 19, 2010 12:44:00 PM

Yasir சொன்னது…

    மர்ஹூம் அஹ்மது தம்பி கடல்கரைத் தெரு--தூண்டி முள் ஆலிம்சா பற்றி எழுதிய அகமது காக்காவிற்க்கு நன்றி...நான் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம் அவர்களிடம் இருந்து தான் - 1 ரூபாய் 25 ஜந்து பைசா...சிறிய வயதில் அவர்கள் வீட்டில் மணி கோர்க்க சென்றபோது கிடைத்தது...வேலையும் கொடுத்து ..மார்க்க அறிவையும் போதித்தார்கள்..அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானக....

    'அலியாலிம்சா' அவர்களை போன்ற தைரியசாலியை நான் கண்டதில்லை..ஒரு தடவை கடற்கரைப்பள்ளிக்கு வந்து...கந்தூரிதான் எடுப்பதுதான் தாங்களுடைய தார்மீக கடமை ( அந்த மடையர்களுக்கு ஹஜ்ஜைவிட இது தான் பெரிதாக தெரிந்தது.இப்போழுது அந்த நிலமை மாறி விட்டது )என்று கொண்டாடுபவர்களின் மத்தியில் நீங்கள் செய்வது அனாச்சாரம் மார்க்கத்துக்கு எதிரானது என்று கூறிய வார்த்தைகள் இன்றும் என் கண் முன் உள்ளது
    Tuesday, October 19, 2010 1:06:00 PM


Adirai Express சொன்னது…

    பதிந்தவற்றில் கடைசி இருவரும் எங்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    இன்னொரு முக்கியமான செய்தி:
    மர்ஹூம் அல்ஹாஜ் அப்துஷ்ஷகூர் ஆலிம் அவர்கள் இறந்த தினத்தன்று கண்ட மக்களின் கூட்டத்தை இதுவரை(28 வருடங்களாக) நான் கண்டதில்லை.

    அதேபோல் அவர்களின் உடல் இன்றும் மண்ணில் மக்கிப் போகவில்லை, அவர்களின் உடலை என் தம்பி சில காலங்களுக்கு(2 வருடம்) முன் கண்டு இருக்கிறான்

    குறிப்பு : அவர்கள் இறந்து கிட்டதட்ட 10-15 வருடம் இருக்குமென நினைக்கிறேன்

    அப்புறம் சோமப்பாவை பற்றி நிறைய இருக்கிறது, ஆனால் பின்னூட்டத்தில் எப்படி விளக்குவதென்று தெரியவில்லை

    அவர்களை நினைவுக்கூர்ந்த அஹ்மது மாமா அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்
    Tuesday, October 19, 2010 1:33:00 PM



sabeer சொன்னது…

    அஹ்மத் காக்கா,

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நீங்கள் மேலும் மேலும் நலமாக இருக்க என் துஆ.

    பிரார்த்திப்பது யாராயிருந்தால் என்ன; ப்ரார்த்தனைதான் முக்கியம். (எனினும், தம்மாமில் உங்களைக் கண்ட பலரில் நானும் ஒருவன். நினைவில் வைத்துக்கொளுமளவிற்கு பரிச்சயமில்லைதான்)

    காத்திருப்புகளுக்கான மொத்த அர்த்தம் உங்கள் ஆக்கம். நம் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை வாசிக்க வாசிக்க மெய் சிலிர்த்தது பொய்யல்ல.

    புலனுக்குப் புலப்படாத உணர்வொண்று கட்டுரையயை படிக்கும்போது என்னுள் நிலவியது, காரணம் நீங்கள் குறிப்பிடும் நல்லவர்களின் தனித்தண்மையும் வாழ்ந்த விதமுமா அல்லது அதை நீங்கள் சொன்ன  விதமா (style of narration)என்று பிடிபடவில்லை.

    சரி, எங்களில் பலர் விமானம் ஏறவும், ஊரில் ஒண்ணுக்கும் உதவாமல் போக இருந்த எங்களைப் போன்ற பலரை வெளிநாட்டில் உழைத்து குடும்பங்களை காக்கவும் காரணமான எங்கள் MB மாமா பற்றி ஏன் எழுதவில்லை?


    உங்களுக்குத் தெரியவில்லை எனில் ஊரைக் கேளுங்கள்.

    நான் தொடர்பான ஒரு நிகழ்வைச்சொல்லி விடுகிறேன். மும்பையில் வெளிநாடு போக முயன்ற காலங்களில் (1984) "நீ படிச்சவன்டா . சொந்த முயற்சியிலேயே போயிடலாம்"னு உசுப்பேத்திவிட்டதால MB மாமாட்ட கொடுக்காமல் ஒரு கள்ள நிறுவனத்திடம் கொடுத்து மாட்டி..மாமா எந்த கைமாறும் எதிர்பாராமல் passportஐ வாங்கித்தந்தார்கள். அதுமுதல், எங்கள் இருவருக்கிடையே உறுதியான ஒரு அன்புப் பிணைப்பு நிலவியது. அவர்களுக்கும் தாங்கள் குறிப்பிட்ட மற்றும் விடுபட்ட நல்ல மனிதர்களுக்கும் சுவணம் வேண்டி இறைஞ்சுகிறேன்.
    Tuesday, October 19, 2010 1:45:00 PM


ஜமீல் சொன்னது…

    இப்பதிவைப் படித்தபோது முதலில் கொஞ்சம்போல் சினவயப்பட்டேன்! பணியழுத்தம் காரணமாக உடனே கருத்துச் சொல்லாமல் சென்றுவிட்டேன்.

    சினத்தின் காரணம்: தமிழகத்திலுள்ள சாதி, மதம், வட்டம், மாவட்டம், வர்க்கம், தெரு ஆகிய அனைத்துக்கும் பொதுவானவரும் - அனைவரும் இன்றும் நன்றியுடன் நினைவுகூரும் எம் எம்பிஎம் காக்காவின் பெயர் இல்லாமல் 'அதிரை வரலாறு ...' எவ்வாறு தொடங்கி எவ்வாறு முடிய முடியும்?

    பிஸ்மியும் ஆமீனும் இல்லாத அல்ஃபாதிஹாவா?

    பின்னர் வந்து பார்த்தபோது தம்பி சபீர் கொஞ்சம்போல் என் சினம் தணித்திருந்தார். அவருக்கு நன்றி!

    இப்பதிவில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிப்பதிவுக்கு உரியவர்கள்தாம்; அதில் ஐயமில்லை. குறிப்பாக, 'ஆலிம்' எனும் சொல்லுக்கு அடையாள மனிதராக வாழ்ந்து மறைந்த, அதிரையின் ஒரே ஆலிமாக நான் கண்ட அலிய் ஆலிம் அவர்களைப் பற்றி எழுதுவதற்கு நல்லவை நிறைய உண்டு.

    சில தகவல் பிழைகள்:
    'அபுசாலிஹ் மாமா' என இங்குப் பிழையாகக் குறிப்பிடப்படுவர் எனக்கு மாமாவான கேப்பிஎம் முஹம்மது ஸாலிஹ் அவர்களாவார். அற்புதமான காரீ அவர். ரமளானின் ஹிஸ்பில் அவரது கிராஅத் தனியாகத் தெரியும். அதிகமான பொழுதைப் பள்ளியில் கழித்தவர்.

    எங்கள் தெருவில் 'அபுஸாலிஹ்' என்பவர் ஒருவர் இருந்தார். அவரைத் தொப்பி இல்லாமலும் நான் பார்த்ததில்லை; பள்ளிக்குள்ளும் பார்த்ததில்லை.

    என் பாட்டனாருக்கு என் தந்தைதாம் மூத்த மகன். இப்பதிவில் 'அப்துர்ரஹீம்' எனக் குறிப்பிடப் பட்டிருப்பவர் எங்கள் சின்னவாப்பா. பிள்ளைகள் இல்லாத அவருக்கு நாங்களே பிள்ளைகள். பாசத்தைப் பிள்ளைகள்மீது பொழிந்தவர். பழைய துலுக்காப் பள்ளியின் தூண் ஒன்றில் அவருடைய மிஸ்வாக் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். அவர் தொழுதுவிட்டு வரும்வரை ரொம்பச் சின்ன வயதில் நான் சாய்ந்து கொண்டு காத்திருக்கும் அந்தத் தூண்தான் மிஸ்வாக் அடையாளம். எங்களுக்குச் சின்னவாப்பாதான் செல்ல வாப்பா. அவர் வாழ்கிறார் - என் மகனின் பெயரில்.

    கூடுதல் தகவல்:
    தூண்டி முள்ளு ஆலிம்சாவுக்கு 'ஒலகமேடை பயான்' என்ற செல்லப் பெயரும் இருந்தது. உண்மையான தாயீ அவர்.
    Tuesday, October 19, 2010 5:47:00 PM


ZAKIR HUSSAIN சொன்னது…

    Bro. அதிரை அஹ்மது

    உங்கள் தொகுப்பு பாராட்டுக்குறியது. நீங்கள் சொன்ன சிலரை நான் பார்த்து இருக்கிறேன்.கமெண்ட்ஸ் எழுதுபவர்களும் சிலரைப்பற்றி குறிப்பிடலாம்.
    Tuesday, October 19, 2010 6:22:00 PM



அபுஇபுறாஹிம் சொன்னது…

    பெரும் மதிப்பை பெற்ற எங்கள் அலிய் ஆலீம் அவர்களோடு எனக்கிருந்த நெருக்கமான நிஜத்தின் நினைவுகள், இதுநாள் எனக்கு யாருமே தாய் வழி தந்தை வழி மூததையர்களின் தோன்றல் வழிமுறைகளை சொல்லி தந்தது இல்லை அவர்கள் ஓவ்வொரு முறையும் அவர்களோடு சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நினைவு படுத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் போல் என் நினைவுக்கு தெரிந்து இதுவரை சொல்லிக் காட்டியதில்லை.

    என்ன முறை சொல்லி கூப்பிட வேண்டுமென்றும் பழக்கப் படுத்தி வந்தார்கள்.

    அன்பின் ஜமீல் காக்கா, தேனீபோல் சுறு சுறுப்பான்வங்களை ச்ஃபீர் காக்கா தேனாக ஞாபகப் படுத்தியதை தாங்கள் அழுத்தமாக அங்கீகாரம் கொடுத்திருக்கிறீர்கள், எல்லாம் வல்லாஹ் அவர்களின் ஆகிரத் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக !
    Tuesday, October 19, 2010 7:48:00 PM


அலாவுதீன்.S. சொன்னது…

    சகோ. அஹ்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பழைய நினைவுகளை மீட்டியதற்கு நன்றியும்! வாழத்துக்களும்!
    /// sabeer சொன்னது… சரி, எங்களில் பலர் விமானம் ஏறவும், ஊரில் ஒண்ணுக்கும் உதவாமல் போக இருந்த எங்களைப் போன்ற பலரை வெளிநாட்டில் உழைத்து குடும்பங்களை காக்கவும் காரணமான எங்கள் MB மாமா பற்றி ஏன் எழுதவில்லை? ///

    சகோ.சபீர் சொன்னவுடன் எனக்கு MB மாமாவைப்பற்றி ஞாபகம் வருகிறது. கண்டிப்பாக இதை நான் இங்கு பதிய வேண்டும். என் உம்மம்மாவின் உதவியால் முதலில் அவர்களை சந்தித்தேன். பாம்பே புறப்பட்டு வா ஏற்பாடு செய்வோம் என்று சொன்னார்கள். 1980 அல்லது 1981 வருடம் என்று நினைக்கிறேன். பாம்பே சென்றபிறகு என்னையும் மற்றும் சில சகோதரர்களையும் ஒவ்வொரு ஏஜென்டிடமும் நேர்காணலுக்கு அழைத்து செல்வார்கள். அந்த வயதிலும் நடையே ஓட்டமாகத்தான் இருக்கும். எப்பொழுதும் புன்சிரிப்புடன்தான் இருப்பார்கள்.
    நான் செலவுக்கு கொண்டு சென்ற பணம் கரைந்து விட்டது. (சாப்பாட்டுக்கு மட்டும் தனியாக பணம் இருந்த நிலையில்) நான் தங்கியிருந்த இடத்திற்கு வாடகை கொடுக்க பணம் இல்லை. என்னோடு இருந்த சகோதரர்கள் MB மாமாவிடம் என்னுடைய நிலைமையை எடுத்து சொன்னவுடன். MB மாமா அவர்கள் தங்கியிருந்த அறையில் என்னையும் தங்கிக்கொள்ள அனுமதி கொடுத்தார்கள். அது ஒன்றும் பெரிய அறை கிடையாது. ஏற்கனவே அவர்களின் உறவின் முறையில் ஒரு கேரள சகோதரர் அங்கு தங்கியிருந்தார். ஒரு மாதம் காலம் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
    அறைதான் சிறிதே தவிர MB மாமாவின் உள்ளம் பெரிது (இளகிய மனது). அவர்களால் நிறைய பேர் பலன் அடைந்திருக்கிறார்கள். வல்ல அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தை தந்தருள் புரியட்டும். மேலும் சென்றுபோன நல்லடியார்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் சொர்க்கத்தை வழங்கி அருள் புரியட்டும்.
    (என்னால் சவூதிக்கு செல்ல முடியவில்லை. ஏஜெண்டிற்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற்று ஊர் வந்து அல்லாஹ்வின் அருளால் என் சகோதரரரின் உதவியால் அமீரகத்திற்கு வந்துவிட்டேன்).

    இன்னொரு மலரும் நினைவுகள்: சகோ. ஜாகிரும், சகோ. சபீரும்தான் என்னை சென்னை செண்டரலில் பாம்பே ரயிலில் வழி அனுப்பி வைத்தவர்கள். சகோ. ஜாகிர் எனக்காக டிபன் வாங்கி திரும்பி வருவதற்குள் ரயில் புறப்பட சகோ. ஜாகிர் ஓடி வந்து கொடுக்க நான் வாங்குவதற்கு முயற்சி செய்து தவறி டிபன் கீழே விழுந்து விட்டது.(இந்த நிகழ்வை அப்படியே உங்கள் மனதில் ஓட விட்டுப்பாருங்கள்).
    Tuesday, October 19, 2010 8:42:00 PM



Naina Mohamed சொன்னது…

    பல சூழ்நிலையால் இன்னும் வெளியிடப்படாத அதிரை வரலாறு என்ற புத்தகத்தில் முதல் பாடமாக வெளிவர வேண்டிய பொக்கிஷ தகவல்களாக‌ நம்மவர்கள் பற்றிய இச்செய்திகளை கருதுகிறேன். நம் ஊர் பெரும் மாமேதைகளும், மார்க்க அறிஞர் பெருமக்களும், செல்வச்சீமான்களும், கொடை வள்ளல்களும், அன்பிற்கினியவர்களும் வாழ்ந்து சென்ற பூமி என்று நினைக்கும் பொழுது உள்ளம் பெருமிதம் கொள்கிறது. இறைவனுக்கே நன்றி செலுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்....
    Tuesday, October 19, 2010 8:52:00 PM



Dawood சொன்னது…

    Good to remind ourselves of our elders and their great work to the community. Being grown outside of Adirai most of my adult and childhood life, I couldn't recognize most of the names mentioned in the article except few I know off. Br Ahmed, great work.

    Me being in Dallas Texas, almost 1000 miles away from Adirai makkal in US (i.e. California or New York), my only contact with Adirai makkal is telephone and Internet. For rest of us also being living outside of India, sometimes we tend not knowing even our own families and relatives and sometimes we even forget their faces. I really appreciate if someone takes a interest and publish some of our elder photos and also I would like to see photo of our active Adirai brothers who participate in this and other forums.

    So far in my life, I just met Jameel kakka once in Sharjah couple of yrs ago and I'm afraid that I lost his facial memory, again after 4 or 5 yrs I met Br Tajudeen in August in Dubai and its been years I had met Br Naina Thambi or Jamal from Hospital street and so on.

    Talk to you later... Dawood, US
     Tuesday, October 19, 2010 10:22:00 PM


அதிரை-நிருபர்-குழு சொன்னது…

    அன்புச் சகோதரர்
    crown சொன்னது…

    'அலி' என்பதை, 'அலிய்' என்று எழுதி மாற்றம் வருத்திய மனிதர் இவர். சில காலம், நமதூர் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் 'தீனியாத்' ஆசிரியராகப் பணியாற்றிச் சேவை செய்துள்ளார்கள். அதனால், இந்தத் தலைமுறை மாணவர்களுள் பலருக்கு மிகவும் அறிமுகமானவர்கள் இந்த 'அலியாலிம்சா'. கொள்கை விஷயத்தில் அவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களின் 'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு' என்ற மறைவற்ற பேச்சு (Frank talk) பலருக்குப் பிடிக்கும். குறிப்பாகத் தம்பி ஜமீலுக்கு. "அலிய் ஆலிம்சா, 'மப்ரூக் கார்கோ' உரிமையாளர் அப்துல் கரீமின் பாசமிகு தந்தையாவார்"
    --------------------------------------------------------------
    அஸ்ஸலாமு அலைக்கும். அலிய் என்று என்னிடமும் சொல்லி காட்டியது பசுமையாக உள்ளது.மேலும் இவர்களே என் மானசீக குருவாகவும் இருந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு வயதானவுடன் சிலகாலம் மறதி ஏற்பட்டவுடன் அவர்களிடமே சென்று நான் சொன்னேன் உங்களுக்கு மறதி அதிகம் ஆகிவிடுகிறது ஆகவே இனி உங்களிடம் எந்த சந்தேகத்திற்கும் விளக்கம் கேட்ட மாட்டேன்னு சொன்னேன் சிரித்துக்கொண்டே சரி மருமகனாரே என்றார்கள்.அவர்களின் மகனார் சகோ.அப்துல் கரீம் எமக்கு உடன் பிறவா சகோதரரே என்றென்றும்.

    Tuesday, October 19, 2010 12:57:00 PM
    Tuesday, October 19, 2010 11:24:00 PM



Shahulhameed சொன்னது…

    அஸ்ஸலாமு அழைக்கும்.
    அஹ்மத் காக்கா தங்களின் ஆக்கம் அருமை மேலும் விடு பட்ட நல்லோர்களை பற்றியும் தொடராக எழுதுங்களேன்
     Tuesday, October 19, 2010 11:34:00 PM



அபுஇபுறாஹிம் சொன்னது…

    Dawood சொன்னது…

    So far in my life, I just met Jameel kakka once in Sharjah couple of yrs ago and I'm afraid that I lost his facial memory, again after 4 or 5 yrs I met Br Tajudeen in August in Dubai and its been years I had met Br Naina Thambi.... //

    Assalaamu Alaikkum (warh)

    Dear Bro.Sheik Dawood:

    Thank you for your comments. Once I visit to blogger (site) side as a default typescript turning to tamil typing :) ஏன்னா பழக்க தோஷம் அப்படியாயிடுச்சு... தொடர்ந்து அதிரைநிருபரோடு உலாவாருங்கள் சொந்தங்களோடு அருகிலிருந்து நேசம் பேசும் உணர்வு நிச்சயம் கிடைக்கும்...
     Tuesday, October 19, 2010 11:48:00 PM



Shahulhameed சொன்னது…

    மர்ஹூம் அஹ்மது தம்பி என்ற அவர்களின் பெயர் இன்றுதான் எனக்கு தெரிய வந்தது .நாங்கள் எல்லாம் அவர்களை தூண்டி முள் ஆலிம்சா என்று அழைத்து அவர்களின் பெயர் மறந்து விட்டது.

    தூண்டி முள் ஆலிம்சா எங்கு சென்றாலும் தோள்களிலும் இரு பைகள் தொங்கி கொண்டிருக்கும்.
    அவர்களின் கடைசி காலங்களில் எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி இருந்தார்கள் அவர்களின் மனைவி முடியாத நிலையில் இருந்த போது மனைவின் அணைத்து தேவை களையும் மனம் கோனது செய்து வந்தார்கள்.
    Tuesday, October 19, 2010 11:58:00 PM


ஜமீல் சொன்னது…

    It is, indeed, nice to see here the owner of adirai.com Br. Dawood.
    Reply Wednesday, October 20, 2010 2:16:00 AM
crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த பதிவை கண்டதும் சாச்சவுக்கு போன் போட்டு கேட்டேன் சில குறிபிட்ட தலைகள் விட்டுவிட்டது(என் சொந்தகாரர்கள்)அது ஏன் என்று வினவினேன் காரணம் அவரைப்பற்றி என்னை விட சாச்சா நன்கு அறிந்திருப்பார்கள் சாச்சா சொன்னார்கள் இதேயே கருத்தா வெளியிடுங்களேன்னு என் முதல் கருத்தும் கூட நான் சொன்னேன் வக்காலத்து வாங்க மாட்டேன்னு.சாச்சாவும் அதுனாலேயே அவரின் உடன் பிறந்தவர் எல்லாரலும் அன்பாய் அழைக்கப்படுபவர் (MB மாமா) அவர்களைப்பற்றி எழுதாமால் பிறர் சொல்ல விட்டுவிட்டார்கள்.
    Wednesday, October 20, 2010 2:19:00 AM


உன்னைப்போல் ஒருவன் சொன்னது…

    அஹமது மாமா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.,
    உங்கள் உடல்நிலையைகூட‌ பொருட்படுத்தாமல், வாழ்ந்து காட்டிய முன்னோர்களில் நல்ல மனிதர்களின் ஒருசிலரை எங்களோடு உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்: உங்கள் உடல்நிலையை அல்லாஹ் சீராக மேலும் போதிய நேரமும் கிடைத்தால், விடுப்பட்டவர்களை தொடராக தொய்வின்றி தொடருங்கள் இன்ஷா அல்லாஹ் புத்தகமாக முடிக்க வாய்ப்புகள் அதிகம்.


    அதில் குறிப்பாகா அலிய் ஆலிம் அவர்கள் ஒருமுறை எங்கள் வீட்டை கடக்கும் பொழுது எங்கள் வீட்டில் ரேடியோ சத்தம் கேட்டு விட்டது போலும் உடனே குடையில் தன் முகத்தை மறைத்தவாரு (இதுநாள் வரை பெண்கள்தான் ஆண்களை பார்க்க வெட்கப் படுவதை பார்த்து இருக்கின்றோம் ஆனால் அலிய் ஆலிம் மேலும் அவர்களின் மாமனார் அபூபக்கர் ஆலிம் போன்றோர் மாற்று பெண்களை பார்க்க அஞ்சுபவர்கள்), எங்கள் பெரியம்மாவின் பெயர்சொல்லி இது பாக்கர் ஆலிம் (மர்கூம் M.B.முஹம்மத்,M.B அஹம்மத் ஆகியோரின் தந்தையர்) வாழ்ந்த வீடு இங்கே எப்படி செய்த்தானின் சத்தம்" என்று தம் குரலை உயர்த்தி அச்சுரித்தி கூரினார்கள், இவர்கள் போன்றோகள்களின் சொல்கேட்டதால் என்ன‌வோ எங்கள் குடும்பத்த்தில் அனேகர்கள் வீட்டில் இதுநாட்கள் வரை தொ(ல்)லைகாட்சி பொட்டியை அனுமதிப்பது இல்லை நான் சிரியவனாக இருக்கும்பொழுதே எங்கள் வீட்டின் பழுதடைந்த‌ ரேடியோ பெட்டி உமர்தம்பி மாமா அவர்களின் பழுதுபார்க்கும் பனியிடத்திற்க்கும், பப்பரிசி கடைக்கும் அலைந்து கடைசியில் ஜப்பான் காரன் என்ற பழைய சாமான் வாங்குபவனிடம் ஒருசில நடக்கடலைக்காக பண்டமாற்று செய்யப்பட்டது.

    நடையில் எந்திரத்திர்க்கு மறுபெயர்தான் M.B.மாமா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் முஹம்மது மாமா ஒருமுறை எனது முழு ஆண்டு விடுமுறையில் இரண்டு மாதம் அவர்களுடன் பாம்பேயில் தங்க நேரிட்டது, அப்பொழுது அவர்களுடன் அடிக்கடி சாந்தாகுரூஸ் விமான நிலையத்திற்கு வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்ப செல்ல நேரிடும் அப்பொழுது ஏர்போட் வரி ரூ500 என்று நினைக்கிண்றேன் இதைப்பற்றி அனேகர்களுக்கு தெறியும், சிலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை கடைசியில் பணத்திற்கு எங்கே போவது? மாமா அவர்களின் சொந்த பணம்தான் பழியாகும்,
    இந்த சூத்திரத்தை அறிந்த சிலர் மாமாவிடம் லாவகமாக கையேந்துவார்கள் . மாமாவிடம் "என்னிடம் ஏர்போட் வரிகட்ட காசு இல்லை நான் பேன‌வுடன் அனுப்பி வைக்கின்றேன்" என்று வரியை வாங்குவார்கள் பிறகு சில நிமிடங்களில் சபுராளியை பயண அனுப்பவரும் அவர்களின் உறவினரிடத்தில் மாமா அவர்களுக்கு தெறியாமல் அவர்களின் இந்த மிச்சப்படுத்திய (ஏமாத்திய) பணத்த இரகசியாமா ஊருக்கு அனுப்பி வைப்பார்கள் அல்லது சாமான் வாங்கி ஊருக்கு கொண்டுப் போகச்சொல்வார்கள். மாமா அவர்கள் கொண்டு சென்ற பல ஆயிரங்கள் அவர்களின் இலகிய மனதால் கொடைத்தன்மையால் சிலமணித்தியலத்தில் பாக்கட் காலியாகி திரும்பி வரும் டாக்சி காரனுக்குக்கூட‌ கரீம் பாய் சாய் வாலா அக்கவுன்ட்டில் பட்டுவாடா செய்யப்படும். இவை இரண்டு மாதம் மட்டும் நான் கண்ட காட்சிகளில் ஒருசில, மேலும் பல சம்பவங்கள் பதிய வாய்ப்புகள் கிடத்தால் பதியிவேன். இதை ஒருமுறை நானும் எந்து நன்பன் நிஜார் அஹமதுவும் சில சம்பவங்களை நெய்னா தம்பியிடம் வேடிக்க்கையாக கூறியிருக்கின்றோம்.

    நம்மூர்சுற்றிவுள்ள ஊர்காரர்கள்மட்டுமல்ல இராமநாடு முதல் திருநெல்வேலி , வேலுர் வரை அனேக ஏழை கிராமங்கள் ஜமீல் மாமா சொல்வதுபோல் "சாதிமதம்" பார்க்காமல் அல்லாஹ் மாமாவின் மூலம் உதவி செய்தான் என்பதுதான் உண்மை.
    Wednesday, October 20, 2010 6:49:00 AM



harmys சொன்னது…

    இதை அழகிய பொக்கிஷம் என சொல்லலாம் ............
    உயர்ந்த மனிதர்களை பற்றி
    உயர் நோக்குடன் எழுதப்பட்ட
    உயர்தரமான கட்டுரை ...
    நிச்சயமாக படிபவரின் மனதை கொள்ளை கொள்ளும் கட்டுரை ...
    Reply Wednesday, October 20, 2010 10:20:00 AM
ஷரபுத்தீன் நூஹு சொன்னது…

    அஹ்மத் காக்காவுக்கு பாராட்டுகள் , அதீத முயற்சி மேலும் தொடர்ந்திட வேண்டுகிறேன். எங்கள் பெரிய வாப்பா அப்துல்ஹை அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. எங்கள் குடும்பத்தினருக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.

    அப்பாஸ் ஹாஜியார் அவர்களைப் பற்றி தனியாக ஒரு பதிவை காக்கா தர வேண்டும். அவர்களின் உயர்ந்த குணத்திற்கு ஒரு உதாரணம், நான் சென்னை புதுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன் அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டுக்கான நிர்வாகத்தினர் ஒதுக்கீடு அனுமதிக்கான நேர்காணல் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது, எதேச்சையாக அங்கு சென்ற நான் வரிசையில் அப்பாஸ் ஹாஜியரும் அவருடன் ஒரு மாற்று மத சகோதரரும் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்களிடம் சென்று விசாரித்தபோது அந்த சகோதரர் காலஞ்சென்ற ஏ. ஆர் . மாரிமுத்து (பட்டுக்கோட்டை முன்னாள் எம். எல். ஏ ) அவர்களின் மருமகன் என்றும் , அவரின் சேர்க்கைக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்கள் அதற்கு நான் உள்ளே ஆபிஸில் இருப்பது உங்கள் நண்பர்தானே (அப்போது கல்லூரியின் நிர்வாகத்தில் நமதூர் தங்க மகன் ஏ . ஜே . அப்துல் ரஜாக் காக்கா இருந்தார்கள் ) நீங்கள் ஏன் வரிசையில் நிற்க வேண்டும் என்று கேட்ட எனக்கு , நம்ம ஆளுக்கு நமதண்டா மரியாதையை தரவேண்டும் என்று சொன்னார்கள். ஒரு கணம் நான் திகைத்துப் போய்விட்டேன். இன்னும் அந்த நிகழ்வு என் மனதை விட்டு அகலவில்லை.

    அடுத்து அலிய் ஆலிம் அவர்களைப் பற்றி என்னுடைய கருத்து , அவர்கள் மட்டும் நமதூர் மற்ற ஆலிம்களை போல் கொஞ்சம் வசதி உள்ளவர்களாய் இருந்திருந்தால், நமதூரில் இன்றளவும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் அநியாயத்திற்கும் , அனாச்சாரங்களுக்கும் அப்போதே சாவு மணி அடித்துருப்பார்கள். இருந்தாலும் அவர்களின் சக்திக்கு மீறி செயலாற்றினார்கள் என்பதை மறுக்க இயலாது. ஸுபுஹ் தொழுகைக்கு இளைஞ்கர்கள் வருவதில்லை. அட்டாச் பாத்ரூம் வைத்து வீடு காட்டுங்கள் என்று அப்போதே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    ஷரஃபுத்தீன் நூஹு
    1 925 548 3696
    Wednesday, October 20, 2010 12:57:00 PM



ஜாகிர் ஹீசைன் சொன்னது…

    எனக்கு தெறிந்தவரை அதிரையின் ஆலிமாக நான் கண்ட ஆலிம் அபூபக்கர் ஆலிம் 'அதிகமான உதாரணங்கள் உண்டு அதில் சில, வசீலா தேடுவது தர்காவிற்குப்போவது போன்றவற்றை எதிர்த்த முதல் ஆலிம் என்றுக்கூட சொல்லலாம் 'இலங்கையில் அரபிக்கல்லுரியில் ஆசிரியராக பணிபுறிந்தபோது வசீலாவைப்பற்றி அதிகம் பேசிவந்தார்கள் பின் அங்குள்ள உலமாக்கல் மத்தியில் பொரும்பிரச்சனையாக ஆகி கடைசியில் பணியிலிருந்து நீக்கபட்டு பின் வியாபாரியாக இருந்து கடைசியில் அதிரை ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரியில் ஆசிரியராக இருந்து மரணித்தார்கள் நல்ல அரபிப்புலமைவாய்ந்த அறிஞர் 'இலங்கை அரபிக்கல்லூரியில் ஆசிரியராக இருந்துவரும் அப்துல்லா ஆலிம் அவர்களின் தந்தையும் அலிய் ஆலிம் அவர்களின் மாமனாரும் ஆவார்கள், அவர்களை சுவணத்தின் மேலான சுவணமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவணத்தில் நுலையச்செய்வானாக ஆமீன்
     Wednesday, October 20, 2010 2:55:00 PM


அதிரைநிருபர் குழு சொன்னது…

    யாருமே எதிர்ப்பார்த்திராத இந்த அற்புதமான கட்டுரையை நம் பார்வைக்கு எழுதி தந்த அன்பு அதிரை அஹ்மது அவர்களுக்கு மிக்க நன்றி. எமக்கு தெரிந்து இணையத்தில் இப்படி பல அதிரை காலம் சென்ற நல்ல பெரியவர்கள் பற்றி ஒரே பதிவில் வருவது இது தான் முதல் முறை என்று நினைக்கிறோம். இப்பதிவை அதிரையில் உள்ள பள்ளி பாட புத்தகத்தில் பதியப்பட வேண்டும். அல்லாஹ் போதுமானவன்.

    இது போன்று தொடராக வந்தால் நிச்சயம் நம் வருங்களால சமுதாயத்திற்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும். இன்னும் எத்தனையோ சுயநலம் விரும்பாத நல்ல உள்ளங்கள் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். அன்னவர்கள் அனைவரின் மறு உலக வாழ்வுக்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
    Wednesday, October 20, 2010 4:15:00 PM



அதிரை அஹ்மது சொன்னது…

    அன்பர்களே! இன்னும் நல்லவர்கள் பலரைப்பற்றி எழுதுமாறு பரிந்துரை வழங்கியுள்ளீர்கள். வாசகர்களாகிய நீங்கள் பின்னூட்டமிடுவதே போதும் என்று எண்ணுகின்றேன். குறிப்பாக, என் சாச்சா மகன் அப்பாஸ் காக்கா அவர்களைப்பற்றியும், என் உடன்பிறந்த காக்கா எம்.பி. முஹம்மத் (எம்பி மாமா) அவர்களைப்பற்றியும் நானே எழுதுவது, எனக்குச் சரியாகப் படவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.
    Wednesday, October 20, 2010 4:19:00 PM


Shahulhameed சொன்னது…

    அதிரை அஹ்மது சொன்னது…
    என் உடன்பிறந்த காக்கா எம்.பி. முஹம்மத் (எம்பி மாமா) அவர்களைப்பற்றியும் நானே எழுதுவது, எனக்குச் சரியாகப் படவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

    எம்பி மாமா பற்றி நீங்கள் எழுதினால் தான் அவர்களை பற்றிய நிறைய நல்ல விசங்கள் வெளி உலகிற்கு தெரிய வரும் காரணம் நீங்கள் அவரின் சகோதரர் என்பதால் அவர்களை பற்றி மிக நுனுக்கமாக அறிந்து வைத்து இருப்பீர்கள்

    இது போன்றோரின் நல் விசங்களை படிக்கும் எம் போன்றோர் வாழ்கையில் பின்பட்ற ஏதுவாக இருக்கும்
    Wednesday, October 20, 2010 10:27:00 PM



அபுஇபுறாஹிம் சொன்னது…

    இந்த அற்புதமான பதிப்பை பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது எங்கள் காக்கா ஒன்றைச் சொன்னார்கள் மர்ஹும் அப்பாஸ் ஹாஜியார் அவர்கள் காக்காவை பாண்டிச்சேரிக்கு "photo typesetting" படிப்பில் சேர்த்து விட அப்பாஸ் ஹாஜியாரின் மிக நெருங்கிய நட்பு மர்ஹூம் சாஹுல் ஹமீத் (crownனுடைய பெரியப்பா) அவர்களோடு சென்றிருக்கிறார்கள் அங்கே பலதரப்பட்ட பேச்சுகள் வரும்போது மாற்று மதத்தவர்கள் மட்டுமே இருந்த இடத்தில் மாற்றுமதத்தவர் ஒருவர் அன்றைய பிரச்சினையாக இருந்த "சல்மான் ருஷ்டி"க்கு ஆயத்துல்லா கொமைனி அவர்களின் தீர்ப்பு பற்றி காட்டமாக பேசிக் கொண்டிருந்த அந்தச் சூழலில் தன் கருத்தில் நிலையாக "கொமைனியின்" தீர்ப்பு சரிதான் என்றும் சொல்லி தனது தனித் தன்மையை அங்கேயும் நிலை நிறுத்தியிருக்கிறார்கள், எதனையும் நேருக்கு நேர் சந்திக்கும் திரானிதான் இவர்களின் சிறப்பே...
    Wednesday, October 20, 2010 10:52:00 PM



crown சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.என்னமோ போங்க எல்லா வற்றிலும் நாங்கள் பின்னியிருப்பதாக(எங்கள் பின்னனி) வரும் நல் செய்திகளுக்கு அல்லாஹுக்கே நன்றி சொல்லனும்.
    Thursday, October 21, 2010 1:50:00 AM



harmys சொன்னது…

    உணர்வுகளால் பின்னப்பட்ட இந்த அழகிய பொக்கிஷத்தை எப்போதும் அதிரை நிருபரில் உலா வருபவர்களின்
    பார்வையில் தென்படுமாறு வைத்தால் நல்லது என நினைகிறேன் ....காரணம்

    இது கட்டுரைமட்டுமல்ல ......
    நல்லது நினைக்க ,நல்லது செய்ய தூண்டும் self motivating படைப்பு ......
    ஒரு தலைமுறையின் அழகிய வரலாறு ....
    ஒற்றுமையை ஓங்க செய்யும் வீரியம்மிக்க வார்ப்பு ......


    நாம் எத்தனையோ ஆக்கங்களை இணையத தளங்களில் படித்திருக்கிறோம் ..
    ஆனால் இது தந்த நல்பாதிப்பு போல் எதுவும் பாதித்ததாக எனக்கு தெரியவில்லை இது நமதூரை சார்ந்ததாக இருந்தாலும் பொதுவில் அனைவரையும் கவரும் காவியம் .............
    Thursday, October 21, 2010 10:36:00 AM


பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

    நல்லவர்களின் நற் பண்புகளை நலமாக எடுத்து சொன்ன
    காக்கா அதிரை அஹமது அவர்களுக்கு
    நன்றி
    Sunday, October 24, 2010 9:18:00 AM

Read more...

Saturday, 16 October 2010

அபாப் பட்டினம் முதல் அப்துர் ரஹ்மான் பட்டினம் வரை! அதிரை ஹிதாயத் - 01

அன்புமிக்க 'அதிரை வரலாறு' வாசிப்பாளர்களே! இத்தொடர் அதிரைப்பட்டினத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் மூத்தகுடி மக்கள்,ஆலிம்கள், வரலாற்று நூல் வாசிப்பாளர்கள், அதிரைப்பட்டினம் அல்லாத நேர்மையான,நடுநிலையுடைய வரலாற்றாய்வாளர்கள் என பலதரப்பார்களிடம் கண்ட நேர்காணல் அடிப்ப‌டையிலும் அவர்கள் தந்த குறிப்புகளின் வழியிலும் எழுத்தப்பட்டவை. அதுப்போல் தாங்களிடமும் வரலாற்று தகவல்கள்,குறிப்புகள் இருக்குமானால் கருத்துரையாக பதியுங்கள். அன்புடன் அதிரை ஹிதாயத்.

1180ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காயல் நகரில்(கீழக்கரை) இருந்து தஹ்லா மரைக்காயர் என்பவரும் அவர் மனைவி ஆமினா உம்மா அவர்களும்,அவர்களுடன் ஆண்,பெண்,குழந்தைகளுமாக எழுபது நபர்கள் பல மரக்கலங்களில் கிழக்கு நோக்கி பயணப்பட்டார்கள். தங்களுக்கு எல்லா வகைகளிலும் ஏற்ற வாழ்விடம் ஒன்றை அமைக்கும் நோக்கத்தோடு!

சில நாட்கள் பயணத்திற்கு பின்பு அழகிய எழில் கொஞ்சும் கடற்கரை ஒன்று தென்படவே அங்கே முகாமிட்டனர்.

கடலைப்பற்றியும் அதன் அமைப்பைப்பற்றியும் நன்கறிந்தவர்கள் தஹ்லா மரைக்காயர் அவர்களும் அவர்களோடு வந்த சிலரும்.

எனவே தனது வசிப்பிடம் இதுதான் என முடிவெடுத்தனர் ஏகமனதாக!

அதுமுதல் அந்த கடற்கரைப்பட்டினம்தான் அவர்களின் வாழ்விடமானது;அவர்கள்தான் அந்த பட்டினத்தின் முதல் குடிமக்களாவர்.

கீழக்கரையிலிருந்து குடியேறிய அந்த அரபு முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் வியாபாரிகள் அதுவும் கடல் வழிசெய்யும் வியாபாரம்.

அதற்கு ஏற்றார்போல் அமைந்தது அந்த பகுதி இலங்கை தீவின் கீழ்க் கட‌லோரத்திற்கு மிக அருகில் இருந்தது.

அதுபோல் உண்மையிலேயே மிகச்சிறந்த இடங்களில் ஒன்று 'பெட்டி வளைகுடா' அதிலும் சிறந்த இடம். இந்த நிலப்பரப்பிற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளைவு, இப்படி பல காரணங்கள் உண்டு.

அந்த கடற்கரை அமைப்பு மட்டுமின்றி ஊரின் உள்ளேயும் நல்லதொரு இடமாக அமைந்திருந்தது.

எனவே, கடற்கரை அருகேயே தங்களது குடியிருப்புகளை அமைத்தனர்.

இப்போது, வியாபாரம்செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆயத்தமாயினர்.

அதற்கு, முதலாவதாக நல்லதொரு சிறு கப்பல் ஒன்று தேவைப்பட்டது.அவர்கள் பயனித்துவந்த மரக்கலம் வியாபார பயணத்திற்கு போதுமானது அல்ல;அதை நம்பி விலையுயர்ந்தப் பொருட்களை ஏற்றிச் செல்லமுடியாது!

கப்பல் கட்டுவதற்கான மரவகைகள் அணைத்தும் அங்கேயே கிட்டியது.

ஆகவே, கப்பல் கட்டும் வேலை போர்கால அடிப்படையில் நடைப்பெற்று ப‌ல மாதங்களில் முடிவுற்றது.

இப்போது, கீழக்கரை மற்றும் கீழக்கரையிலிருந்து பல ஊர்களுக்கும் இடம் பெயர்ந்த சொந்த பந்தங்களையும் வியாபார தொடர்புகளையும் கண்டு பேசி வியாபார பொருட்களை எடுத்துவந்தனர், ஒரு குழுவினர்.அதில் பல்வேறு வகைவகையான பொருட்கள் குவிந்திருந்தது.

1181ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வியாபாரக் கப்பல் பதினெழு பேர் கொண்ட குழுவாக இலங்கை சென்றது. அந்த வியாபார பயணத்திற்கு 'அபாப்' எனப் பெயரிட்டனர்.

'அபாப்' என பெயரிட்ட முதல் வியாபரப் பயணம் மிகவும் வெற்றியடைந்தது.

பல பயணங்கள் மேற்கொண்டு கிடைக்கும் லாபம் இது ஒன்றிலேயே கிட்டியது.

எனவே, அந்த பட்டினத்திற்கும் 'அபாப்' என பெயரிட்டனர்.

ஆகவே, அந்த பட்டினத்தின் முதல் பெயர் 'அபாப்பட்டினம்' என ஆயிற்று!

முதல் பயணம்தந்த ஊட்டம், பலப்பல பயணங்களுக்கு வித்திட்டது.செல்வம் குவிந்தது; வேறு பல ஊர்களிலும் இருந்த சொந்தங்களும் அபாப்பட்டினத்தில் குடியேறினர்.

அபாப்பட்டினத்தின் மொத்த மக்கள் தொகை அறநூறை(600)விஞ்சி நின்றது;கப்பல்களின் எண்ணிக்கையும் ஏழு ஆயிற்று!

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...

Read more...

Thursday, 14 October 2010

அதிவீரராமபாண்டியன் காலத்தில் அதிராம்பட்டினத்தை அரசாண்டது யார்?

அதிவீரராமபாண்டியன் காலத்தில் அதிராம்பட்டினத்தை அரசாண்டது யார்? அதிரை ஹிதாயத் 

அதிராம்பட்டினத்தை அதிவீரராம பாண்டியன் அரசாண்டான் என்பது ஒரு கற்பனை  நம்பிக்கை என்பதை தக்க சான்றுகளுடன் முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.
என்றாலும், அதிவீரராம பண்டியன் காலத்தில்(கி.பி.1564 -1606) அதிராம்பட்டினத்தை யார் அரசாண்டது என்பதை ஒரு சிறு குறிப்புகள் மூலம் பார்த்தோமென்றால், இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

தஞ்சை நாயக்கர்கள்:
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கன்  என்பவனாவான். சேவப்ப நாயக்கன், விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயனுக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கனாகவும் இருந்த திம்மப்ப நாகக்கனின் மகன்.

   1. 1532 - 1560 செவ்வப்ப நாயக்கர்
   2. 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
   3. 1600 - 1632 இரகுநாத நாயக்கர்
   4. 1633 - 1673 விஜயராகவ நாயக்கர்

அதிவீரராம பாண்டியன் பிறப்பதற்கு 32வருடங்களுக்கு முன் ஆரம்பித்து,அவன் இறந்து 67 வருடங்கள் வரை தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியில் இருந்தார்கள்.

அதாவது,1532ஆம் ஆண்டு துவக்கம் 1673ம் ஆண்டு முடிய சரியாக 141 வருடங்கள் தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி இருந்துள்ளது.

பீஜப்பூர் படையின் தளபதிகளால் ஒருவரான ஏகோஜி எனும் மராட்டியர் தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரை கி.பி. 1675- ஆம் ஆண்டில்
சண்டையிட்டுக் கொன்று, தஞ்சையில் மராட்டியர் ஆட்சி முறையைத் தோற்றுவித்தார். அதுவரை சோழமண்டலத்தில் யாரும் சிறு பகுதியையையும் கைப்பற்றவில்லை!

1675 ஆம் ஆண்டில் துவங்கிய தஞ்சை மராட்டியர் ஆட்சி 1855 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தது!

தஞ்சை மராட்டியர்கள் / marAttiyars of Tanjore


    * 1675 - 1684 வெங்கோஜி / vegkOji
    * 1694 -1712 ஷாஜி /shAji
    * 1712 - 1728 சரபோஜி /carapOji
    * 1728 - 1736 துக்கோஜி / tukkOji
    * 1737 பாபா சாகேப் / pApa cAkEp, காட்டு ராஜா (ஷாஜி) / kATTu rAjA cAji
    * 1738 சையாஜி / caiyAji
    * 1739 - 1763 பிரதாப் சிங் / pratAp cig
    * 1763 - 1787 துளஜாஜி / tuLajaji
    * 1787 - 1798 அமர்சிங் / amarcig
    * 1798 - 1833 இரண்டாம் சரபோஜி / carpOji II
    * 1833 - 1855 சிவாஜி /civAji

ஆங்கிலயர் ஆட்சி காலத்திலும் தஞ்சை மராட்டியர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி  இருந்துள்ளனர். அதன் ரகசியம் இதோ:

"தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் (மல்லிப்பட்டினம்)*ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார் .

உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை நிறுவ ஆங்கிலேயர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , ஏனைய மேலை நாட்டினரும் போரிட்டு கொண்டிருந்த நாளில் ஆங்கிலேயர் ஆட்சி கீழ் தம் அரசை நடத்த வேண்டிய சூழலில் சரபோஜி மன்னர் இருந்தார் . இந்நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் 1813-ம் ஆண்டு லிப்சிக் என்ற இடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்தார் .

பின்னர் 2 வது முறையாக 1815-ம் ஆண்டு வாட்டர்லூ போரிலும் தோல்வியடைந்தார் . நெப்போலியனின் லிப்சிக் போர் தோல்வி , ஆங்கிலேயர்களின் நண்பராகத் திகழ்ந்த தஞ்சை சரபோஜி மன்னர் இந்த மனோரா கோட்டையை ஒரு ஆண்டிற்குள் கட்டி முடித்தார் .ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக்கினார் . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன .


தமிழ் கல்வெட்டு : இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அடைந்த செய சந்தோஷங்களையும் , போன பாற்தேயின் தாழ்த்தப்படுதலையும் நினைவு கூறத்தக்கதாக இங்கிலீசு துறைத்தனத்தின் சினேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராஜா சத்திரபதி சரபோஜி மகாராஜா இந்த உப்பரிகையை 1814 கட்டி வைத்தனர் என்று கூறப்படுகிறது."

என்ற வரலாற்று சான்று நம்முடைய அதிராம்பட்டினம் பாண்டியர் கையில் மட்டுமல்ல வேறு யார் அதிகாரத்திலும் செல்லவில்லை என்பதைதான் காட்டுகின்றது.

(*மல்லிப்பட்டினத்தின் ஆரம்பகால பெயர் 'துலுக்கன்வயல்' இதனை அவர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டியது காலத்தின் தேவை!)

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து

Read more...

Monday, 11 October 2010

அதிராம்பட்டினம் வந்த அதிவீரராம் பாண்டியன்! அதிரை ஹிதாயத்

அதிவீரராம் பாண்டியன் அதிராம்பட்டினத்தை ஆட்சி செய்யவுமில்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை என்பதை வரலாறுகள் நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில் அதிவீரராம் பாண்டியன் அதிராம்பட்டினம் வந்ததாக சொல்லப்படும்  நிகழ்ச்சியை பற்றி சில வரிகளில் ஒரு விமர்சனப் பார்வை!

"அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்

சிவனதுநட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் திருக்கோயிலாகும். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். ஏனென்றால் பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நாளிலும், சிவபெருமான் அபயம் தருபவராக உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண் டலமும் ஒன்று. எனவே இந்த மண்டலத்தில் நுழைந்திடவே அசுரர்கள் பயப்படுவர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்தபலன் தரும் என்றும் கூறப்படுகிறது.  பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகிய இரு மகரிஷிகளும் தினமும் இத்தலத்தில் அருவமாக அபய வரதீஸ்வரரை வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ரைவத சக்தி என்பது சிவனது முக்கண்ணில் உறைகின்ற ஒருவித ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தவர்.இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்
ஆதிரை தானதில் அபயமென் றருளுவன்
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில்
ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா!

என்ற திருவாதிரை கோயில் பற்றிய பரிபாஷைப்பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.

எம பயம் போக்கும் தலம்: தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்தஞ்சய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்த படியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

திருவாதிரை நட்சத்திர தலம்: திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவனும், அரசனுமான அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளான். ஆரம்பகாலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக திகழ்கிறது. இத்தல அம்மன் சுந்தர நாயகிதெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது."(1)
என்று சொல்கிறார்கள்.

வந்திருக்கட்டும். அது அவர் நம்பிக்கை; இதில் நம் கருத்து ஒன்றுமில்லை!

இந்த நிகழ்வின் அல்லது தகவலின் படி சில கேள்விகள்:

"அதிவீரராம பாண்டியன்) புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவன்" என்பது வரலாறு. ஆனால், நாம் மேலே பார்த்த தகவல் படி "திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவனும்..." என்று சொல்கிறார்கள். ஒருவன் எப்படி இரு நட்சத்திரத்தில் பறப்பான்? அவர்களின் நம்பிக்கை படிதான் கேட்கிறோம்!
அப்படியே, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவனாகவே வைத்துக்கொள்வோம்.

"தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்." என்றும் சொல்கிறார்கள்.
அப்படியென்றால் இந்த மூன்று காரணங்களுக்காகவோ அல்லது ஒரு காரணங்களுக்காவோ அதிவீரராம பாண்டியன் வந்து பூசை செய்தான் என்று வைத்துக்கொள்வோம்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள்,
எம(மரண) பயம் உள்ளவர்கள்,
(நீண்ட நாள் வாழவேண்டும் என்று)ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள்.
இந்த மூன்றும் அல்லது ஒன்றோ உள்ளவர்கள் போரில் ஈடுபடுவார்களா? பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்தை அதுவும் வலிமையான அரசை எதிர்த்து படைதிரட்டியிருப்பார்களா? உங்கள் பதிலுக்கே விட்டுவிடுகிறேன்.

மேலுள்ள தகவல் உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அதிவீரராம பாண்டியன் அதிராம்பட்டினத்திற்கு ஒரு பக்தனாகத்தான் வந்திருக்கிறான் அவ்வளவே!


"ஆரம்பகாலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக திகழ்கிறது..." என்ற தக‌வலையும் சொல்கிறார்கள்.
கற்பனை சொவதற்கு ஒரு அளவுகோல் இல்லையா என்று கேட்கவிரும்புகிறோம்.

உசாதுணை தகவல்கள்:
(1)
http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6658

தினமலர்.கோயில்கள்

இந்துசம‌யம்

Read more...

Thursday, 7 October 2010

அதிவீரராமபாண்டியன் அதிராம்பட்டினத்தை ஆட்சிசெய்திருப்பாரா? அதிரை ஹிதாயத்

அதிவீரராமபாண்டியன் அதிராம்பட்டினத்தை ஆட்சிசெய்திருப்பாரா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் முதலில் அதிவீரராமபாண்டியன் காலத்தில் பாண்டியர்களின் நிலையென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்:

பாண்டியர்களின் நிலை?

தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் என்று மூன்று குலத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக அரசாண்டுள்ளனர். அவர்களில் பாண்டியர்கள் மிகவும் தொன்மையானவர்; நீண்ட காலம் பதவி வகித்தவராவர் அவர்களின் வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஆராய்வர்.

அவை:

1) சங்க காலப் பாண்டியர் (கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகள்)

2) கடுங்கோன் வழி வந்த பாண்டியர் அல்லது முதல் பாண்டிய பேரரசு (சுமார் கி.பி. 550 முதல் 950)

3) இரண்டாம் பாண்டிய பேரரசு (கி.பி.1190 முதல் 1310)

4) பிற்காலப் பாண்டியர் (கி.பி.1310க்குப் பிறகு) (1)

அதிவீரராம பாண்டியன் (கி.பி.1564 -1606) காலகட்டத்தை சேர்ந்தவராவார். என‌வே, பிற்கால பாண்டியர் கி.பி.1310க்குப் பிறகுள்ள வரலாற்றைக் காண்போம்:

கி.பி 1317 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது மதுரையை விசய நகரத் தலைவன் வீரகம்பணன் கைப்பற்றிய‌ பிறகு பாண்டிய நாட்டை அவர்களின் பிரிதிநிதியைக் கொண்டு ஆட்சி செலுத்தினர்.

மதுரை நாயக்கர் வம்சத்தினர் விசய நகரத்தின் பிரதிநிதியாய் இருந்தனர்.

பாண்டிய மரபினர் மீண்டும் மதுரையை கைப்பற்ற முடியவில்லை. பதிநான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அவர்களது கால்வெட்டுகள் பாண்டிய நாட்டின் வட பகுதிகளில் காணப்படவில்லை.

திருநெல்வேலி, தென்காசிப் பகுதிகளில் மட்டுமே இவர்களது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.ஆகவே அக்காலம் முதற்கொண்டு இவர்கள் தங்களது தலை நகரான மதுரையை இழந்து தென்பாண்டி நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஒரு குறுகிய நலப்பரப்பை மட்டும் ஆண்டு வந்தனர். விசய நகரப் பேரரசர்களும் பழம் பெரும் பாண்டிய மரபினரை அகற்றிடாமல் அவர்களைத் தொடர்ந்து சிறிய பகுதியில் இயங்க அனுமதித்தனர்.(2)
பதினான்காம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டு இறுதிவரை இவர்கள்(பாண்டியர்) தென்பாண்டிய நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்தனர்.

அவர்கள்:
1) சடை வர்மன் பராக்கிரம பாண்டியன்(கி.பி.1422 1461)

2) அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது ஸ்ரீ வல்லபன் (கி.பி.1429,30 1473)

3) ஸ்ரீ வல்லபன் (கி.பி.1534 43)

4) முதலாம் அதிவீரராம பாண்டியன் (கி.பி. 1564 1606)

5) வரதுங்க ராமன் (கி.பி. 1588 1609)

6) வரமுகுண ராமன் குலசேகரன் (கி.பி. 1615...) (3)

இவைத்தான் பிற்கால பாண்டியர்களின் அரச நிலை; இவர்கள்தான் எந்த தனியதிகாரமும் இல்லாத குறுநில அதுவும் வேற்று மன்னர்களின் கீழ் கொளரவ பதவியாக இருந்தவர்கள். இல்லை; இருக்க வைக்கப்பட்டவர்கள்!

இவர்கள் எப்படி இன்னொரு நிலத்தை கைப்பற்றி அரசாண்டிருக்க முடியும்?
அதுவும் யார் தங்ககளை 'சிறு ஊர் தலைவராக'(மன்னர்கள் என இவர்களை சொல்ல முடியுமா? தெரியவில்லை!) இருக்க அனுமதித்தார்களோ அவர்களுக்கு எதிராகவே படை திரட்டும் அளவு பாண்டியர்கள் ஒன்றும் அரசியல் தெரியாதவர்கள் அல்ல.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பல நூறு மைல்கள் தாண்டி,தங்கள் எஜமானார்களுக்கு எதிராக‌ படையெடுத்து வந்து போரிடும் அளவு அப்படியென்ன அவசியம்,கட்டாயம் அல்லது முக்கியத்துவம்?

அதிராம்பட்டினத்தில் தங்க மலையோ, முத்து,பவழ குவியலோ கிடையாது.
அதிராம்பட்டினத்தில் கிடைக்கும் தேங்காய்,உப்பு,கடலுணவு இவைகளுக்காக படை திரட்டியிருப்பான் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.

தமிழார்வம் உள்ளவன் என்பதை வைத்துப்பார்த்தாலும் அதுவும் பொருத்தமில்லை. எந்த வரலாற்றாய்வாளரும் சொல்லவும் இல்லை; ஏற்றுக்கொள்ளவுமில்லை!

இப்படி பாண்டியர் வரலாற்று நிலையிலும் அதிவீரராம் பாண்டியன் நிலையிலும் அதிராம்பட்டினதினத்தை அரசாண்டான் என்பது எந்த வடிகட்டிய பொய்யான கர்பனை என்பதை தவிர வேறில்லை!


உசாதுணை நூல்கள்:

(1) பாண்டியர் வரலாறு பக்கம் 1

(2) பாண்டியர் வரலாறு பக்கம் 137

(3) பாண்டியர் வரலாறு பக்கம் 138

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து





அதிராம்பட்டினத்திற்கும் அதிவீரராம பாண்டியனுக்கும் சம்மந்தமில்லை என்று வரலாற்றின் அடிப்படையில் உண்மையான முடிவுக்கு நாம் வந்துவிடோமே, அப்படியானால் அதிராம்பட்டினம் என்று எப்படி பெயர் வந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அதற்கான உண்மையான‌ வரலாற்றாதாரம் நம‌து முன்னோர்களால் காலம் காலமாக வாழையடி வாழையாக கர்ண பரம்பரைக் கதையாக சொல்லப்பட்டுவந்தவகைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
                அதுவரை உங்கள் கருதுக்களை சொல்லுங்கள்

Read more...

Tuesday, 5 October 2010

அதிராம்பட்டினமும் அதிவீரராமபாண்டியனும்!அதிரை ஹிதாயத்

நில அறிமுகம்:

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தின் கடோலரப்பகுதியில், மேலத் தஞ்சை முடியும் இடமும் கிழத் தஞ்சை தொடரும் இடமுமான மாவட்ட எல்லைப் பிரிவுப் பகுதியில் மேலத் தஞ்சையில் அமையப்பெற்ற ஊர்தான் அதிராம்பட்டினம்.

கர்ண பரம்பரைக் கதை:


கர்ண பரம்பரைக் கதைகள் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுவதுண்டு. அது, மூதாதையர்கள் வழிவழியாக தமது அடுத்தடுத்த சந்ததியினருக்கு சொல்லி செவி வழியாகவே பரவுபவைத்தான் கர்ண பரம்பரைக் கதைகள்.(கர்ணம் என்றால் காது எனப்பொருள்)

கர்ண பரம்பரைக் கதையில் அதிராம்பட்டினமும் அதிவீரராமபாண்டியனும்:

2000 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியை அரசாண்ட அதிவீரராம பாண்டியன் என்ற அரசன் பெயரைத் தாங்கி அதிவீரராமபட்டினம் என வழங்கப்பட்டதாவும் அப்பெயர் நாளடைவில் சுருங்கி அதிராம்பட்டினம் என வழங்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.(1)
(இங்கு கர்ண பரம்பரைக் கதையைதான் வரலாறு கூறுவதாக சொல்கிறார்கள்)

ஆனால், அதிவீரராம பாண்டியன் வரலாறு வேறுவிதமாக உள்ளது!

அதிவீரராம பாண்டியன் பற்றி உண்மை வரலாறு!

"*முதலாம் அதிவீரராம பாண்டியனின் காலம் கி.பி. 1564‍ 1606.
   

*இவன் புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவன்.
   
*அழகன் அதிவீரராம ஸ்ரீவல்லபன் என்பது இவனது முழுப்பெயராகும்.
 
*இவன் புதுக்கோட்டைச் செப்பேடுகளிலும், தென்காசி செப்பேடுகளிலும்    குறிக்கப்படுகிறான்.
 
*இவன் காலத்தில் விசய நகர அரசன் முதலாம் வேங்கடனின் ஆட்சிக்குப்பட்டு  இயங்கினான்.
 
*கோயில் திருப்பணிகளிலும் இலக்கியப் பணிகளிலும் சிறந்து விளங்கினான்.
 
*தென்காசியில் தந்தை குலசேகரரின் பெயரில் குலசேகர‌முடையார் என்ற    கோயிலைக் கட்டினான்.
 
*விசுவநாதர் கோயிலுக்குள் சொக்க நாதர் பெருமானுக்கும் சீவில விண்ணகர் 

*என்பெருமானுக்கும் தனிச்சன்னதிகள் கட்டினான்.
 
*ஸ்ரீ வில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோயில் ஒன்று இவன் காலத்தில் கட்டப்பட்டது.

அதிவீரராம பாண்டியன் செந்தமிழ்ப் புலமையிற்சிறந்து விளங்கியவர் என்பது இவர் இயற்றிய நூல்களால் நன்கு விளங்கும்.

வட மொழியில் ஹர்ஷன் இயற்றியுள்ள நைஷதம் என்ற நூலை இவர் தமிழில் மொழிப்பெயர்த்து பாடியுள்ளார். இது நைடதம் என்று வழங்கப்படுகிறது.உயர்ந்த நடையும் கற்பனைத்திறனும் கொண்டு விளங்கும் இந்நூல் புலவர்களால் உயர்வாக மதிக்கப்படுகிறது.

இவர் இயற்றிய பிற நூல்கள் கூர்ம புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, லிங்க புராணம், என்பவை இவரது தமிழ்ப் புலமைக்கும் வட மொழிப் புலமைக்கும் சான்று பகர்கின்றன. குழந்தைகளுக்காக அவர் எழுதிய நீதி நூலான வெற்றிவேற்கை என்பது மிகவும் எளிய நடையில் அமைந்த ஒரு சிறு நூல்." (2) 

உசாதுணை குறிப்புகள்:

(1)அதிரை கலைக் களஞ்சியம்
(2) பாண்டியர் வரலாறு பக்கம்39

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து

தொடரும்...

Read more...

Sunday, 3 October 2010

காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்

காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்

நாம் முந்திய கட்டுரை தொடரில் "கலீபா அல்வாதிக் பெரும் கொடுமை இழைத்த பொழுது கெய்ரோ அருகில் முகத்தம் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுமாக 224 பேர் பக்ரீ குடும்பத்தை சேர்ந்த முஹம்மது கல்ஜி என்பாரின் தலைமையில் மரக்கலமேறி கி.பி.875ல் (கி.பி. 842ஆம் ஆண்டு என்ற கருத்தும் உள்ளது) இந்தியாவின் கீழ்க்கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் வந்திறங்கினர். அந்த இடத்தை பழைய காயல் என்று வழங்கப்படுகிறது." என்று முடித்திருந்தோம்.

அந்த காயல் நகர் எதுயென்பதை இப்போது பார்போம்....

காயல் நகரிலிருந்துதான் அதிராம்பட்டினத்திற்கு முஸ்லிம்கள் குடியேறியதாக வரலாற்று வழிச்செய்திகள் கூறுகின்றன.

காயல் என்னும் ஊரிலிருந்துதான் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

ஆனால், அது எந்த காயல் நகர் என்பது நாம் பல வரலாற்று நூல்களை படிக்கின்றபோது ஏற்படுகின்ற சந்தேகமாகும்.

இதுவே ஆய்வு செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது!

"திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுக்காவில் அட்ச ரேகை வடபால் 8.34 தென்பால் 78.8 ல் அமைந்துள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் பழைய காயலின்றும் வேறுபட்டதாகும்.

இதனை இம்பீரியல் கெஜட்டீர் ஆப் இந்தியா(தொகுதி 15 பக்கம் 195) காட்டுகின்றது.

தாமிரபரணிக்குத் தெற்கு, தூத்துக்குடியிலிருந்து 18 மைல் தெற்காம அமைந்துள்ள இவ்வூரினை காயல் என்னும் ஊராக கருதி மயங்குதல் கூடாது என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது."(1)

திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டினம் உண்மையான காயல் நகர் இல்லை என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

தமிழ்நாடின் தென்பகுதி ராமநாதபுரம் நகரிலிருந்து பத்து மைல் தொலைவில் 9‍-14-80-50-10 என்னும் அட்ச ரேகையில் அமைந்துள்ள(2) கீழக்கரைதான் உண்மையான பூர்வீக காயல் நகர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

கீழக்கரைதான் காயல் என்றும் தென்காயல் என்றும் இருந்ததாக மதுரைத்தமிழ் சங்க புலவராக இருந்த செய்யது முகமது ஆலீம் புலவர் தமது மஜ்முஉல் முனாஜாத்(பக்கம்19) என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இதுப்பற்றியே கீழக்கரையில் சீதக்காதி வள்ளல் கொலுவீற்றிருக்கின்ற காட்சியை நேரிற்கண்ட நொண்டி நாடக ஆசிரியர் அவரை காயற்றுரை செய்தக்காதி, காயல் நகரன், காயல் மன்னவன் செய்தக்காதி என்றெல்லாம் போற்றுகின்றார்.

தனிப்பாடல்களிலும் காயலாதிபனே, தென்காயற்பதியானே, காயல் துரை என்னும் தொடர்களையும் பார்கின்றோம்.(3)

சீதக்காதி என்ற செய்யது அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் இன்றைய கீழக்கரையைச் சேர்ந்தவர்தான் என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, இன்றைய கீழக்கரைதான் பண்டைய காயல் நகர் என்பது திண்ணம்!

"பழைய காயல் துறையிலிருந்து கடல் விலகி சென்றதன் காரணமாக அத்துறை தன் சிறப்பினை இழந்த போது அங்கிருந்த மக்கள் வேறு ஊர்களுக்கு சென்று குடியேற தொடங்கினார்கள். பரங்கிப்பேட்டை,முத்துப்பேட்டை போன்ற இடங்களுக்கும் சென்றதுடன் தங்கள் பழம் பகுதியின் பெயரைக் கொண்ட புதிய ஊர்களாகிய பின்னைக்காயல், காயல்பட்டினம் ஆகிய ஊர்களையும் அமைத்தனர்.(4)

என்கிற வரலாற்று சான்றுகளிலிருந்து நமக்குள்ள பல சந்தேககங்களை நிவர்த்தியாக்கின்றன. பண்டைய காயலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களே பல்வேறு கடற்கரை பட்டினங்களிலும் குடியேறினர் அவர்களில் சிலரே தங்களின் பழைய இருப்பிடத்தின் நினைவாக ஊர்கலையும் அமைத்து அதன் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தனர். அந்த வகையில் உருவானதுதான் இன்றைய காயல்பட்டினமாகும்.

அதுப்போலவே காயலில் (கீழக்கரை) இருந்து வெளியேறிய மக்கள் அமைத்த ஊர்களில் ஒன்றுதான் அதிராம்பட்டினமாகும். அம்மக்கள்தான் அதிராம்பட்டினத்தின் முதல் குடிமக்களாவார்கள்.

உசாதுணை குறிப்புகள்:
(1) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 63
(2) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 26
(3) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 31,32
(4) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 64

இன்னும் பல வரலாற்று குறிப்புகள்

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து


Enhanced by Zemanta

Read more...

Friday, 1 October 2010

நைல் நதியிலிருந்து தமிழக கடற்கரையோரம்! அதிரை ஹிதாயத்


'குமரிக்கண்டத்திலிருந்து நைல் நதி வரை'என்னும் தலைப்பில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியே இக்கட்டுரை.

முஃதஸிலா கொள்கையும் எகிப்திலிருந்து தமிழகம் திரும்பிய முஸ்லிம்களும்!

ஹஸன் பஸரி(ரஹ்) அவர்களின் உற்ற நண்பராக இருந்த வாஸில் இப்னு அதா கருத்து வேற்றுமையின் காரணமாக ஹஸன் பஸரி(ரஹ்)அவர்களிடமிருந்து, பிரிந்து தம்முடன் அம்ர் இப்னு உபைதாவையும் இன்னும் பலரையும் சேர்த்துக்கொண்டார்.

இவரையும் இவர் கொள்கை, கோட்பாடுகளையும் ஏற்று செயல்பட்டவர்களை முஃதஸில்லாக்கள் என்னும் பெயரைக்கொண்டு இஸ்லாமிய உலகம் அழைத்தது. முஃதஸில்லா என்னும் அரபு சொல்லுக்கு பிரிவினைவாதிகள் என்று பொருள் கொள்ளலாம்.

* இறைவனுக்கும் மனிதனுக்கும் எவ்வித ஒற்றுமையும் கற்பிக்ககூடாது. இறைவனுக்கு தாத் உண்டேயன்றி அவனுக்கு ஸிஃபத்துகளை கற்பிக்ககூடாது. அது, ஷிர்க் ‍‍  இணைவைப்பாகும்.

* இறைவனுடைய சொற்கள், படைக்கப்பட்டவை அனைத்தும் அழிந்துவிடுவது போன்று அவையும்(சொற்கள்) அழிந்துவிடும்.

* ஒரு விசுவாசி மிகப்பெரும் பாவம் செய்து அதற்குப் பாவமன்னிப்பு கோராது இற‌ந்துவிடில் அவன் நிரந்தரமாகத் தண்டனையை நுகர வேண்டியதுதான். எனினும் இறை மறுப்பவனுக்கு அளிக்கப்படும் தண்டனையை விட இவனுக்கு அளிக்கப்படும் தண்டனை இலேசாக இருக்கும்.

*
இறைவனை மறுமையில் மனிதன் தன் கண்ணால் பார்க்க இயலாது. அப்பொழுது இறைவன் ஒருவித உணர்வை உண்டு பண்ணுவான் அதன் மூலமாக அவனைப் பார்க்க இயலும்.

* திருக்குர் ஆன் இறக்கப்படவில்லை; படைக்கப்பட்டது.

என்பனப்போன்ற பல கொள்கைகளை கொண்டிருந்தனர். இவர்களில் 24 உட்பிரிவுகள் இருந்ததாக ஷர்ஹுல் மவாகிஃப் என்னும் நூல் வழி அறிய முடிகிறது.

எகிப்து நாட்டை ஆட்சி செய்த‌-அப்பாஸியக் கலீபாக்களான அல்மாமூன்,அல்முஃதஸிம்,அல்வாதிக் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இந்த பிரிவினைவாதிகளான முஃதஸிலாக்கள் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தனர்.

இதன் காரணமாக முஃதஸிலா கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கினர். எதிர் பிரச்சாரம் செய்தோர் நாடுகடத்தப்பட்டார்கள். பெருங்கொடுமைக்கு ஆளானவர்களில் ஒருவர்தான் இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) அவர்கள்.

கலீபா அல்வாதிக் பெரும் கொடுமை இழைத்த பொழுது கெய்ரோ அருகில் முகத்தம் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுமாக 224 பேர் பக்ரீ குடும்பத்தை சேர்ந்த முஹம்மது கல்ஜி என்பாரின் தலைமையில் மரக்கலமேறி கி.பி.875ல் (கி.பி. 842ஆம் ஆண்டு என்ற கருத்தும் உள்ளது) இந்தியாவின் கீழ்க்கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் வந்திறங்கினர். அந்த இடத்தை பழைய காயல் என்று வழங்கப்படுகிறது.

எகிப்திலிருந்து தமிழக கடற்கரையோரம் வந்த இந்த முஸ்லிம்கள் தமிழகத்திற்கு அந்நியர்களல்ல. என்பதை அறிய மீண்டுமொருமுறை முந்திய கட்டுரையை வாசிக்கவும்.




உசாதுணை குறிப்பு:
மர்ஹூம் எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம் அவர்கள் எழுதிய இஸ்லாமியக் கலை களஞ்சியம், இன்னும் பல வரலாற்று குறிப்புகள். 

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து


தொடரும்... 

Read more...
ங்கு பதியப்படும் வரலாற்று தகவல்களில் மாற்று கருத்து இருப்பின் பின்னூட்டமாக எழுதவும். "அதிரைவரலாறு" நூல்வடிவம் பெறும்போது அவற்றையும் சேர்த்துக்கொள்ளப்படும்.

எவ்வழியே

முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.எனவே,இந்த (அதிரைவரலாறு) தளத்திலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது. தகவலுக்காக சுட்டி வழங்கலாம்.

  © Blogger template AutumnFall by Ourblogtemplates.com 2008

Back to TOP