Related Posts with Thumbnails

அதிரைவரலாறு தளத்திற்கு கட்டுரைகள் அனுப்ப:

adiraihistory@gmail.com

Wednesday, 29 September 2010

குமரிக்கண்டத்திலிருந்து நைல் நதி வரை! அதிரை ஹிதாயத்

அன்பு மிக்க 'அதிரை வரலாறு' வாசகர்களே, இந்த கட்டுரை அதிரை வரலாற்றுடன் தொடர்புடையது. இனி வரும் தொடர் கட்டுரைகளையும் வாசிக்கும் போது அதிரை வரலாற்றுடன் எந்த வகையில் தொடர்புடைவை என்பதை அறிவீர்கள். இன்ஷாஅல்லாஹ்.







கடல் கொண்ட குமரி(லெமுரியா)க் கண்டத்திலிருந்து பல பகுதிகளுக்கும் தமிழர்கள் இடப்பெயர்வு மேற்கொண்டு அங்கேயே அவர்கள் வாழ்விடங்களை அமத்தனர்.

அவர்கள் தான் பிந்தைய நாட்களில் தனி இனமாக உருவெடுத்தனர் அவர்களில் ஒரு பிரிவினர்தான் எகிப்தியர்.

இதையெல்லாம் ஆயிரமாயிரம் வரலாற்றாய்வுகள் நிரூபிக்கின்றன.

"குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்களே) மக்களே எகிப்தியர் என்று புராதன கிழக்கு வரலாறு (The Ancient History Of The Near East) பக்கம் 92ல் தனது நூலில் ஆர்.ஹெச் ஹால் என்பவர் கூறுகிறார்.

அவரே, திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்.
இதே கருத்தினை Outline Of The History By H.G.WELLS  , Man's Place In Nature And Other Eassayas p- 233- Thomas Huxl  மற்றும் ரிக்வேத இந்தியா என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனிஸ் ஆகியோரும் குறிப்பிடுகிறார்கள்"(1)

நமது தமிழகத்திலிருந்து எகிப்து சென்ற மக்கள் (தமிழர்கள்) அரசாண்டுமுள்ளனர்.

"கி.மு. 4500 இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுப்பற்றிய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல் 300 அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதிவைத்தார்.

இ.மு. 4000இல் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான்...."(2)


எகிப்து நாட்டிற்கு, இடம் பெயர்ந்த நம்மவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தங்கள் இனத்தையும் தாய் நாட்டின் உறவையும் மறந்ததில்லை!

இங்குள்ள தமிழரும் எகிப்திய(தமிழரும்) மக்களும் ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல்களில், வணிகத்தில் தாராளமாகவே ஈடுபட்டனர்; திருமண உறவையும் மேற்கொண்டிருந்தனர்.

"தமிழகத்திலிருந்து எகிப்திற்கு வாசனை கோந்துகள், புதிய வாசனை மரங்கள், யானைத்தந்தத்தில் பொன்னெழுத்துக்களால் செய்த பொருட்கள், கேசித்து என்ற மரம், அகிற்கட்டை,தூய சாம்ராணி,கண்மை, ஒலி பனம், நாய்தலையுள்ள குரங்குகள்,நீண்ட வால் குரங்கு,வேடை நாய்கள், புலித்தோல் உள்ளிட்ட பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

சந்தனக்கட்டை, தந்தம், குரங்கு, மயில் போன்றவற்றைக் குறிக்க எகிப்திலும் தமிழ் மொழியிலேயே அழைத்தனர் என்று ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் குறிப்பிடுகிறார்.(3)

இங்கு நடக்கும் அரசியல் பூசல்களால் அவதியுற்ற தமிழர்கள் சில வேலைகளில் குழு குழுவாக கப்பல்களில் எகிப்து சென்று தஞ்சமடைந்தனர்.

அதே போல் எகிப்தில் ஏற்படும் அரசியல் நெருக்கடியால் துன்புறும் மக்களும் தாய்த் தமிழ் தேசம் வந்து வசிக்கத் தொடங்கினர்.

இந்த இடப்பெயர்வுகள் இப்போதிலிருந்து கடந்த ஆயிரம் ஆண்டுகளில்தான் அதிகம் நடந்துள்ளது, என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இஸ்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திலேயே எகிப்திற்கு காலடி எடுத்துவைத்துவிட்டது. இதன் மூலம் இஸ்லாம் அவர்களுக்கு நன்கு அறிமுகமான மார்கமாக இருந்தது!

"இரண்டாம் கலீபா ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தளபதிகளில் ஒருவரான அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் தலைமையில் எகிப்தை கைப்பற்ற உத்தரவிட்டார்கள்.

கலீபா ஹழ்ரத்  உமர்(ரலி) அவர்களின் உத்தரவின்படி தளபதி அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கி.பி. 624‍‍ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று எகிப்தை கைப்பற்றினார்கள்.அத்துடன் தளபதி அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களே கவர்னராக இருந்து இஸ்லாமிய ஆட்சியை நடாத்தினார்கள்.(4)


உசாதுணை குறிப்புகள்:
(1) செங்கடல் தாண்டிய சிந்து வணிகம் பக்கம் 100
(2) செங்கடல் தாண்டிய சிந்து வணிகம் பக்கம் 27
(3) செங்கடல் தாண்டிய சிந்து வணிகம் பக்கம் 101
(4) இஸ்லாமிய சிந்தனை முந்திங்கள் வெளியீடு பக்கம் 19

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து

தொடரும்... 

Read more...

Tuesday, 28 September 2010

அதிரையர்கள் இலங்கையில் கட்டிய பள்ளிவாசல்!

இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள சம்மாங்கோடு பள்ளி என்றறியப்படும் சிவப்பு பள்ளியைக் (RATHU PALLIYA / RED MASJID)கட்டியவர்கள் நமதூர் கோனா ஆலிம் வகையறாக்கள்.

இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்க கட்டிடங்களில் இப்பள்ளியும் ஒன்று. இதன் முகப்புத்தோற்றம் இலங்கை தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பண்டைய காலத்தில் அதிரையிலிருந்து வர்த்தகர்கள் இலங்கைக்குப் படகில் சென்று வந்துள்ளனர் என்பதும், அப்போது கடலிலிருந்து வெகுதூரத்தில் மேற்கண்ட சம்மாங்கோடு பள்ளி கம்பீரமாகத் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

இதன் டிரஸ்டிகளில் ஒருவராக நமதூர் மர்ஹூம்.முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மூத்தமகனார் மரியாதைக்குறிய மு.அ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் அவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: அபுஅஸீலா

Read more...

Saturday, 25 September 2010

சமுதாய நல மன்றம்

சமுதாய  நல மன்றம்

              (முன்பொரு முறை, 'அதிரை வரலாறு' பகுதியில்,  இந்த மன்றத்தைப் பற்றிய  கட்டுரை தனியாக இடம்பெறும்  என்று அறிவித்திருந்தோம்.  அதனடிப்படையில் அமைவதுவே  இக்கட்டுரை.)
        

      1955 இல் சமுதாயச் சிந்தனை  மிக்கவர்கள் அதிரை ஷாதுலிய்யாத்  தெரு புதுப்பள்ளியில்  கூடி ஆலோசனை செய்ததைத் தொடர்ந்து, 1957 ஆம் ஆண்டில் முறையாக உருவான முன்னோடிச் சமூக அமைப்பே 'சமுதாய நல மன்றம்' ஆகும்.

      இத்தருணத்தில், இதற்கு முன் இதனைப்போல் அதிரையில்  தோற்றுவிக்கப்பட்ட சங்கங்கள்  பற்றிய அறிமுகமும் அவசியமானது. அவை, 'முஸ்லிம் யூனியன்', 'ஹிதாயத்துல் இஸ்லாம் சபை', 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்'(1920), மஆதினுல் ஹஸனத்தில் இஸ்லாமிய்யா சங்கம்', 'தாஜுல் இஸ்லாம் சங்கம்' 'நகர நலச் சங்கம்(TWA)', 'காயிதெ மில்லத் மன்றம்'(1973), 'அதிரை நகர முஸ்லிம் சீர்திருத்த இயக்கம்'(1980), 'அதிரை நல மன்றம்'(1980), 'அதிரை ஊரக வளர்ச்சி மன்றம்(ARDA)' 'அதிரை முன்னேற்றச் சங்கம்' ஆகியவையாகும்.  இவற்றுள் இன்றுவரை செயல்பாட்டில் நிலைத்திருப்பது, 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

      'சமுதாய  நல மன்றம்' ஆற்றிய புரட்சிகரமான  சேவைகளை என்றுமே மறக்க  முடியாது.  இம்மன்றம் இப்போது இல்லாவிட்டாலும், இதன் செயல் திட்டங்களுள் சிலவற்றை 'அதிரை பைத்துல் மால்' அமைப்பு செய்து வருவது நமக்கு ஆறுதலைத் தருகின்றது.  குறிப்பாகச் சொல்லப்போனால், சமுதாய நல மன்றத்தின் கடந்த கால உறுப்பினர்கள் சிலரின் பங்களிப்பும் பின்னணியுமே, பிற்காலத்தில் 'அதிரை பைத்துல் மால்' தோன்றுவதற்குக் காரணமாயிருந்தது என்று உறுதியாகக் கூறலாம்.

      எவ்விதப்  பக்கச் சார்புமின்றி, ஊரின்  எல்லாத் தெருவாசிகளையும்  உறுப்பினர்களாக்கி, கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, ஒற்றுமையாகச் செயல்பட்டது, இம்மன்றத்தின் சிறப்பம்சமாகும்.  இதற்காக, இதன் உறுப்பினர்கள் கீழ்க்கண்டவாறு உறுதிப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்பது, இம்மன்றத்தின் குறிக்கோலாக இருந்தது:  "சமுதாய நலனையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கும் இம்மன்றத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடுதலும், பொறுமை, ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றைக் காத்து, அநீதியை எதிர்த்தலும், மார்க்க சம்மந்தமாகவும் கல்வி மற்றும் பொதுநலனுக்காகவும் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெறுதலும் எம் கடமைகளாகும்."

சங்கத்தின்  கல்வி வளர்ச்சிப் பணிகள்:



    * பள்ளி மாணவர்களிடையே (திருமறை ஓதும்) 'கிராஅத்' போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கியது.
    * பள்ளி மாணவர்களிடையே மார்க்க போதனைகள் நடத்தி, அவற்றில் தேர்வு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கியது.
    * வசதி குறைந்த மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், நோட்புக்குகள், எழுதுபொருள்கள் வழங்கியது.
    * திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கு ஊக்கப் படுத்துவதற்காகச் சென்னையிலுள்ள 'மத்ரஸா இஸ்லாமிய்யா'வுடன் தொடர்பு கொண்டு, மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கியது.
    * மார்க்கக் கல்வியின் அவசியம் குறித்துத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டது.
    * மன்றத்தின் சார்பில் இயங்கிய நூலகத்தில் அரிய பல நூல்களைத் திரட்டி, அறிவுப் பணியில் பங்களிப்புச் செய்தது.



ஊருக்கு உதவி:

    * அதிரையில் 'ரெவின்யூ இன்ஸ்பெக்டர்' அலுவலகம் அமைக்கக் கோரி, தஞ்சாவூரிலுள்ள மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் அனுப்பியது (1962).
    * காலரா பரவாமல் தடுக்குமாறு, பட்டுக்கோட்டையிலுள்ள சுகாதார அதிகாரியை வலியுறுத்தியது (1963).
    * மாவட்ட மருத்துவ அதிகாரியிடம், அதிரைக்குப் பெண் மருத்துவர் தேவை என்ற கோரிக்கையை வைத்தது (1964).
    * இஸ்லாமியப் பத்திரிகைகளைக் கிளை நூலகத்தில் வரவழைக்க, தஞ்சாவூர் 'லோக்கல் லைப்ரரி அத்தாரிட்டி'யிடம் கோரியது (1965).
    * 'மாலை முரசு' பத்திரிகையின் பெருநாள் மலரில் வெளியான கட்டுரையில் இடம்பெற்ற தவற்றைச் சுட்டிக்காட்டி, அப்பத்திரிகையின் திருச்சி அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியது (1966).



துண்டுப்  பிரசுரங்கள்:

      அதிரைச் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, அறிவுப் புரட்சியை ஏற்படுத்திற்று இச்சங்கம். 

அவற்றுள் சில:

* சிந்தித்துச் செயலாற்றுங்கள்!,
* கடமையை நிறைவேற்றுங்கள்!,
* சிறந்த கல்விக்குச் செல்வம் தாருங்கள்!,
* மாப்பிள்ளைக்கு விலையா?,
* தனுஷ்கோடி தரும் படிப்பினை,
* சீர்கெடுக்கும் சினிமா,
* இஸ்லாமியக் கடமைகள்,
* நமது பிற்போக்கும் நல்வழிகளும்

சொற்பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும்:

      இளைய  சமுதாயத்திடம் பேச்சுத் திறமையையும் எழுத்துத் திறமையையும் வளர்ப்பதற்காக, அத்துறைகள் சார்ந்த பயிற்சிகளை அவ்வப்போது மன்றம் நடத்தி வந்துள்ளது.  இலக்கிய இன்பம், இறையச்சம், இந்தியாவில் இளைஞர் கடமை போன்ற தலைப்புகளில் சொற்பயிற்சிகளையும், எழுத்துத் திறமையை வளர்க்கக் கட்டுரைப் போட்டிகளையும் நடத்தி, இத்துறைகளில் மன்றம் புரட்சி செய்துள்ளது.

மன்ற  நூலகம்:

      அறிவுப் புரட்சிக்கு அரிய துணையாக நிற்பவை நூலகங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.  இவ்வுண்மையைக் குறிக்கோலாகக் கொண்டு, மன்றத்தின் சார்பில் ஒரு பெரிய நூலகம் அமைக்கப்பட்டது.  அதன் ஆரம்பப் பொறுப்பாளராகப் பல்லாண்டுகள் சேவை செய்த எஸ். அபுல்ஹசன் (மொத்திக்கண்) அவர்களை மறக்க முடியாது.  அவரின் தன்னலமற்ற சேவையை நினைக்கும்போது, இன்றுகூட நமக்கு வியப்பாக இருக்கின்றது!  இஸ்லாமிய நூல்களையும் சஞ்சிகைகளையும் பொது நூல்களையும் சஞ்சிகைகளையும் திரட்டுவதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வியப்பிற்குரியவையாகும்.

      எமக்குத்  தெரிந்தவரையில், 1968 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் கீழ்க்கண்டவர்கள் இடம்பெற்றிருந்தார்கள்:

தலைவர்  : அல்ஹாஜ் ஏ.எம்.கே. அப்துஷ் ஷகூர் ஆலிம்

துணைத் தலைவர் : ஏ.எம்.கே. முஹம்மது ஜகரிய்யா

பொதுச் செயலாளர் : எம்.ஏ. அப்துர்ரஹ்மான்

கூட்டுச்  செயலாளர் : எம்.ஏ. அஹ்மது அன்வர்

பொருளாளர்  : அல்ஹாஜ், ஹாபிஸ் மு.மு. முஹம்மது சாலிஹ்

      இம்மன்றத்தை நடத்துவதற்குப் பொதுமக்களிடமிருந்து  சந்தாக்கள் வசூலிக்கப்பட்டன.  அதிகப்பட்ச மாதச் சந்தா, ஒரு ரூபாய் மட்டுமே!  அரை  ரூபாய்ச் சந்தாக்களும் வசூலிக்கப்பட்டன!

      இம்மன்றம் மூடப்பட்ட பின்னர் நிகழ்ந்த வருந்தத் தக்க விஷயம், இதன் அரிய நூலகத்திற்கு ஏற்பட்ட கதி!  சில காலம், நூல்கள் ஜாவியா ரோட்டிலிருந்த TWAவிலும், இன்னும் சில காலம், ஜாவியாவிலும், பின்னர் (நாங்களெல்லாம் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு) ஒரே ஒருவரின் பொறுப்பில் புதுப்பள்ளியில் முடங்கிவிட்டதும், இன்று அவை எங்கோ காணாமல் போய்விட்டதுமான அவல நிலைதான் அது!

      அதிரை வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுவிட்ட  சமுதாய நல மன்றத்தைப்பற்றி  வாசகர்கள் - குறிப்பாக இன்றைய இளைய சமுதாயம் - அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை வரையப்பட்டது.

                                    Source: 'அதிரை கலைக்  களஞ்சியம்'

                                    கட்டுரையாக்கம்: அதிரை அஹ்மது

Read more...

Friday, 24 September 2010

கல்வித்தந்தை எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுத்தீன்

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனரும்,தாளாள‌ருமாகிய ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள் தம் இளையக் காலத்தில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியைப் பட்டுக்கோட்டை சென்று கற்று வந்தார்கள்.வெளியூர் சென்று கல்வி கற்று வருவதின் இடர்பாடுகளை இளமையிலே அனுபவித்த ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள்,அக்காலத்திலேயே எதிர்காலத்தில் இத்தகைய இடையூர்கள் நீக்கப்பட்டு இளைஞர்கள் எல்லோரும் அதிரை நகரத்திலேயே கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என உறுதி பூண்டார்கள்; அதை அவர்களின் நண்பர்களிடமும் வெளிபடுத்தினார்கள்.

பின்னர் 1949ம் ஆண்டில் காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியை  நிறுவித் தம் இளமைக்காலக் கனவை நினைவாக்கினார்,பின்னர் 1955ம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார்.

இடைக்காலத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் போற்றப்படாமையால் வருவாயின்றி வளங்குன்றி இருந்தன. முறையான நிர்வாகயின்மையால் அரசுப் பாதுகாவலர் நியமிக்கப்பெற்று இருந்தனர்.1955ம் ஆண்டு தாளாள‌ர் ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்களின் தந்தையார் முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயர் அவர்களிடம் இந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பையும் அரசுப் பாதுகாவலரிடமிருந்து பெறும்போது,ரூபாய் 900 கையிருப்பு தொகையாக ஒப்படைக்கப்பட்டது.

1954ல் கல்லூரி தொடங்கப் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.நிறுவனத்தின் அன்றைய பொருள் தொகையாகிய  ரூபாய் 900 கொண்டு கல்லூரி தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் ஆனால், எப்படியும் தொடங்கிவிட வேண்டுமென்ற உறுதியும் ஏற்பட்டது.அதிரை நகரைச் சேர்ந்த பெரு மக்கள் சிலரின் ஒத்துழைப்பு  தாளாள‌ர் எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களுக்குப் பெறும் துணையாக அமைந்திருந்தது.

1955‍‍ல் கல்லூரிக்குக் கட்டிடம் கட்டப் பொருள் திரட்டுவதற்காகக் இலங்கைப்  பயணம் மேற்கொள்ளப்பட்டது. தாளாளரின் தந்தையார் முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயர் அவர்கள் தலைமையில் நால்வர் அடங்கிய குழு இலங்கைப் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்திற்கு முன்னரே கல்லூரிக் கட்டிடத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது.அப்போது காடாக‌  காட்சியளித்த இடத்தில் கல்லூரிக் கட்டிடத்திற்கு பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அடித்தளம் அமைக்கப்பட்டது. இலங்கைப் பயணம் மூலம் திரட்டப்பட்ட தொகையே அன்றையக் கல்லூரிக் கட்டிடம் உருவாவதற்கு பெறும் துணையாக அமைந்தது.

1955 ல் கல்லூரி தொடங்கிய பிறகு,பொருள் திரட்டுவதற்கு சிங்கப்பூர் பயணமும் ஹாஜி.எம்.எம்.நெய்னா மரைக்காயார் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.இப்பயணம் மூலம் திரட்டப்பட்ட தொகையும் கல்லூரிக் கட்டிடத்திற்கே செலவிடப்பட்டது.

அன்றைய கலைஞர்களான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,டணால் தங்கவேலு,நடனமணிகள் நடராஜ்‍ சகுந்தலா போன்ற பெருங்கலைஞர்கள் நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கல்லூரி வளர்ச்சிக்கு ஒரளவு நிதி திரட்டித் தந்தார்கள்.(அவர்களின் கலை நிகழ்ச்சிக்கு பணம் கொடுக்கப்பட்டது)

நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் பல காலம் உரிய முறையில் பேணிக் காக்கப்படாமையால் சீரழிந்து கிடந்தன.கல்லூரி தொடங்குவதற்கு முந்திய ஆண்டும்,தொடங்கிய மறு ஆண்டும் வீசிய கடும்புயலில் நிறுவனத்தின் தென்னந்தொப்புகள் பேரழிவுக்கு உள்ளாயின.அப்பொழுது நிறுவனத்திற்கு வருவாய் தந்த பேரூற்று அடைப்பட்டது. மற்றொரு பக்கம் அரசின் புதிய புதிய சட்டங்களாலும் அப்பொழுது இந்நிறுவனம் மேல செல்ல முடியாமல் இருந்தது.

கல்லூரி தொடங்கி எழெட்டு ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கையும்,பயிறுவிக்கும் பாடங்களும் காலத்தின் தேவைக்கேற்ப‌  பெருகியது.பொருள்களின் தேவையும்,நிதிச் சுமைகளும் அதிகமாகி கொண்டு போனது.ஆசிரியர்களின் ஊதியம் மாதந்தோரும் பெருந்தொகை தேவைப்பட்டது.தரிசாகக் கிடந்த பரந்த நிலங்களில் தென்னை பயிர் செய்யப்பெற்று வருவாயைப் பெருக்க தாளாளர் ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள் வழி செய்தார்கள்.

1976 க்குப் பிறகு தான் ஆசிரியர்களுக்குரிய ஊதியத்தை முழுவதையும் வழங்க அரசு முன்வந்து கைகொடுத்தது.இதற்கு முன்னர் தன் சொந்த நிதியில் இருந்து தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டது.

குறைந்த வருவாயில் அதிகமான வளர்ச்சி அடைந்த நிறுவனம் நமதூர் எம்.கே.என் மதரஸசா ஆகும் இதற்கு முழுவதும் உழைத்த பெருமை ஹாஜி எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்களையே அனைத்து பெருமைகளும் சேரும்.அன்றைய காலங்களில் கிழக்கு கடற்கரைச் சாலையில் நாகை மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வரை எந்த கல்லூரியும் கிடையாது.ஆனால் நமதூரில் அன்றைய கால கட்டத்தில் கல்லூரி இருந்துள்ளது பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.

குறிப்பாக பொருளதாரத்தில் பிந்தங்கிய மாணவர்களுக்காக பயன் பெறும் தக்க இக்கல்லூரி இருந்துள்ளது.அன்றைய காலங்களில் தாளாள‌ர் ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் அவர்கள் கல்லூரிக்கு அனைத்து வேலை நாட்களிலும் வருகை தந்து அங்கு நடைபெறும் கல்லூரியில் கட்டுமான பணிகளை பார்வை இடுவது வழக்கம்.


1985 ஆம் ஆண்டில் வணிகவியல் முதுகலை வகுப்பும்,1986 ஆம் ஆண்டு வேதியியல் முதுகலை வகுப்பும்,1987 ஆம் ஆண்டு உயிரியல் முதுகலை வகுப்பும் அடுத்த வந்த ஆண்டுகளில் அனைத்து முதுகலை மற்றும் இடைநிலை, ஆராய்ச்சி வகுப்புகள் அடுத்தடுத்து துவங்கப்பெற்றது.இன்றும் வீறு நடைப் போட்டு வருகிறது.

ஹாஜி எஸ்.எம்.எஸ் ஷேக் ஜலாலுத்தீன் தாளாள‌ர் அவர்களின் நினைப்பு அனைத்தும் நிறுவன வளர்ச்சிக்கு பெருமை சேர்த்தது.அவர்களின் கனவுகள் கல்விப்பணியாக இருந்து வந்துள்ளது.

1962 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் ஊராட்சி மன்றதலைவராகவும்,(இப்போது பேரூராச்சி) தமிழ்நாடு வக்ப் வாரியம்,ஒய்வு பெற்ற நீதிபதி ஜனாப் ஷர்ப்புதீன் சாகிப் அவர்கள் தலைமையில் இயங்கிய பொழுது தஞ்சாவூர் மாவட்ட சார்பாக வக்ப் வாரிய உறுப்பினராக இருந்து நல்ல முறையில் செயல் ஆற்றி வந்தார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடனும்,நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களுடனும்,மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களுடனும் இதுபோன்ற பெருந்தலைவர்களுடன் மிகவும் நட்புடையவர் தாளாளர் எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்கள்.

எஸ்.எம்.எஸ்.ஷேக் ஜலாலுதீன் அவர்கள் கல்லூரி அமைத்து சிறப்பாக நடத்தி வருவதை முன்னாள் காங்கிரஸ் தலைவராகிய காலம் சென்ற கிருஷ்ணசாமி வாண்டையார் கூறியதாக காங்கிரஸ்காராரான கடையநல்லூர் முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.அப்துல் மஜீத் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தம்பிக்கோட்டை சுந்தரேசத்தேவர் வாண்டையார்,பட்டுக்கோட்டை வி.என்.எஸ் என்ற வி.என். சுவாமிநாதன்Ex MP(இன்றைய பட்டுக்கோட்டை NR.ரங்கராஜன்MLA வின் மாமா) போன்றவர்களின் தாளாளரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள். மட்டுமல்ல தஞ்சை மாவட்ட காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர்ருங்கூட!

இவர் காலத்தில் தான் பட்டுக்கோட்டையில் காதிர் முகைதீன்(மணி கூண்டு பள்ளிவாசல்) என்ற பெரிய பள்ளி வாசல் ஒன்று பட்டுக்கோட்டை நகருக்கு பெருமைசேர்க்கும் வகையில் முதல் பள்ளி வாசல்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்காலத்தில் தான் உயர்நிலைப்பள்ளியாக இருந்த காதிர் முகைதீன் பெண்கள்,ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அதேபோல் ஷாதுலிய்யா தொழிற்பயிற்சி கல்வி நிறுவனமும்,ஷாதுலிய்யா நர்சரி பாலர் பள்ளியும் துவங்கினார்கள்.

இப்பொழுது இக்கல்லூரிகளும்,பள்ளிகளும் பல சாதனைகள் படைத்து வருவதை நாம் எல்லாம் அறிவோம்.இந்நிறுவனத்திற்கு பாடுபட்டு வந்த கல்வித்தந்தை அவர்கள் 2.10.1986 வியாழக்கிழமை அன்று தாளாளர் அவர்கள்
இவ்வுலக வாழ்வைத்துறந்தார்கள்.3.10.1986 வெள்ளிக் கிழமை மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பிறகு தக்வா பள்ளி கப்ரஸ்தானில் மர்ஹும்.ஹாஜி காதிர் முகைதீன், மர்ஹும்  முஹம்மது அபுல் ஹசன்,தாளாளர் அவர்களின் தந்தையாரின் அடக்கவிடத்தருகில் அடக்கம் செய்தார்கள்.

தொடர்புடைய முந்தைய கட்டுரை

முந்திய சில கட்டுரைகளையும் குறிப்புகளையும் தழுவி எழுதியது:
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்.

Read more...

Wednesday, 22 September 2010

வரலாற்றில் ஒரு வள்ளல் : காதிர் முகைதீன் மரைக்காயர்

வரலாற்றில்  ஒரு வள்ளல்  காதிர் முகைதீன் மரைக்காயர்

      கொடைத்  தன்மையில் சிறந்தது, கல்விக்  கொடையாகும்.  இஸ்லாத்தின்  நான்காம் கலீஃபாவான ஹளரத்  அலீ (ரலி) அவர்கள், "எனக்கு ஓர் எழுத்தைக் கற்றுத்  தந்தவருக்கு நான் அடிமையாவேன்" என்று கூறிய முத்தான  வரிகள், கல்வியின் சிறப்பைப்  பறை சாற்றும்.  இஸ்லாத்தின் இது போன்ற மகத்தான நற்போதனைகளை மனத்துட் கொண்டு, கல்விக் கொடைதான் சிறந்ததென்றுணர்ந்து பல கல்வி நிறுவனங்கள் உருவாவதற்குக் காரணமான வரலாற்று நாயகர் ஜனாப் காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களாவார்கள்.

      அதிராம்பட்டினத்தில் 1835 ஆம் ஆண்டில் பிறந்து, பெருந்தன வணிகராகிப் பொருளீட்டித் தாம் திரட்டிய பொருளைக் கல்விக்கென்றே கொடையாக வழங்கிப் பெருமை பெற்றவர், வள்ளல் காதிர் முகைதீன் அவர்களாவார்.  தாம் மட்டுமன்றித் தம் உடன்பிறந்தோரையும் இக்கொடைக்குத் துணை நிற்கச் செய்து, 1901 ஆம் ஆண்டில் ரூபாய் 85 ஆயிரம் மதிப்புள்ள நன்செய், புன்செய் நிலங்களைக் கல்விக்காக அற்பணித்தார்கள் இந்த வள்ளல் பெருமான்.

      அன்று தொடங்கப் பெற்ற 'எம்.கே.என். ட்ரஸ்ட்' என்ற அறக்கட்டளை, இன்று வேர் விட்டுக் கிளைகளைப்  பரப்பி, காதிர் முகைதீன் கல்வி  நிறுவனங்களாகப் பரிணமிக்கின்றன.  நூறாண்டுகளுக்கு முன் - 1901 இல் - 'அல்மத்ரசத்துஸ் ஸலாஹிய்யா' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கல்விப் பணி, அதன் பின்னர் 1949 இல் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி என்றும், 1955 இல் காதிர் முகைதீன் கல்லூரி என்றும், 1982 இல் காதிர் முகைதீன் மகளிர் மேல்நிலைப் பள்ளி என்றும் கல்விக் கிளைகளைப் பரப்பி, அதிரையின் புகழைப் பரப்புகின்றது என்றால், இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவான அந்தக் கொடை வள்ளலை நாம் எப்படி மறக்க முடியும்?

      இன்றுவரை  அதிரையில் இருக்கும் பள்ளிவாயில்கள் பலவற்றுக்கு மின் கட்டணத்தைச்  செலுத்தும் பொறுப்பை நிறுத்தாமல்  செய்து வருவதும் இந்தக் காதிர் முகைதீன் வள்ளல் நிறுவிய எம்.கே.என். ட்ரஸ்ட்டுதான் என்றால் மிகையாகாது.

      கல்விக் கொடை வள்ளலாக வாழ்வாங்கு வாழ்ந்த காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்கள், 1905 ஆம்  ஆண்டு ஜூன் 20 ஆம் நாளன்று  இவ்வுலகில் தம் வாழ்வை முடித்துக்கொண்டு, மறுவுலகிற்கான பெரும் பேறுகளைப் பெறச் சென்றுள்ளார்கள்.

                                       Source: அதிரை கலைக் களஞ்சியம்

* படத்தில் ஏழாவது நபராக இருப்பவர் கம்பெனியப்பா என்ற சி.மு முகம்மது சேக்காதியார் அவர்கள்.

டிரஸ்டின் குடும்பம் அல்லாத வெளி உறுப்பினர்களில், கம்பெனியப்பாவும் ஒருவராக நியமானம் செய்யப்பட்டிருந்தார்கள்.

இன்னொருவரின் பெயர் தெரியவில்லை; அறிந்தவர் பின்னூட்டமிடவும்!

Read more...

Saturday, 18 September 2010

முத்துப்பேட்டையின் முத்து, அதிரையின் சொத்து!



முத்துப்பேட்டையின்  முத்து, அதிரையின்  சொத்து!

      
அன்றையத்  தஞ்சாவூர் மாவட்டம், இன்றையத் திருவாரூர் மாவட்டத்து முத்துப்பேட்டையின் வீதியொன்றில் பெரியார் ஒருவர் சென்றுகொண்டிருந்தார்.  அவருக்குச் சற்றே பின்னால் இன்னொருவர் போய்க்கொண்டிருந்தார்.  பின்னால் நடந்தவருக்கு முன்னால் நடந்தவரின் ஒரு செயல் வியப்பைக் கொடுத்தது.  அப்படி அவர் என்னதான் செய்தார்?  வானத்தை நோக்குவதும், பின்னர் தன் கையில் வைத்திருந்த கடிகாரத்தைச் சரி செய்வதுமாகச் சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெரியார்!

      "தாங்கள்  என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" கேட்டார் பின்னவர்.

      "அதுவா?  வானத்தில் உள்ள சூரியனைப்  பார்த்து, என் கடிகாரத்தைச் சரி செய்துகொள்கிறேன்" என்றார் முன்னவர்.

      'சூரியனைப்  பார்த்து நேரமறிந்துகொள்ளும்  மனிதரும் உண்டா?' நெற்றியின்  சதைப் பிடிப்பில் எழுந்த சுருக்கம் பின்னவரை விந்தை கொள்ளச் செய்தது.  அவர் அப்போது முத்துப்பேட்டை அவ்லியாவை 'ஜியாரத்' செய்யக் கேரளாவிலிருந்து வந்த மலையாளி.  

      முன்னவரிடம் நெருங்கி, அதன் விளக்கம் பற்றிக்  கேட்டபொது, "அருகில் உள்ள அதிராம்பட்டினத்துக்கு  வாருங்கள் படித்துத் தருகிறேன்" என்ற பதில் மட்டுமே வந்தது.  கேரளத்துக்காரரும் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு, அதிரைக்கு வந்து, முன்னவர் சொன்ன 'ரஹ்மானியா மத்ரஸா' என்ற கல்விக்கூடத்திற்குச் சென்று, 'ஷைகுனா' என்ற அந்த முன்னவரிடம் 'இல்முல் ஃபலக்' எனும் வானியலைக் கற்றுத் தன் ஊருக்குத் திரும்பினார்.  

      வானியலைக் கற்றுக்கொடுத்த அந்த வளமார் அறிஞர்தான், அல்லாமா அஷ்ஷெய்கு அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை ஆலிம் ஆவார்கள்.  வானியலைக் கற்ற மலையாளி, குஞ்ஞஹ்மது ஹாஜி என்பவராவார்.

       முத்துப்பேட்டையில் ஹிஜ்ரி 1275 ‏‏‏இல் (கி.பி.1856) பிறந்து, மார்க்கக் கல்வி கற்றுச் சிறந்து நின்ற ஷெய்குனா அவர்கள் மூலம் அவ்வூர் மக்கள் சரியாகக் கல்விப் பயன் பெற்றுக்கொள்ளாத காரணத்தால், அருகிலுள்ள அதிராம்பட்டினத்தில் குடியேறினார்கள் என்பது பிரபலமான செவிவழிச் செய்தியாகும்.

      இளமையிலேயே  நம் ஷெய்குனா அவர்களுக்குக்  கல்வித் தாகம் மிகைத்திருந்ததால், புனித மக்காவுக்குச் சென்று, மேற்கல்வி கற்றார்கள்.  அவர்கள் கீழ்க்கண்ட மார்க்க மேதைகளிடம் அங்குக் கல்வி பயின்றுள்ளார்கள்:

    * மக்காவின் முஃப்தி, அஸ்ஸெய்யித் அஹ்மது இப்னு ஜைனீ தஹ்லான் (ரஹ்)
    * ஷைகுல் இஸ்லாம், முஹம்மது அப்துல் காதிர் அல்யமனி (ரஹ்)
    * அஷ்ஷெய்க் ஹுஸைன் இப்னு முஹம்மத் அல்ஹபஷீ (ரஹ்)
    * அஸ்ஸெய்யித் அலவீ அஸ்ஸக்காஃப் (ரஹ்).




இவர்களன்றியும், நம் ஷெய்குனா அவர்கள் இன்னும்  இறைநேசச் செல்வர்கள் பலரிடமும்  கல்வி கற்றதோடு, மதீனா  முனவ்வராவிலும் கல்வி கற்கும்  வாய்ப்பினையும் பெற்றார்கள்.

      அருங்கல்வி  கற்று அறிஞராகத் திகழ்ந்த ஷெய்குனா அவர்கள் சில ஆண்டுகள் மக்காவில் மார்க்கக் கல்வியைக் கற்பிக்கும் ஆசானாகவும் பணி புரிந்துள்ளார்கள்.  பின்னர், தம் ஆசான்களின் அனுமதியைப் பெற்று, மக்காவிலேயே திருமணமும் செய்துகொண்டார்கள்!

      ஊரிலிருந்த  தாய்க்கோ, ஒரு வகையில்  மகிழ்ச்சி இருந்தாலும், எங்கே தன் மகன் தன்னை  விட்டுப் பிரிந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில், (இது நம் நாட்டுத் தாய்மார்களின் பலவீனம்) மகனை எப்படியாவது மக்காவிலிருந்து தருவித்துவிட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.  அதனால், அந்த நாட்களில் ஹஜ்ஜுக்குப் போன ஹாஜிகள் பலரிடமும் சொல்லி, எப்படியாவது தன் மகனை அழைத்து வரும்படி ஏற்பாடு செய்தார் அந்தத் தாய்.

      அதிரையிலிருந்து மட்டுமல்லாமல், அண்டை நாடான  இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்குச்  சென்றவர்கள் மூலமும் அந்தத் தாய் கடிதங்கள் கொடுத்தனுப்பினார்!  அவர்களுள், இலங்கை அலுத்காமம் தர்காடவுனைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயீல் ஹாஜியார் என்பவரும்  ஒருவர்.  ஹாஜியார் மக்காவில் ஷைகு ஜைனீ தஹ்லான் அவர்களின் பாட வகுப்பில் நம் ஷைகுனாவைப் பார்த்துவிட்டார்!  பாடம் முடிந்த பின்னர், அதிராம்பட்டினத்திலிருந்து தமக்கு வந்திருந்த கடிதத்தை அவ்வாசிரியரிடம் கொடுத்தார்.  நிலைமையைப் புரிந்துகொண்ட ஷைகு தஹ்லான் அவர்களும், தம் மாணவரை அழைத்து, அவருடைய தாயின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்கள்.

      தாயின்  கட்டளையையும் ஆசிரியரின் அறிவுறையையும் மதித்து, வேறு வழியின்றி, மக்கத்து மனைவியைத் 'தலாக்' செய்துவிட்டு, அதிராம்பட்டினத்திற்குப் புறப்பட்டார்கள்.  ஊருக்கு வந்து சேர்ந்த நம் ஷெய்குனாவுக்குப் பெற்றோர் முஹம்மது மர்யம் என்ற மங்கை நல்லாளை மணமுடித்து வைத்தார்கள்.  அந்த இல்வாழ்க்கை மூலம் ஏழு ஆண் மக்களும் மூன்று பெண் மக்களும் பிறந்தார்கள்.  சில ஆண்டுகளில் அம்முதல் மனைவி இறந்துவிடவே, இரண்டாவதாக முஹம்மது சாரா என்ற பெண்ணை ஷெய்குனா மணம் செய்தார்கள்.  அத்திருமணத்தின் மூலம், இரண்டு ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் பிறந்தனர்.  

      இலங்கையில் சில ஆண்டுகள் வணிகத்தில் ஈடுபட்ட பின்னர், ஷெய்குனா அவர்கள் தமக்குப் பிடித்தமான கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார்கள்.  சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் சில ஆண்டுகள் கல்விப் பணியை மேற்கொண்டார்கள்.  பின்னர் சொந்த ஊரும் வந்த ஊருமான அதிராம்பட்டினத்திற்கு வந்து, 'அல் மத்ரஸத்துர் ரஹ்மானிய்யா' என்ற பெயரில், அவர்களின் வீட்டுத் திண்ணையிலேயே ஒரு கல்விக் கூடத்தை அமைத்தார்கள்.  பின்னர், அதிரையின் பெருந்தனக்காரரும் வள்ளலுமான மீ. மு. முஹம்மது முஹைதீன் அப்துல் காதிர் மரைக்காயர் அவர்களின் பொருளுதவியால், தாம் தொடங்கிய மத்ரஸாவைத் தனிக் கட்டடத்தில் தொடங்கி மார்க்கப் பணி செய்துவந்தார்கள்

     ஷெய்குனா (ரஹ்) அவர்களின் மாணவர்களுள்  குறிப்பிடத் தக்கவர்கள்: 

(1) மதுரைத் தமிழ்ச் சங்க உறுப்பினரும் சிறந்த மார்க்க  அறிஞராகவும் விளங்கிய கீழக்கரை செய்யிது முஹம்மது ஆலிம்  புலவர், 

(2) சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியின் பின்னாள் தலைமை ஆசிரியராக விளங்கிய முஹம்மது மதார் ஆலிம், 

(3) அதே கல்லூரியின் இன்னொரு ஆசிரியராக இருந்த முஹிய்யித்தீன் ஆலிம்,  

(4) அதிராம்பட்டினத்து மாணவர்களுள் ஒருவரான முஹம்மது பாக்கிர் ஆலிம் (அதிரை வரலாற்றுத் தொகுப்பாசிரியரின் தந்தையார்) முதலானோர்.

     
(நம்  ஷெய்குனா (ரஹ்) அவர்களின்  புகழ் அக்காலத்தில் தமிழகத்தைத்  தாண்டி, கேரளா, இலங்கை ஆகிய  பகுதிகளிலும் பரவியிருந்ததால்,  அங்கிருந்தெல்லாம் அவர்களிடம்  கல்வி பயில மாணவர்கள்  வருவர்.  பின்னாளில் வேலூர்  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்  அரபிக் கல்லூரியின் முதல்வராயிருந்த ஷெய்கு ஹஸன் முஸ்லியார் அவர்கள் நம் ஷெய்குனாவிடம் 'புகாரி ஷரீஃப்' பாடம் பயில அதிரைக்கு வந்தார்கள்.  

அப்போது ஷெய்குனா அவர்கள் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தார்கள்.  தம்மை நாடி வந்த மாணவருக்குப் பாடம் ஓதிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்திய ஷெய்குனா அவர்கள், சிறிது நேரத்தில் தம்மைத் தேற்றிக்கொண்டு, தம் தலைமாணவர்களுள் ஒருவரான பாக்கிர் ஆலிம்சாஹிப் அவர்களிடமே 'புகாரி ஷரீஃப்' கித்தாபை ஓதிக்கொள்ளுமாறு கூறினார்கள்.  

பிற்காலத்தில் தாம் 'பாக்கியாத்' அரபிக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று, தாம் 'புகாரி ஷரீஃப்' நூலைப் பயிற்றுவித்த மாணவர்களுக்கு, நபி (ஸல்) அவர்கள் முதல் தம்வரை ஹதீஸ்கள் வந்து சேர்ந்த சங்கிலித் தொடரைக் குறிப்பிட்டுத் தனிப் பட்டயம் (டிப்லொமா) ஒன்றையும் ஷெய்கு ஹஸன் மவ்லானா அவர்கள் வழங்கி வந்தார்கள்.  அதில், ஷெய்குனா அவர்களின் பெயரும் பாக்கிர் ஆலிம்சாஹிபின் பெயரும் இன்றும் இடம் பெற்றிருக்கின்றன.)

      ஷெய்குனா (ரஹ்) அவர்களின் காலத்தில்  தமிழகத்துப் பொது மக்களிடையே பள்ளிப் படிப்பில் குறைபாடு இருந்தது.  ஆனால், அரபியை அனைவரும் சரளமாக வாசிப்பார்கள்.  அதனால், பொதுமக்கள் பயன் பெறுவதற்காக, 'கிதாபுல் ஹஜ்' என்ற பெயரில் அரபுத் தமிழ் நூலொன்றை இயற்றி, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற ஆவல் கொண்டவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்த்தார்கள்.

      இந்த  அறிவுலகச் செம்மல் ஷெய்குனா (ரஹ்) அவர்கள் தமது 89 வது  வயதில், ஹிஜ்ரி 1364, சஃபர் 15 அன்று (1945 ஜனவரி 29) இறப்பெய்தி, மரைக்கா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) 

                                       Source: 'அதிரை கலைக் களஞ்சியம்'

Read more...

Tuesday, 7 September 2010

அதிரையின் சில முக்கிய நிகழ்வுகள்


கடந்த  2002 ஆம் ஆண்டில் 'அதிரை  கலைக் களஞ்சியம்' என்ற  பெயரில் சிறப்பு மலர்  ஒன்று வெளியாயிற்று.  இதனைத்  தொகுத்தளித்தவர், அல்ஹாஜ்  M.A. அப்துர்ரஹ்மான் (மர்ஹூம்)  அவர்கள். 

இதில் பாதிக்கு  மேல் தொகுப்பாசிரியரின்  குடும்பத்தவர்கள் பற்றிய  செய்திகள்தாம் (சுயபுராணம்) இடம்பெற்றுள்ளன.  முக்கியமான சில தகவல்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. 

பெரிய அளவில் விளம்பரங்களும் நன்கொடைகளும் பெறப்பட்டு, ஒரு சிறப்பு மலராக (கலைக் களஞ்சியம் அன்று) வெளியிடப்பட்டுள்ளது.  இருப்பினும், இதில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அதிரை பற்றிச் சில அரிய தகவல்களும் இல்லாமலில்லை.  எனவே, பொறுக்கு மணிகளாகச் சில தகவல்களை இதிலிருந்து தேர்ந்தெடுத்து, 'அதிரை வரலாறு' திரட்டியில் தருகின்றோம்.) -   அதிரை அஹ்மது





அதிரையின் சில முக்கிய  நிகழ்வுகள்:


* அதிராம்பட்டினம் புகைவண்டி நிலையம் 1-4-1938 முதல்  இயங்கத் தொடங்கியது.
    

* இதே நாளன்றுதான் அதிரையின் வீதிகளில் மின்சார விளக்குகள் எரியத் தொடங்கின.
    

* 1953 முதல் அதிரைப் புகைவண்டி நிலையத்தில் மின்சார வசதி செய்யப்பட்டது.
    

* அதிரையின் 'ஜாவியா'வில் 'புகாரி ஷரீஃப்' சிறப்பு நிகழ்ச்சி 1942 ஆம் ஆண்டு முதல் தொடக்கி வைக்கப்பட்டது.
    

* அதிரையில் 31-11-1952 பகலில் ஒரு புயலும், 31-11-1955 இரவில் ஒரு புயலும், 22-12-1964 மற்றும் 24-12-1964 அன்று ஒரு பெரும்புயலும் அடித்து, அதிரையின் பொருளாதாரத்தையே அடியோடு மாற்றிப் போட்டுவிட்டது!  (இதனால்தானோ என்னவோ, நவம்பர், டிசம்பர் மாதங்கள் அதிரைக்கு ஆபத்தான மாதங்களாகும் என்று கருதப்படுகின்றன.)
    

* 25-6-1949 அன்று 'காயிதெ மில்லத்' இஸ்மாயீல் சாஹிப் மர்ஹூம் அவர்களால் 'காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி' திறந்து வைக்கப்பட்டது.
    

* 5-7-1955 அன்று, அதே 'காயிதெ மில்லத்' அவர்களால் காதிர் முகைதீன் கல்லூரியும் தொடங்கி வைக்கப்பட்டது.
    

* முதன்முதலாக அதிரையில் (நிலக்கரியில் ஓடும்) பேருந்து வசதி 1942 ஆம் ஆண்டு முதல் தொடங்கிற்று.
    

* 30-7-1939 அன்று அதிரையில் இஸ்லாமிய மாநாடு நடந்தது.  அதில் புதுக்கோட்டை திவான் கலீபுல்லா அவர்களின் தலைமையில்,  அறிஞர் அண்ணா, ஈ.வெ.ரா. பெரியார், 'அஞ்சா நெஞ்சன்' பட்டுக்கோட்டை அழகிரி, அதிரை ஷெய்குனா ஆலிம், மஹ்தூம் ஆலிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
    

* இங்குள்ள அரசு மருத்துவ மனை 11-4-1954 இல் அப்போதையத் தமிழக அமைச்சர் பக்தவத்சலம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
    

* 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' 1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  இன்னும் செயபட்டு வருகின்றது.
   

* 'சமுதாய நல மன்றம்' 1955 ஆம் ஆண்டில் தொடக்கம் பெற்றது.  

(இம்மன்றத்தின் செயல்பாடுகள் பற்றித் தனிக் கட்டுரை இடம்பெறும்.)
Enhanced by Zemanta

Read more...

Friday, 3 September 2010

அதிரை மக்களின் திரவியம் தேடல்: அதிரை ஹிதாயத்

"திரைகடலோடியும் திரவியம் தேடு"  என்ற நமது தமிழ் முதுமொழிக்கிணங்க பொருளீட்ட உலகின் நாலாப் பக்க நாடுகளிலும் நம் மக்கள் பரவி உழைக்கின்றனர்.

யுகயுகமாக கடல் கடந்து வியாபாரம்,வேலை செய்து பழக்கப்பட்டு போனவர்கள் இவர்கள்.

பல நூற்றாண்டு காலமாக இலங்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டுடிருந்தனர்.

இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடையே உள்ள தூர அளவு இருபத்தேழு (27) மைல்கள் மட்டுமே! இலங்கையை வேற்று நாடாக ஒருநாளும் அவர்கள் நினைத்ததில்லை;அடுத்த ஊராகவே உளப்பூர்வமாக எண்ணினர்.

நினைத்த மாத்திரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அதிராம்பட்டினத்திற்கும் நெத்து தேங்காய்,நாறப்பாக்கு,ஒடியங்கி
ழங்கு,பினாட்டு,தேயிலை போன்றவையும் இங்கிருந்து பசுமாடு, தவிடு,வண்டிமாடுகள்,காப்பிக்கொட்டை போன்றவற்றையும் ஜாஃப்னாவிற்கு (யாழ்ப்பாணம்) கொண்டு சென்று விற்பனை செய்தனர். இதில் நல்ல லாபம் ஈட்டினர்.

இலங்கையின் பலப் பகுதிகளிலும் கொப்பரை மண்டி, மளிகை கடை போன்ற நிறுவனங்களை ஸ்தாபித்து நல்ல முறையில் நடத்தி வந்தனர்.அங்கு வேலை செய்வதற்கு அதிரையிலிருந்தே ஆட்களையும் அழைத்துச் சென்றனர்.

பொருளீட்டுவதுடன் நின்றுவிடாமல் பல சமூக காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்(அல்லாஹ் அவர்களுக்கு நிரம்பக் கூலிகளை அளிப்பானாக!) இதன் காரணமாக அனைத்து இன மக்களின் பாசத்தையும் மரியாதையையும் பெற்றிருந்தனர்.

அங்குள்ள சோனக(முஸ்லிம்) பெண்களை முறைப்படி திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஊர்வரும்போது அவர்களை அதிரை பட்டினத்திற்கு அழைத்து வருவதும் அதிரையிலுள்ள மனைவி மக்களை அழைத்துப் போவதுமான நெருங்கிய உறவு முறையினை ஏற்படுத்தி இருந்தனர்.இதன் காரணமாக இன்றும் அந்த உறவு முறை பேணி காக்கப்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிலையில், 1944ல் ஓர் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்தது. அதன்படி 'இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்'. என்பதே அந்த சட்டத்தின் சாரம்சம். இதனால், வேறு வழியின்றி பெரும்பாலானவர்கள் இலங்கை மண்ணை விட்டும் சோகமே உருவாக வெளியேறினர்.

இலங்கை ‍‍‍அதிராம்பட்டினம் தொடர்பு காலத்தை பொற்காலம் என்று அழைக்கலாம்!!!

நாடு திரும்பிவிட்டனர்.....வருமானமும் இல்லை. உள்நாட்டில் வியாபாரம் செய்ய ஒரு வழியும் தெரியவில்லை. ஏனெனில்,அயல் நாடான இலங்கையை அறிந்த அளவுக்குக் கூட அயல் ஊரை அறிந்த்திருக்கவில்லை. என்ற போதும் சிலர் வைராக்கியத்துடன் தமிழக தலைநகர் சென்னை துறைமுகப் பகுதியில் உள்ள மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெரு, லிங்கிச் செட்டித் தெரு, தம்புச் செட்டித் தெரு போன்ற பகுதிகளில் தங்கி பலையகாட் கைலியை வியாபாரம் செய்யலாயினர்.

சிலர் மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்றனர். பலருக்கு, பல காலம் வறுமையிலும் பஞ்சத்திலுமே காலம் கடந்தது.

பின்பு ஸவூதி, துபை,குவைத், பஹ்றைன், சிங்கப்பூர்,உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றனர். வறுமை என்ற நிலைமாறி தன்னிறைவு என்ற நிலையை அடைந்தனர். புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

சமீப காலமாக, அதாவது 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா, இலண்டன், ஆஸ்திரேலியா,ஜப்பான்,ஃபிரான்ஸ்,டென்மார்க்,ஜெர்மன்,கொரியா,இத்தாலி,ஸைப்ரஸ் போன்ற வளர்ந்த நாடுகளிலும் சென்று குடியேறினர்.

இதில் சில நாடுகளில் சொந்த வியாபாரமும் செய்கின்றனர். ஓரிருவர் அந்நாடுகளில் திருமணத்தையும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்ற போதும் ஊரையும்,நமது கலாச்சாரத்தையும் மறப்பதில்லை என்பது மிக்க மகிழ்ச்சி தரும் செய்தி!

இறைவன் நாடினால்...!
இன்று விஞ்ஞானம் அடைந்துள்ள வியக்கத்தக்க வளர்ச்சிகள் நம்மை வியப்பிலாழ்த்துன்றது.

விரைந்து பாயும் ஏவுகணைகளைச் செலுத்தி மனிதன் விண்ணில் வலம் வருகின்றான். நிலவிலும் கால் பதித்துவிட்டான். பிற கோள்களுக்குச் செல்லும் முயற்சிகளும் நடை பெற்று வருகின்றன.

இந்த அத்தனை முயற்சிகளும் மனிதன் அங்கு வாழமுடியுமா என்பதற்கே. இதில் வெற்றி கிடைத்து அங்கும் செல்ல முடியுமென்றால் நாமும் செல்வோம்!


நமது மக்களின் பூர்வீக தொழில்கள்!

* கப்பல் மூலம் வியாபாரம்

* உப்பு உற்பத்தி

* தேங்காய்


* தென்னை சார்ந்த தொழில்கள்

* அரிசி மற்றும் அது சார்ந்த தொழில்கள்

* நவரத்தின கற்கள்

* எண்ணெய்

* கைலி


சமீப கால தொழில்கள்

* பதிப்பகம்

* புத்தக விற்பனையகம்

* பிரிண்டிங்


* விளம்பர ஏஜென்ஸி

* மார்க்கெட்டிங்

* ஜெனரல் ஸ்டோர்ஸ்

* ஜவுளி

* டிராவல் ஏஜென்ஸி

* ரியல் எஸ்டேட்

* வெளிநாட்டு பொருட்கள் விற்பனையகம்

* மூக்கு பொடி(SUNFF)

* மருந்து வியாபாரம்


ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Read more...
ங்கு பதியப்படும் வரலாற்று தகவல்களில் மாற்று கருத்து இருப்பின் பின்னூட்டமாக எழுதவும். "அதிரைவரலாறு" நூல்வடிவம் பெறும்போது அவற்றையும் சேர்த்துக்கொள்ளப்படும்.

எவ்வழியே

முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.எனவே,இந்த (அதிரைவரலாறு) தளத்திலிருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ காப்பி பேஸ்ட் செய்யக்கூடாது. தகவலுக்காக சுட்டி வழங்கலாம்.

  © Blogger template AutumnFall by Ourblogtemplates.com 2008

Back to TOP